லண்டன்: இந்தப் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது கடுமையாக மழை பெய்ததை அடுத்து போட்டி தடைபட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு விரைவாக வெளியேறினர்.
அதே நாளில் முயற்சி
இதனால், போட்டி என்னவாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். நிச்சயம் போட்டி இன்றே முடிக்கப்பட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். முதலில் மழை விடும் வரை காத்திருப்பார்கள். இரண்டு மணி நேரம் வரை ஓவர்கள் குறைக்கப்படாது.
டிஎல்எஸ் விதி
இரண்டு மணி நேரத்திற்குப் பின் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படும். டிஎல்எஸ் விதிப் படி வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்படும். குறைந்தபட்சமாக போட்டி 20 ஓவர்கள் வரை குறைக்கப்படலாம். 20 ஓவர்களுக்கு கீழும் போட்டி குறைக்கப்பட வேண்டிய அளவுக்கு நேரமின்மை ஏற்பட்டால் என்ன செய்வது?
ரிசர்வ் நாட்கள்
அப்படி நடந்தால், போட்டி அடுத்த நாளுக்கு எடுத்துச் செல்லப்படும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டும் ரிசர்வ் நாட்கள் இருப்பதால், இது சாத்தியமே. எனவே, இந்தியா – நியூசிலாந்து போட்டி இன்று முடியாவிட்டால், நாளை தொடரும்.
மீண்டும் தொடரும்
ரிசர்வ் நாளில் போட்டி மீண்டும் புதிதாக தொடங்கப்படாது என்பதும் இங்கே முக்கியமான விஷயம். முதல் நாளில் போட்டி எங்கே கை விடப்பட்டதோ அதே இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும். ஓவர்கள் குறைக்கப்பட்டு இருந்தாலும், குறைக்கப்படாமல் இருந்தாலும், எங்கே போட்டி நிறுத்தப்பட்டதோ, அங்கே இருந்து மீண்டும் தொடங்கும்.
ரிசர்வ் நாளிலும் மழை பெய்து போட்டி நடைபெறா விட்டால் என்ன செய்வது? அப்படி நடந்தால், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். லீக் சுற்றில் இந்தியா 15 புள்ளிகள் பெற்று இருந்தது, நியூசிலாந்து 11 புள்ளிகள் மட்டுமே பெற்றது. எனவே, இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.ykk
சரி, போட்டி என்று நடந்தாலும் Tie ஆனால் என்ன செய்வது? அதற்கும் விதி உண்டு. டி20 போட்டிகள் போல சூப்பர் ஓவர் மூலம் போட்டியின் முடிவு எட்டப்படும். ஆக, மொத்தத்தில் போட்டியின் வெற்றியாளர் அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஏதோ ஒரு வழியில் தேர்வு செய்யப்படுவார்.