அவுஸ்திரேலிய வர்ணம்பூல் முதல்வருடன் கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் சந்திப்பு; இரட்டை நகர ஒப்பந்தம் கைச்சாத்து

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகரை, தனது சகோதர நகராக இணைத்து, அபிவிருத்தி செய்வதற்கு அவுஸ்திரேலியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றான வர்ணம்பூல் மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி .எம்.றகீப் அவர்கள், வர்ணம்பூல் மாநகர முதல்வர் டொனி ஹெர்பட் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (27) வர்ணம்பூல் மாநகராட்சி மன்ற செயலகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்து நடாத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு முதல்வர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.

முன்னாள் கிழக்கு மாகாண சபைக் குழுத்தலைவர் கலாநிதி .எம்.ஜெமீல் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கல்முனை மாநகர சபையானது திண்மக்கழிவகற்றல் சேவை மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் எதிர்நோக்கி வருகின்ற சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து கல்முனை முதல்வர் .எம்.றகீப் அவர்கள், வர்ணம்பூல் முதல்வருக்கு விரிவாக எடுத்துக் கூறியிருந்தார்.

அதேவேளை சுற்றுலா, விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகள் மூலம் பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேற்றமடைந்து, தன்னிறைவு கண்டுள்ள வர்ணம்பூல் பிராந்தியத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் பொது வசதிகளும் பாரிய வளர்ச்சியடைந்துள்ளன என்று குறிப்பிட்ட வர்ணம்பூல் மாநகர முதல்வர் டொனி ஹெர்பட், இங்கு ஆதன வரி, திண்மக்கழிவகற்றல் வரி உள்ளிட்ட வரிகளை மக்கள் மாதாந்தம் செலுத்தி வருகின்றனர் என்றும் இதனால் வர்ணம்பூல் மாநகராட்சி நிர்வாகம், மிகைத்த நிதியைக் கொண்டு, சிறப்பான சேவைகளை முன்னெடுத்து வருகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இரு நகரங்களினதும் சிறப்பம்சங்கள் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்ட முதல்வர்கள், இரு நகரங்களும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டனர். இதன்போது சகோதர நகர (Sister City) இணைப்பு தொடர்பான கல்முனை முதல்வரின் முன்மொழிவுக்கு வர்ணம்பூல் முதல்வர் வரவேற்புத் தெரிவித்தார்.

வர்ணம்பூல் நகரமானது ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலுள்ள நான்கு முன்னேறிய நகரங்களை தனது சகோதர நகரங்களாக இணைத்துள்ளதாகக் குறிப்பிட்ட வர்ணம்பூல் மாநகர முதல்வர், ஐந்தாவது சகோதர நகரமாக ஸ்ரீலங்காவின் கல்முனை நகரை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கும் சுனாமி அனர்த்தத்தினால் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு, தேக்கமடைந்த நிலையில், மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக காணப்படுகின்ற இடிபாடுகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கும் கல்முனையை பசுமை நகராக மாற்றுவதற்கும் உதவுவதாக வர்ணம்பூல் மாநகர முதல்வர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக தமது சார்பான தூதுக்குழுவொன்றை விரைவில் கல்முனைக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பொருளாதார வளமிக்க, எழில்மிகு நகரான வர்ணம்பூல், தனது சகோதர நகராக கல்முனையை இணைப்பதற்கு முன்வந்தமைக்காக அதன் முதல்வர் டொனி ஹெர்பட் மற்றும் கலாநிதி .எம்.ஜெமீல் ஆகியோருக்கு கல்முனை மாநகர முதல்வர் .எம்.றகீப் .எம்.றகீப் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் இறுதியில் கல்முனை மாநகர முதல்வர் .எம்.றகீப் அவர்களுக்கு வர்ணம்பூல் மாநகர முதல்வர் டொனி ஹெர்பட் அவர்கள் நினைவுப் பரிசு ஒன்றை வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s