தற்கொலைத் தாக்குதல்: சஹரான் குழுவினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தது எப்படி?

சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. 

அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக போலீஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்து 5 நாட்களுக்குப் பின்னர், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில், சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்ததால், அவர்களில் 15 பேர் இறந்தனர்.

சஹ்ரானின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் அவர்களைச் சேர்ந்த சிறுவர்கள் என மொத்தம் 15 பேர் அப்போது மாண்டனர்.

குண்டு வெடித்த வீடு

இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சஹ்ரான் குழுவினர் தங்கியிருந்தபோது, அவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் போலீஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சுற்றி வளைக்கப்பட்டனர். இதனையடுத்தே, அவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.

குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்த சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர், காயங்களுடன் அந்த வீட்டிலிருந்து மறுநாள் மீட்கப்பட்டார்கள்.

சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில்தான், குண்டு வெடிப்பு நடந்த வீடும் உள்ளது. ஆதம்பாவா என்பவருக்கு இந்த வீடு சொந்தமானதாகும்.

அந்த தற்கொலைக் குண்டு வெடிப்பு நடந்த மறுநாள் ஏப்ரல் 27ம் தேதி, ஆதம்பாவாவை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், அம்பாறை போலீஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் மனைவி அமீதா கூறி அழுதார்.

ஆதம்பாவா
Image captionஆதம்பாவா

சாய்ந்தமருது – பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில் வீடு பெற்ற அமீதாவை சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. சஹ்ரான் குழுவினருக்கு எப்படி உங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்தீர்கள் என்று நாம் கேட்டபோது, நடந்தவற்றை அவர் விரிவாக கூறத்தொடங்கினார்.

“எனது கணவர் மீன் பிடிக்கும் தொழிலாளி. அன்றாடம் அவர் உழைப்பதை வைத்துதான் வாழ்க்கையை ஓட்டி வந்தோம். எங்களுக்கு இங்கு ஒரு வீடு உள்ளது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் குண்டு வெடித்த வீடும் உள்ளது. அந்த வீடு விற்பனைக்கு வந்தமையினால் எங்கள் மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டு அதனை வாங்கினோம். 

கடந்த ஏப்ரல் 5ம் தேதி, எங்கள் பகுதியைச் சேர்ந்த நியாஸ் மற்றும் சஜீத் ஆகியோர் அந்த வீட்டை வாடகைக்கு கொடுப்பீர்களா என்று கேட்டார்கள். நாங்களும் இணங்க, மாத வாடகை மற்றும் ஏனைய விவரங்களை எங்களிடம் கேட்டுப் கொண்டு அவர்கள் சென்றார்கள்.

குண்டு வெடித்த வீடு

ஏப்ரல் 16ம் தேதி வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு ஒருவர் வந்தார். அவர் யார் என்று எமக்குத் தெரியாது. குண்டுவெடிப்பு நடந்த பின்னர், அந்த வீட்டின் முன்பாக துப்பாக்கியுடன் இறந்து வீகிடந்தவர்தான் வாடகைக்கு வீடு எடுக்க வந்தவர் என்பதை பிறகு அறிந்து கொண்டோம்” என்றார் அமீதா.

சஹ்ரான் குழுவைச் சேர்ந்த நியாஸ் என்பவர்தான் வீட்டுக்கு முன்பாக துப்பாக்கியுடன் இறந்து கிடந்தார். முன்பு அவர் ஓர் ஊடகவியலாளராகப் பயணியாற்றியவர்..

அமீதா தொடர்ந்து பேசினார். “வீட்டுக்கு மாத வாடகையாக 5 ஆயிரமும், முன்பணமாக 50 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு கேட்டோம். 25 ஆயிரம் ரூபாவை முதலில் தந்தார். மீதியை வாடகை ஒப்பந்தம் எழுதும்போது தருவதாகக் கூறினார்.

