இந்தோனீசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுகள் பகுதியில் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7.0 அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.33 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சுமத்ரா தீவுக்கு அருகிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து, இலங்கை வளிமண்டலவியல் திணைக் களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் உடனடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு ஆரம்ப அறிவித்தலை வழங்குவதற்காகவே இது வெளியிடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஆரம்ப கட்ட ஆய்வுகள்படி, இலங்கை மற்றும் இலங்கை அருகே உள்ள நாடுகளுக்கு சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.