கொழும்பு: கடந்த 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மிக குறுகிய காலத்துக்குள்ளேயே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி..டி.) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.   21/4 தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன்  நேரடி தொடர்புள்ள பிரதான சந்தேக நபர்கள் உட்பட அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் 90 வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இந் நிலையில்  சி.ஐ.டி. பொறுப்பில் தற்போது 63 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் குண்டுத் தககுதல்களை நடத்த தயாராக இருந்த 15 பேரும்,  சஹ்ரானுடன் உடன் இருந்து தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறிய 5 பேர் வரையிலும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில், இதுவரை குண்டை வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவர்கள் சார்பிலான நிறுவங்கள் என 41 பேருக்கு சொந்தமான 13.4 கோடி ரூபா பணம் முடக்கப்பட்டுள்ளது.  வங்கிக்கணக்குகளில் உள்ள குரித்த பணம் விசாரணைகளுக்காக மேல் நீதிமன்ற ஆணை ஊடாக முடக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது சகாக்களுக்கு சொந்தமான சுமார் 100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவும், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவும் கூறினர்.