லண்டன்: உலகக்கோப்பைத் தொடருக்கு முன் ஒவ்வொரு அணியிலும் சில வீரர்கள் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தார்கள். எதிராணிகளுக்கு கடும் குடைச்சல் தரக்கூடிய வீரர்களாக விளங்கிய அவர்களில் சிலர் உலகக்கோப்பைத் தொடரில் முற்றிலும் சோடை போனார்கள். சில தனி நபர்களின் மோசமான செயல்திறன் அணியின் வெற்றி வாய்ப்புகளையும் கடுமையாக பதம் பார்த்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் மோசமாக செயல்பட்ட ஐவர் யார்?
1. ரஷீத் கான் – ஆப்கானிஸ்தான்
ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பௌலர்கள் தரவரிசையில் ஆறு இடங்கள் சரிந்து ஒன்பதாவது இடத்துக்குச் சென்றிருக்கிறார் ஆப்கானிஸ்தான் அணிக்கு பந்துவீச்சில் பிரதான ஆயுதமாக விளங்கும் ரஷீத்கான்.
டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் இன்னும் ரஷீத்கான்தான் முதலிடம் வகிக்கிறார்.

ஆனால் உலகக்கோப்பையில் ரஷீத் கான் பந்துவீச்சு எடுபடவில்லை.
அவரது பந்துகளில் பெரியளவில் விக்கெட்டுகள் விழவில்லை. மேலும் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சிரமப்படாமல் ரன்களையும் சேர்த்தனர்.
எட்டு போட்டிகளில் பந்துவீசி அவர் ஆறு விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
ஒரே ஒரு ஓவர் மட்டுமே மெய்டனாக வீசியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசி 110 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுடனான போட்டியிலும் அவர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.
இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டும் 7.5 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஐபிஎல் போன்ற தொடர்களில் கூட மிகச்சிறப்பாக பந்து வீசிய ரஷீத்கான் இங்கிலாந்தில் சோடைபோனது ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
2. கிளென் மேக்ஸ்வெல் – ஆஸ்திரேலியா
2019 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 48-வது இடத்தில் இருக்கிறார் மேக்ஸ்வெல்.
10 போட்டிகளில் அவர் அடித்தது 177 ரன்கள் மட்டுமே.
உலகக்கோப்பைத் தொடருக்கு முன் பாகிஸ்தானுடன் ஆஸ்திரேலியா விளையாடிய தொடரில் மூன்று போட்டிகளில் அரை சதம் விளாசினார் மேக்ஸ்வெல்.ஒரு போட்டியில் 98 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகியிருந்தார்.
அதிரடியான பேட்ஸ்மேன், எந்தவொரு பௌலரையும் கலங்கடிக்கும் திறன் படைத்தவர், 100 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற அனுபவ வீரர் என ஆஸ்திரேலிய அணிக்கு நம்பகமான ஒரு வீரராக திகழ்ந்தார் மேக்ஸ்வெல்.

நல்ல ஸ்ட்ரைக்ரேட் வைத்திருக்கும் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட்டை உயர்த்தும் பணியைச் செய்வதற்கும் அணிக்குத் தேவைப்படும்போது விக்கெட்டுகள் வீழ்த்தவும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆனால் 10 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட அவர் அரை சதமடிக்க வில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனார். லார்ட்ஸில் நியூசிலாந்து அணியிடம் ஒரு ரன்னில் சரணடைந்தார்.
இலங்கைக்கு எதிராக 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 10 பந்தில் மூன்று சிக்ஸர்கள், இரண்டு பௌண்டரிகள் விளாசி 32 ரன்கள் எடுத்தார்.
இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே 30 ரன்களை அவர் தாண்டினார்.
அணிக்குத் தேவைப்படும்போது நிலைத்து நின்று விளையாடத் தவறி அடிக்கடி ஆட்டமிழந்தால் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டது.
மேக்ஸ்வெல்லின் சுவையற்ற ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரை எதிரணி எளிதில் காலி செய்ய அடிகோலியது.
3. ஃபகர் ஸமான் – பாகிஸ்தான்
2017 சாம்பியன்ஸ் டிராபி உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்வதற்கு காரணமாக இருந்தவர் ஃபகர் ஸமான்.
106 பந்துகளில் அதிரடியாக ஆடி அவர் 114 ரன்களை எடுத்தார். அவரது ரன்கள் பாகிஸ்தான் மிகப்பெரிய இலக்கை குவிக்க உதவின.
கடந்த மே மாதம் இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் விளையாடிய ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் இரட்டை இலக்க ரன்களைத் தொடவில்லை. ஒரு போட்டியில் அரை சதமடித்தார். மற்றொரு போட்டியில் 106 பந்துகளில் 138 ரன்கள் எடுத்தார்.

