முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது 

 ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததன் பின்பு இவர்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதுதான் இன்று அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாகும். இவர்களது ராஜினாமாவானது ஏமாற்று அரசியல் என்றும், நிலமை ஒரு முடிவுக்கு வந்ததன்பின்பு ஓரிரு மாதங்களில் தங்களது அமைச்சர் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தென்னிலங்கை இனவாதிகளிடம் காணப்படுகின்றது.

அதுபோல் முஸ்லிம் தலைவர்களின் இந்த ஒற்றுமையை விரும்பாத எமது சமூகத்தை சேர்ந்த சில தீய சக்திகளும் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றார்கள். 

அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் அருகில் இருந்துகொண்டு தங்களை விசுவாசியாக காட்டிக்கொண்டு அமைச்சு அதிகாரங்களை அனுபவிக்கின்ற சில கூட்டத்தினர்களும் சமூக பிரச்சினைகள் பற்றி கவலைப்படாமல் தாங்கள் அதிகாரத்துடன் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.  

தலைவர்களும், மக்களும் அமைச்சு பொறுப்புக்களை வெறுத்தாலும், அதிகார ருசி கண்டவர்கள் பதவிகள் இன்றி இருக்கமாட்டார்கள். இவ்வாறானவர்கள் தலைவர்களை பிழையாக வழிநடாத்தகூடும். இந்த விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். 

அமைச்சர் பதவி என்பது எமக்கு கிடைத்த உரிமையல்ல. அது வெறும் சலுகையாகும் என்பதனை அண்மைய சம்பவங்களைக்கொண்டு நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பாராளுமன்ற ஆயுட்காலம் இன்னும் ஒரு வருடமும், மைத்ரியின் ஜனாதிபதி பதவிக்காலம் சில மாதங்களும் இருக்கின்ற நிலையில், எப்படியாவது பாராளுமன்ற அதிகாரத்தோடு ஜனாதிபதி தேர்தலை சந்திப்பதற்கு மஹிந்த தரப்பினர் கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் நாங்கள் எதிர்தருப்புக்கு செல்வது பிழையான முடிவாகும். அதாவது தென்னிலங்கை இனவாதிகளினதும், மஹிந்த தரப்பினர்களினதும் எண்ணங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொடுத்தது போன்று அமைந்துவிடும். 

அதனால் எந்தவித அமைச்சு பொறுப்புக்களும் இல்லாமல் ஆளும்தரப்பில் இருந்துகொண்டு எந்த நேரத்திலும் ஆட்சியை மாற்றுவோம் என்ற அச்சத்தை ஆளும் தரப்புக்கு வழங்கியவாறு எங்கள் சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அவசர தீர்வு கான வேண்டும். 

அவ்வாறில்லாமல் இன்னும் ஓரிரு மாதங்களில் தாங்கள் அமைச்சு பொறுப்புக்களை மீண்டும் பாரம் எடுக்கும் நோக்கம் இருந்தால், அதிகாரங்களை ஒருசிலர் மட்டும் அனுபவிக்கலாமே தவிர, எமது மக்களின் எந்தவித அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காது.

இன்றைய அடிப்படை பிரச்சினை என்னும்போது, முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து நீடிக்கப்பட்டு வருகின்ற அவசரகால சட்டத்தை நீக்குதல், பயங்கரவாதத்துடன் நேரடி தொடர்பில்லாமல் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எமது சகோதரர்களை விடுவிக்க செய்தல், சேதமாக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடுகள் பெற்றுக்கொடுப்பதோடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தல், 

மற்றும் வடகிழக்கில் மீட்கப்படாமல் இருக்கின்ற காணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவைகள்தான் இன்று செய்ய வேண்டிய முதல்கட்ட வேலைகளாகும். 

முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாவிட்டால் இன்றைய அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பேரம்பேசும் சக்தி எங்களது காலடியில் குவிந்துகிடக்கின்ற இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தாதுவிட்டால், இப்படியான சந்தர்ப்பம் எப்போது வரும் ? 

எனவே மேற்கூறப்பட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காது நாங்கள் என்ன முகத்தோடு அடுத்த தேர்தலுக்கு மக்கள் முன் செல்வது என்ற கவலையுடன் தங்களது முழு சக்தியையும் அரசாங்கத்தின்மீது பிரயோகிக்க வேண்டியது எமது தலைவர்கள்மீது உள்ள கட்டாய கடமையாகும்.