மன்செஸ்டர் : ஒரு கேப்டன் எப்படி செயல்படக் கூடாது, எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக கை காட்டப்படுபவர் பாக். கேப்டன் சர்பிராஸ் அகமது. உலக கிரிக்கெட் வரலாற்றில் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் போட்டி முடிந்தது. இந்தியா வரலாற்று வெற்றியை பெற்றது. உலக கோப்பையில் தற்போது வரை தோற்காத அணியாக திகழ்கிறது இந்தியா. உலக கோப்பை வரலாற்றில் 7வது முறை ஒரே அணியிடம் பாகிஸ்தான் தோல்வி கண்டுள்ளது.
இந்த தோல்வியின் காரணங்களை ஆராய்ந்தால் 3 முக்கிய விஷயங்கள் புலப்படுகின்றன. டாஸ் வென்ற சர்பிராஸ் ஏன் பவுலிங்கை தேர்வு செய்தார் என்பது இன்றும் விடை தெரியாத கேள்வி. முதலில் களம் கண்டது இந்திய அணி. ஆரம்பம் முதலே தடுப்பாட்டம் ஆடியது… அதாவது நிறுத்தி நிதான ஆட்டம்.
முகமது அமீர், ஹசன் அலி ஆகியோரது பந்துவீச்சை கணித்து விளையாடத் தொடங்கினர். அவர்களில் ஹசன் அலி எதற்கு தான், அணியில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு பக்கம் அமீர் பந்துவீசி ரன் கொடுத்தால்.. மறுபக்கம் அதை உடைத்து ரன்களை அள்ளி கொடுத்தார் ஹசன் அலி. அவர் வீசிய 9 ஓவர்களில் வந்த ரன்கள் 84. மாற்றுத்திட்டமும் இன்றி அவரை பயன்படுத்தி இருக்கிறார் சர்பிராஸ்.
அதன் விளைவு தான்… ரோகித்தின் அதிவேக அரைசதம். ராகுல் விக்கெட்டை இழந்த பிறகு வந்தவர் கோலி. ரோகித்துடன் கை கோர்க்க பாக். கையைத் தான் பிசைந்தது. மொத்தமாக 140 ரன்களை வூடு கட்டி அடித்து விட்டு தான் வெளியேறினார் ரோகித். அதன் தொடர்ச்சி… இந்திய அணியின் ஸ்கோர் 336 ரன்கள் என்ற கடின இலக்கை எட்ட முடிந்தது.
337 என்ற இலக்கை எட்ட முடியுமா என்பதில் நம்பிக்கையே இல்லாமல் தான் இருந்திருக்கிறது பாக். அந்த மன தைரியம் இல்லாதது, ஆரம்பத்திலே தடுமாற்றத்தை காட்டியது. புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்படவே, உடனே விஜய் சங்கரை பந்துவீசச் செய்தபோது, அவர் தான் வீசிய முதல் பந்திலேயே இமாம் விக்கெட்டை காலி செய்தார்.
பாபர் ஆசமும், பக்கர் ஜமானும் 100 ரன்கள் பார்டனர்ஷிப்பாக இருந்து, அணியை மீட்டனர். போட்டியை சாதகமாக மாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், பாபர் ஆசம், குல்தீப் பந்தில் போல்டானார். அடுத்த ஓவரிலேயே பக்கர் ஜமானும் வீழ்ந்தார்.ஹர்திக் பாண்டியா, ஹபீஷ், சோயிப் மாலிக் ஆகியோரை வீழ்த்தி இந்தியா வசம் முழுவதும் போட்டியை மாற்றியமைத்தார். மழையின் காரணமாக போட்டி 40 ஓவர்களாக மாற்றப்பட்டது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பவுலிங்கில் தான் இப்படி தான் என்றால்… பீல்டிங்கில் வீரர்களை திட்டாத ரசிகர்களே இல்லை. அத்தனை படுமோசம். ராகுல் ரியாஸ் வீசிய 10வது ஓவரின் முதல் பந்தை இடது பக்கம் தட்டி விட்டு ரன் எடுக்க முயன்றார். ராகுலிடமிருந்து எந்த அழைப்பும் இன்றி ரோகித், 2வது ரன் எடுக்க முயற்சித்தார். பக்கர் ஜமான் ஸ்ட்ரைக்கில் வீசாமல் நான்–ஸ்ட்ரைக்கில் பந்தை எடுத்து வீசிய காரணத்தால் ரோகித் தப்பினார். ஒட்டுமொத்த பீல்டிங் சொதப்பலுக்கும் இது ஒன்றே போதும்.
அடுத்த ஓவரில் ரோகித், ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடினார். அப்போது ஷதாப் கான் எடுத்து ஸ்டம்பை நோக்கி எறியப்பட்ட பந்து ஸ்டம்பில் அடிக்காததால் ரோகித் காப்பற்றப்பட்டார். இந்த இரு மிஸ் பில்டிங்கள் ஆட்டத்தை மாற்ற, விளைவு ரோகித் சதம்.
எல்லாத்துக்கும் மேலாக.. சர்பிராஸ் கேப்டன்சி பற்றி பல கேள்விகள் வருகின்றன. . ஒரு அதி நெருக்கடியான போட்டியில், வலுவான பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிராக துணிந்து பவுலிங்கை தேர்ந்து எடுத்தது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தால், தமது அணியின் 2 ஸ்பின் பவுலர்களையும் அழகாக பயன்படுத்தியிருக்கலாம். ஆக ஒட்டு மொத்த தவறான முடிவு, திட்டமிடல், ஒரு ஆக்ரோஷம் எதுவுமே இல்லாமல் வெற்றியை தனதாக்க முடியாது. அதற்கு ஒரு முன்னுதாரணம்… நேற்றைய பாகிஸ்தானின் செயல்பாடு.