ஆனால் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு அவர் மேட்ச் வின்னராக திகழவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் எடுத்ததே இத்தொடரில் அவர் எடுத்த அதிகபட்சமாக அமைந்தது.
இரண்டு போட்டிகளில் அவர் டக் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மூன்றாவது ஓவரிலேயே அவுட் ஆனார்.
இமாம் உல் ஹக்குடன் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய ஃபக்ர் ஜமான் நிலையான தொடக்க தர தவறிவிட்டார். அவரது நிலையற்ற ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஃபகர் எட்டு போட்டிகளில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி – 23.25.
4. மார்ட்டின் கப்டில் – நியூசிலாந்து
2019 உலகக்கோப்பையின் மிகச்சிறந்த திரில்லர் போட்டியாக அமைந்த இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிக்குத் தேவையான இரண்டு ரன்களை எடுக்கத் தவறினார் மார்ட்டின் கப்டில். சில சென்டி மீட்டர்கள்தான் கப்டில் பேட்டுக்கும் கிரீஸுக்கும் இடையிலான இடைவெளி. இந்த இடைவெளியில் கோப்பையை இழந்தது நியூசிலாந்து.
முன்னதாக, இந்திய அணியுடன் விளையாடிய அரை இறுதி போட்டியில், ஃபீலடிங்கில் துடிப்புடன் செயல்பட்டு தோனியை ரன் அவுட் செய்தார் கப்டில் . அந்த ரன் அவுட் இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்தது.
நியூசிலாந்து அணிக்குத் தொடக்க வீரராக களமிறங்கும் கப்டில் உலகக்கோப்பைத் தொடரில் 10 போட்டிகளில் 186 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 20.57

2009-ல் தான் களமிறங்கிய முதல் ஒருநாள் போட்டியிலேயே அபார சதம் விளாசி சர்வதேச கிரிக்கெட் வாழக்கையில் நுழைத்த கப்டில் பந்துகளை சிக்சருக்கு விரட்டுவதில் வல்லவர்.
உலகக் கோப்பைத் தொடருக்கு முன் கடைசியாக பிப்ரவரி மாதம் வங்கதேசத்தை எதிர்கொண்டது நியூசிலாந்து. அப்போது இரண்டு போட்டிகளில் சதமடித்தார் கப்டில்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக 51 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். ஆனால் அதன் பின்னர் வேறு அரை சதம் எதுவும் அவரிடமிருந்து வரவில்லை.
ஐந்து போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார் .
ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் கோல்டன் டக் ஆனார். அரை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 19 ரன்கள் எடுத்தார்.
அபாரமான தொடக்கத்தை எதிர்பார்த்த தனது அணிக்கு தொடர் அதிர்ச்சித் தந்தார் கப்டில். அவரது மோசமான ஃபார்ம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கூடுதல் நெருக்கடி தந்தது.
5. ஹாஷிம் ஆம்லா – தென்னாப்பிரிக்கா
உலகக் கோப்பைத் தொடரில் ஏழு இன்னிங்சில் இரண்டு அரைசதங்கள் விளாசிய ஆம்லா மொத்தமாக 203 ரன்கள் எடுத்தார்.
பேட்டிங்கில் பல சாதனைகளை படைத்தவர் ஹாஷிம் ஆம்லா. தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி பல போட்டிகளில் வெற்றித் தேடித்தந்திருக்கிறார்.
ஆனால் இம்முறை அவரது மோசமான ஃபார்ம் டு பிளசிஸ் அணி அரை இறுதிக்கு கூட தகுதி பெறாததற்கு முக்கிய காரணியாக அமைந்தது.

இங்கிலாந்துக்கு எதிராக 13 ரன்கள் , இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆறு ரன்கள் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஆறு ரன்கள் என தொடர்ந்து சொதப்பினார்.
அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எளிதான இலக்கை மிகப்பொறுமையாக விரட்டினார். 83 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்கள் குவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவரது ரன்கள் – 2
இலங்கைக்கு எதிராக மட்டும் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பவர்பிளே ஓவர்களில் மிகவும் நிதானமாக பேட்டிங் செய்த ஆம்லா தென் ஆப்ரிக்காவின் ரன் ரேட் மந்தமாக காரணமாக இருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் 27 சதங்கள் விளாசிய பெருமைக்குரிய ஆம்லா இம்முறை ஒரு சதம் கூட விளாசவில்லை.
பொறுமையாக ஆட்டத்தைத் துவங்கி பின்னர் மிடில் ஓவர்களில் நிறைய ரன்கள் குவிப்பது அவரது பாணி.
இம்முறை இங்கிலாந்து மண்ணில் அவர் தடுமாற, அவருடன் களமிறங்கிய குயின்டன் டி காக்குக்கும் அழுத்தம் அதிகரித்தது. இதனால் இயல்பாக தனது பாணி ஆட்டத்தை வெளிப்படுத்த அவரும் தவறினார்.
நல்ல தொடக்கம் கிடைக்காதது தென் ஆப்ரிக்க அணி மிகப்பெரிய இலக்கை குவிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணியாக அமைந்தது.