பௌத்த மதம் இலங்கைக்குக் கொண்டு வந்த போது அம் மதத்தை முதன் முதலில் தழுவியவர்கள் தமிழரே. தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன். சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள்  என வடமாகாண சபையின் முன்னால் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கும் கேள்வி – பதிலில் இம்முறை இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற கருத்தை வலியுறுத்த தெற்கில் பலரும் எத்தனிக்கின்றார்கள்.  இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாம் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளியோம்” என்ற விதத்தில் பௌத்த பிக்குமார்கள் கூறிவருகின்றார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன? 

இலங்கை பௌத்த சிங்கள நாடா? என கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதில் அளித்துள்ளார்.   

அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, 

இலங்கையானது அதன் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம். தனி இனமோ மதமோ அதனைச் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல்லினம் வாழும், பல மதங்கள் நிலவும், பன் மொழிகள் பேசப்படும் நாடு. இலங்கை பௌத்த சிங்கள நாடு என்று கூறுவதின் காரணம்; என்ன என்று நாம் பரிசீலிக்கவேண்டும். அதாவது இலங்கை பௌத்த சிங்கள நாடு, மற்றைய மத, இன, சமூக மக்கள் வந்தேறு குடிமக்கள். அவர்களுக்கு நாம் பார்த்துக்கொடுத்தால்த்தான் உரிமைகள் கிடைக்குமே ஒளிய தாமாக அவர்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்ற அடிப்படையிலேயே இவ்வாறு புத்த பிக்குகளாலும் மற்றையோராலும் சொல்லிவரப்படுகிறது. இது உண்மையில் இலங்கையில் சிறுபான்மையினரை அடிமைப்படுத்த, பயப்படுத்த, அந்நியப்படுத்த எடுத்து வரப்படும் நடவடிக்கைகள். 

அதாவது இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடல்ல. ஆனால் அதனை சிங்கள பௌத்த நாடாக மாற்ற வேண்டும் என்ற ஒரு கருத்து பல சிங்கள அரசியல்வாதிகளையும் புத்திஜீவிகளையும் பீடித்துள்ளமை தெரிய வருகின்றது. புத்தரின் பல்லை (தாது) யார் வைத்திருக்கின்றார்களோ அவர்களே நாட்டை ஆள வேண்டும் என்ற ஒரு பரம்பரைக் கருத்து நிலவுவதை வைத்து இவ்வாறான சிந்தனை ஏற்பட்டிருக்கலாம். இதனால்த்தான் தெலுங்கு நாயக வம்சத்தைச் சேர்ந்த கண்டிய அரசர்கள் புத்தரின் பல்லைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு புத்த மதத்திற்கு சகல நன்மைகளையும் செய்து வந்தார்கள். கடைசி கண்டிய மன்னன் கண்ணுத்துரையே ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் என்ற பெயரை ஏற்றிருந்தான்.