“சஹ்ரானுடன் ஒரு வேளை தேநீர் அருந்தியிருந்தாலும், அவர்களை கைது செய்து, விசாரணைகளை நடத்தவும்”- ரணில்

கொழும்பு: மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.  ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (06) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். 

சஹ்ரானை நேரில் சந்திக்காத பலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் திசை திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், சஹ்ரான் ஹாஷிமின் போதனைகள் அனைத்தும், தமிழ் மொழியில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், போதனைகள் தமிழ் மொழியில் காணப்படுகின்றமையினால் அது தமிழ்நாட்டிற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

”சஹ்ரானை சந்திக்காதவர்கள் சிலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் சென்றுள்ளனர். சஹ்ரான் தமிழ் மொழியில் போதனை செய்துள்ளமையினால், அது இலங்கைக்கு மாத்திரம் அல்ல, தென்னிந்தியாவிற்கும் அது பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. சஹ்ரானின் போதனை தென்னிந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தல், அதனால் அவர்களும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சஹ்ரானுடன் தேனீர் அருந்தியவர்கள்

இலங்கையில் நிலைகொண்ட பயங்கரவாத செயற்பாடுகள் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக கூற முடியாது எனவும், அதுவொரு புற்றுநோயை போல வேறொரு இடத்தில் மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் பிரதமர் கூறினார். 

சஹ்ரானின் போதனைகளை கேட்ட பலர், அவரது கொள்கைகளை நோக்கி தமது கவனத்தை செலுத்தியுள்ளமையினால், இந்த பயங்கரவாதம் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் அச்சம் வெளியிட்டார்.

இலங்கை பயங்கரவாதத் தாக்குதல் சூழ்ச்சியுடன் தொடர்புடையவர்கள் உயிருடன் இருப்பார்களாயின், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், சஹ்ரானின் கொள்கைகளை பின்பற்றும் பலர் இன்றும் சமூகத்திற்குள் வாழ்ந்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். 

அதனால், சஹரானுடன் ஒரு வேளை தேநீர் அருந்தியிருந்தாலும், அவர்களை கைது செய்து, விசாரணைகளை நடத்துமாறு தான் பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளதாக கூறிய பிரதமர், அந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நாட்டில் தற்போதுள்ள சட்டம் போதுமானதாக கிடையாது எனவும், பயங்கரவாத சட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பயங்கரவாதம் புதிய யுகமொன்றை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரிட்டனில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாதம் தொடர்பான சட்டம் குறித்து ஆராய்ந்து, அவ்வாறான சட்டமொன்றை இலங்கையிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s