உயிர்த்த ஞாயிறு தினத்தில் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள், வெலிசறை கடற்படை முகாமைன் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியத்தில் இருந்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக, உரிய நடை முறைகளைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டவையா என பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  

குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதால் அந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். 

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று (23) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை வெளிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் சம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் பயங்கர்வாதிகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைதானவர்களிடமிருந்து மீட்க்கப்பட்ட வெடி பொருட்களில்,  வெலிசறை முகாம் ஊடாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்ட வெடிபொருட்கள் இருந்ததாக  லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தார்.