பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகையில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் 45 நிமிடங்கள் வரை இருவரும் பேசியுள்ளார்கள். இவர்கள் இருவரையும் தவிர வேறெருவரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளை இணைத்து அமைக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதன்போது பேசப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசியல் கூட்டணிக்கு கரு ஜயசூரியதான் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர்.
அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகக் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் ஓர் பொது இணக்க நிலை ஏற்பட்டிப்பதாகவும் செய்திகள் கசிந்திருந்தன.