இலங்கையில் கடந்த மாதம் 21ம்திகதி உயிர்நீத்த ஞாயிறன்று நடந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பிற்பாடு அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
குறிப்பாக  தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்ட தீவிரவாதிகளுடன்  அமைச்சர் றிஷாத்துக்கு மறைமுகமான தொடர்பு இருப்பதாகவும் ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டு  சில பாராளுமன்ற உறுப்பினர்களால் திணிக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் அது ஊடுறுவியுள்ளது.

அது மட்டுமன்றி கடந்த காலம் தொட்டு அமைச்சர் றிஷாத் மீதான பாரிய ஊழல் மோசடி சம்பந்தமான குற்றச்சாட்டொன்றும் இருந்து வருகின்றது. இவை அனைத்தையும் சாதகமாக பயன்படுத்தி ஒரு சில பெரும்பான்மை அரசியல் வாதிகள் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி குளிர்காய முனைகிறார்கள் அதற்கு பகடைகாயாய் ஒரு சில இனவாத ஊடகங்களும் இருந்து வருகின்றது.

இலங்கையில் உள்ள சில இனவாத அமைப்புக்கள்   மதங்களுக்குள் பிளவுகளை உண்டு பண்ணுவதற்கும்,இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுளை தோற்றுவிப்பதற்கும்,  தங்கள் அமைப்புக்களுக்கு எதிராக செயற் படுகின்றவர்களை இல்லாதொழிப்பதற்கும், பாமர மக்களை மூலைச்சலவை செய்வதற்கும் இவ்வாறான   ஊடகங்களையே முன்நிலைப்படுத்துகிறார்கள்.

ஊடகத்துறையானது இன,மத,நிற,வர்க்க,கட்சி,இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு நடு நிலையாக பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டும் அதுவே ஊடக தர்மமாகும் அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பக்க பலமாக இருக்கும் இந்த  ஊடகங்கள் உலகத்தின் முக்கிய வழிகாட்டியாக உள்ளன நாட்டின் பொருளாதார மேம்பாடு  தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது.

எவ்வாறாயினும்  றிஷாத் என்பவர் தனி மனிதரல்ல ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை  பிரதிநிதித்துவப் படுத்துகின்ற  ஒரு கட்சியின் தலைவர்,ஒரு  அமைச்சர், அனைத்துக்கும் அப்பால் ஆளும் கட்சியிலுள்ள ஒரு அரசியல் பிரமுகர், ஜனாதிபதி பிரதமருடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்ற ஒரு அரசியல் வாதி அவரை அரசியலிலிருந்து ஓரம் கட்டுவதென்பது சாதாரண விடயமுமல்ல.

இலங்கையிலுள்ள ஊடகத்துறையில் பிரபல்யமான காட்சி ஊடகமான MTV,சிரச,சக்தி,ஹிரு  போன்ற ஊடகங்களே அமைச்சர் றிஷாத் மீதான குற்றச்சாட்டை  திரிவு படுத்தி  குறிப்பிட்ட செய்திகளின் உண்மைத் தன்மையை மறைத்து பூதகரமாக்கி செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இவயனைத்துக்கும் பின்புலத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சஹாக்களே இருக்கின்றார்கள். என்பதனையும் பாராளுமன்றில் அமைச்சர் றிஷாத் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து வெளி உலகுக்கு காட்டிவிட்டார்கள். அதுவும் கை நளுவிப் போயிருக்கின்ற சூழ்நிலையில் இவ்வாறான ஊடகங்களை மையப்படுத்தி காழ்ப்புணர்வுகளை கட்டவிழ்த்து விட முயற்ச்சிக்கிறார்கள்.

குறிப்பாக ஊடகத்துறையை வழி நடத்துபவர்களை    மக்கள்  கண்ணியமாக  கருதுகிறார்கள்.  ஏனெனில் உலகத்தில் எந்த மூலையில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் பல் வேறு தியாகங்களுடன் அதனை உடனுக்குடன் மக்களுக்கு அறியத்தருகிறார்கள்.   ஆகவே இவ்வாறான ஊடகங்களை வழிநடத்தும் ஊடகவியலாளர்கள் நடுநிலையாக செய்திகளை வழங்குவதோடு  ஊடக நிறுவனங்களும்  பக்கச்சார்பின்றி  செயற் பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எவ்வாறாயினும் அமைச்சர் றிஷாத் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டத்துக்கு முன் ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் அதற்குறிய தண்டனை அவருக்கு கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.மாறாக அதைவிடுத்து தனி நபரின் நப்பாசைக்காக ஊடக தர்மத்தை இல்லாதொழிக்க முனைவது ஊடகத் துறைக்கு  ஆரோக்கிமானதொன்றல்ல

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை