முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது

தலைவர் அமைச்சு பொறுப்பை மீண்டும் ஏற்றதனால் அதன் மூலம் சில சலுகைகளை அனுபவிக்கும் பொருட்டு நாங்களும் தலைவரை பாராட்டி இருக்கலாம். அல்லது குறைந்தது எதுவும் பேசாமல் இருந்திருக்கலாம். இதனைத்தான் பலர் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.  

ஆனால் எங்கள் தலைவர் நெல்சன் மண்டேலா, அல்லது குறைந்த பட்சம்அஸ்ரபாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்கின்றோம் 

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நாங்கள் பதவிகளை ஏற்கமாட்டோம் என்று அதியுயர்பீட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக அறிக்கை வெளியிட்டு ஒருவாரம் பூர்த்தியடையாத நிலையில், எந்தவித பிரச்சினைகளும் தீர்க்கப்படாமலேயே திடீரென பதவியை ஏற்றுக்கொண்டது போராளிகள் மத்தியில் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அவ்வாறு பதவியை ஏற்பதாக இருந்தால் குறைந்தபட்சமாக ஏதாவது பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கிய பின்பு பதவியை ஏற்றிருக்கலாம். 

அல்லது மீண்டும் அதியுயர்பீடத்தினை கூட்டி பதவியை ஏற்பதாக தீர்மானித்துள்ளதாக அறிக்கையினை வெளியிட்டுவிட்டு பதவியை ஏற்றிருக்கலாம். ஆனால் இவைகள் எதுவும் இல்லாமல் திடீரென பதவியை ஏற்றதனால் அதியுயர்பீடம் என்பது ஓர் பெறுமதியற்ற ஒன்றாகிவிட்டது. 

இது சமூகத்தின் மீதும், கட்சி மீதும் அக்கறைகொண்ட எவராலும் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும்.  

எமது சமூகத்தில் தொண்ணூறு வீதமானவர்கள் நடிகர்கள். தங்களது வாசிக்கும், சந்தர்பத்துக்கும் ஏற்றாற்போல் ஜால்ரா போடுவார்கள்.  

அவ்வாறானவர்களுக்கு எமது சமூகத்தின் எதிர்கால பாதுகாப்பு, இழந்த காணிகளை மீட்பது போன்ற எதனைப்பற்றியும் கவலையில்லை. மாறாக தாங்களும், தங்கள் குடும்பமும் உல்லாசமாக வாழ்ந்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். 

ஆனால் சமூகத்தின் எதிர்காலம் பற்றி ஆழமாக சிந்திக்கின்றவர்கள் எவரும் சந்தர்ப்பவாத அரசியலுக்கும், பகட்டுக்கும் சோரம்போக மாட்டார்கள். 

எப்போதும் பேரினவாத அரசாங்கங்கள் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்வருவதில்லை. சிறுபான்மை தலைவர்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்கி முழு சமூகத்தையும் சமாளிக்க முற்படுவார்கள். 

அந்தவகையில் அமைச்சர் பதவியுடன் அபிவிருத்தி என்ற போர்வையில் வீதிகளும், கட்டடங்களும் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு அபிவிருத்தி செய்துள்ளதாக கதையை முடித்துவிடுவார்கள். 

ஆனால் சிறுபான்மை மக்களின் அரசியல் சார்ந்த உரிமைகளுக்கான தீர்வினையோ, அல்லது நிரந்தர பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையோ அவர்கள் செய்ய முற்படுவதில்லை. 

அதனால்தான் எங்களது பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகள் வழங்கப்படாமல் மந்திரி பதவிகளை பெற்றுக்கொண்டால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காது அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்ற அச்சத்தினாலேயே அமைச்சர் பதவியினை பெற்றுக்கொண்டதை நாங்கள் வண்மையாக கண்டித்தோம்.   

எனவேதான் சமூகத்தை பற்றி பேசாமல் நாங்கள் தலைவரின் அமைச்சு பதவி மூலமாக ஏதாவது சலுகைகளை எதிர்பார்த்து வாய்மூடி மௌனியாக இருந்திருந்தால் அது எமது சமூகத்துக்கு செய்கின்ற மாபெரும் துரோகமாகும். 

தலைவர்களின் அரசியல் தவறுகளை விமர்சனம் செய்வது அவர்கள் மீண்டும் தவறு செய்யக்கூடாது என்பதற்காகவேயன்றி வேறு எந்த பின்னணியும் இல்லை. இது புத்தி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும். அற்ப பதவிகளுக்காக ஜால்ரா போடுகின்றவர்களுக்கு புரியாது