குண்டு வெடிப்பில் சேதமடைந்த வீடு

தாங்கள் காத்தான்குடி என்றும், தனது தம்பி அம்பாறையில் தொழில் செய்வதால், அவர் இங்கு தங்கி வேலைக்குச் செல்வது எளிதானது என்றும், அதனாலேயே, தம்பியும் அவர் குடும்பமும் தங்குவதற்காக இந்த வீட்டை வாடகைக்கு எடுப்பதாகவும் அவர் கூறினார்.

ஏப்ரல் 18ம் தேதி காலை 6.30 மணியிருக்கும், வாடகைக்குப் பெற்ற வீட்டில் லாரி ஒன்றில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் இறக்கப்பட்டன. இந்த வீட்டில் எத்தனை பேர் தங்கியிருந்தார்கள் என்று, சம்பவம் நடக்கும் வரை எங்களுக்கு தெரியாது.

18ம் தேதி வீட்டுக்கு குடிவந்தவர்கள், இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு 20ம் தேதியன்று எங்கேயோ சென்று விட்டார்கள். இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் நான்கு பிள்ளைகளும் வீட்டிலிருந்து ஒரு வேனில் சென்றதைக் கண்டோம். பிறகு 26ம் தேதி, சம்பவம் நடைபெற்ற தினம்தான் அந்த வீட்டுக்கு மீண்டும் ஆட்கள் வந்தனர்.

ஆதம்பாவாவின் மனைவி அமீதா

இவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களை இங்கு தங்க வைக்க வேண்டாம் என்று, எங்கள் பகுதியிலுள்ள பொதுமக்கள் கூறினார்கள். (பயங்கரவாதத் தாக்குதலை தலைமையேற்று நடத்திய சஹ்ரான் காத்தான்குடியைச் சேர்ந்தவராவார்). அல்லது, இவர்கள் பற்றிய தகவலை கிராம உத்தியோகத்தரிடம் பதிவு செய்யுங்கள் என்று பக்கத்திலுள்ளோர் எம்மை அறிவுறுத்தினார்கள்.

அதன்படி எனது கணவரும் நானும் கிராம சேவை உத்தியோகத்தரிடம் சென்றோம். அவர் பிறகு வருவதாகக் கூறி, விடயத்தை எமது பகுதி பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடமும் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அறிவித்தோம். அவர்கள் இந்த வீட்டிற்கே வந்தனர். இது நடக்கும்போது மாலை 6 மணியிருக்கும்.

அங்கு வாடகைக்கு இருந்தவர்களிடம் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பேசினர். உங்களைப் பற்றிய விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். அல்லது இங்கிருந்து வெளியேறி விடுங்கள் என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறினர். மறுநாள் காலை 10 மணி வரை தமக்கு அவகாசம் வழங்குமாறும், அதன் பிறகு தாங்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுவதாகவும் வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தார்கள். அப்போது, அங்கு மக்கள் திரள் கூடிவிட்டது. வீட்டில் இருப்பவர்களை தாங்கள் பார்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினார்கள். இதற்கிடையில், அந்த இடத்திலிருந்து பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பெண்களை அகன்று செல்லுமாறு, எமது தரப்பு ஆண்கள் கூறினார்கள். நாங்கள் வந்து விட்டோம். அதற்குப் பிறகுதான் அங்கு குண்டு வெடித்தது.

குண்டு வெடித்த வீடு

அங்கு என்ன நடந்தது என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டோம். மறுநாள் காலை, அருகிலுள்ள பாடசாலை மைதானத்தில் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடினோம்.

குண்டு வெடிப்பு நடந்து மறுநாள் 27ம் தேதி, போலீஸார் எனது கணவரை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அவரை நேற்றும் சென்று பார்த்தேன். அம்பாறை போலீஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். சுமார் இரண்டரை மாதங்களாகியும் அவரை விடுவிப்பதாக இல்லை.

“நாங்கள் ஏழைகள். ஒரு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்தோம். ஆனால் இப்படியாகி விட்டது” என்று கூறி அழுகிறார் அமீதா.

– BBC Tamil

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s