கோட்டாபய ராஜபக்ஷ

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், யார் இந்த கோட்டாபய ராஜபக்ஷ என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய எனும் பகுதியில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் தேதி அரசியல்வாதியான டி.ஏ.ராஜபகஷ தம்பதியினருக்கு நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் சகோதரனாக கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.

தனது ஆரம்ப கல்வியை கொழும்பு ஆனந்த கல்லூரியில் கோட்டாபய ராஜபக்ஷ பயின்றுள்ளார்.

1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கேடட் அதிகாரியாக இலங்கை ராணுவத்தில் இணைந்து, தனது ராணுவ பயணத்தை கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ஷ 1972ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி இலங்கை ராணுவத்தின் இரண்டாம் நிலை லெப்டினனாக பதவிவுயர்த்தப்பட்டுள்ளார். 

இலங்கை ராணுவத்தின் ஸ்ரீலங்கா சிங்ஹ ரெஜிமென்ட், ரஜரட்ட ரயிபைல்ஸ் ஆகிய படைப்பிரிவுகளில் கடமையாற்றிய அவர், 1983ஆம் ஆண்டு ராணுவத்தின் கஜபா ரெஜிமென்ட்டில் இணைந்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ, தனது 20ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் இலங்கை ராணுவத்திற்காக ஆற்றிய சேவைக்காக அந்த காலப் பகுதியில் ஆட்சி பீடத்தில் இருந்த மூன்று ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன், ரணசிங்க பிரேமதாஸ மற்றும் டி.பி.விஜேதுங்க ஆகியோரிடம் விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலப் பகுதியில் இலங்கை ராணுவத்தில் முன்னின்று கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுள்ளார். 

அதனைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகளில் கட்டளை தளபதியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார். 

இந்த நிலையில், பாதுகாப்புத் துறையில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். இலங்கை ராணுவத்திலிருந்து 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, அந்த காலப் பகுதியிலேயே அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க பிரஜை உரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கை மற்றும் அமெரிககா என்று இரட்டை பிரஜை உரிமையை பெற்றவராக கோட்டாபய ராஜபக்ஸ திகழ்ந்தார்.

தனது சகோதரனான மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, அமெரிக்க பிரஜை உரிமையை பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை நோக்கி மீண்டும் வருகைத் தந்தார். 

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ, அந்த ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார். உள்நாட்டு யுத்தம் வலுப் பெற்றிருந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படுகின்றார். பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்யும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. 

கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த வாகன தொடரணி மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்ஷ உயிர் தப்பியிருந்த பின்னணியில், அந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருந்ததுடன், 14 பேர் காயமடைந்திருந்தனர். 

அதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்ய கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரயத்தனத்தை வழங்கியிருந்தார். 

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s