வாழ்வின் சகல அமசங்களிலும் மனிதனை புனிதனாக்கும் மகத்தான ரமழான் !

– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

 ஷஹ்பான் மாதத்தின் இறுதிநாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் பின்வருமாறு உரையாற்றினார்கள், ‘மக்களே மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பறக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இந்த மாதத்திலேயே காணப்படுகிறது. இதன் பகழ்ப் பொழுதுகளில் நோன்பு நோற்பது கடமையாகும். இரவுப் பொழுதுகளில் நின்று வணங்குவது சுன்னத்தாகும்.

Ramadanஇதில் எவர் நற்காரியத்தைச் செய்கிறாரோ அவர் ஏனைய நாட்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியதைப் போலாகும். இது பொறுமையின் மாதம். பொறுமைக்குரிய கூலி சுவர்க்கமாகும். இது துயர் துடைக்கும் மாதம். இது ஒரு விசுவாசியினுடைய ரிஸ்க் அதிகரிக்கப்படும் மாதம். இதில் ஒருவருக்கு நோன்பு திறக்க உதவி செய்தால் அந்த செயல் அவருக்கான பாவ மன்னிப்பகவும் நரக விடுதலையாகவும் காணப்படும். இவருக்கும் நோன்பு நோற்றவரைப் போன்ற கூலி கிடைக்கும். அதேவேளை நோன்பாளியின் கூலியில் எந்தக் குறைவும் ஏற்படாது.   அறிவிப்பவர் ஸல்மானுல் பாரிஸி(ரழி)

“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

 மனிதன் தனது ஆசாபாசங்களை இச்சைகளை உள்ளுணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துதனது சொல் செயல அங்கீகாரம் உற்பட வாழ்வின் சகல அங்கங்களிலும் அமசங்களிலும் புனிதனாக்கப்படும் புனித மிகு மாதமே ரமழான் மாதமாகும். 

மனிதன் உடல் அறிவு ஆன்மா என்ற மூன்று பிரதான அம்சங்களை கொண்டிருக்கின்றான், மனித வாழ்வின் வெற்றி அல்லது தோல்வி குறித்து பேசப்படும் பொழுது இந்தமூன்று அம்சங்கள் குறித்தும் கவனம் செலுத்தப் பட வேண்டியது கட்டாயமாகும்.

மண்ணில்  வாழ்வதற்காக மண்ணினால் படைக்கப்பட்ட மனிதனுக்கு உடல் என்ற கட்டமைப்பு அமையப் பெற்றிருக்கிறது,இந்த உடல்  உயிருடன் இருப்பதனால் மனிதன் முழுமை பெறுவதில்லை, மனிதன் தனியாளாக குடும்பமாக சமூகமாக தேசமாக வாழ்வதற்கும் வாழ்வோடு தொடர்புபட்ட கல்வி கலை  கலாச்சாரம் பண்பாடு  நாகரீகம் என்றும் அரசியல் பொருளாதாரம் என வாழ்வின் அத்துணை அமசங்களையும்நிர்ணயித்துக் கொள்ள மனிதனுக்கு “அறிவு” அல்லது “பகுத்தறிவு” மற்றும் உள்ளுணர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

Thawba2மனிதனின் அறிவோடும் உள்ளுணர்வுகளோடும் இரண்டறக் கலந்த “ஆன்மா”  மனித வாழ்வில் எத்தகைய பங்கினை வகிக்கின்றது என்பதனைமனிதன் அறிய முற்பட்ட பொழுது மனிதனால் ஆராயப்பட்ட பல்வேறு சித்தாந்தங்கள் கொள்கைகள் கோட்பாடுகள் உலகில் தோற்றம பெற்றுள்ளன  இஸ்லாமியர்களை பொறுத்தவரையில் ஆன்மா ஆன்மிகம் குறித்த அருளப்பட்ட வேதங்களும் குறிப்பாக இறுதி இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் தெளிவாக காட்டித் தந்துள்ள அகீதா எனும் நம்பிக்கைக் கோட்பாடுகளாக விசுவாசித்துள்ளனர்.

மனிதனின் வாழ்வு குறித்து பல்வேறு கோட்பாடுகள் உலகில் இருக்கலாம் இஸ்லாமியர்களாகிய எங்களுக்கு வாழ்வும் மரணமும்  நிரந்தரமான மறுமை வாழ்விற்கான ஒரு சோதனைக் களம் மாத்திரமே, எனவே எமது தனி மனித குடும்ப சமூக தேசிய பொருளாதார அரசியல் கலை கலாச்சார பண்பாட்டு நாகரீக வாழ்வின் அனைத்து அமசங்களும் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைநெறியைதழுவியதாகவே இருக்க வேண்டும் என்பதில் நாம் ஆழமாக விசுவாசம் கொண்டுள்ளோம்.

அந்தவகையில் இஸ்லாம் விரும்புகின்ற வாழ்வு நெறி ஆழமான ஆன்மீக அடித்தளங்களில் மாத்திரமே கட்டி எழுப்பப் பட்டுள்ளமையை இஸ்லாமியநம்பிக்கைக் கோட்பாடுகள் உணர்த்துகின்றன, படைத்துக் காத்துப்பரிபாலிக்கின்ற ஏக வல்லோனாகிய அல்லாஹ்விடம் நாம் மீளுவோம், யுக முடிவுஇருக்கிறது, மறுமை நாளில் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோம், நாம்கேள்வி கணக்கின் போது விசாரிக்கப் படுவோம், சுவர்க்கம் நரகம் எனநிரந்தரமான வாழ்விடங்கள் எமக்காக சித்தப்படுத்தப்பட்டுள்ளன வானவர் ஜிப்ரீல் முதல் மலாயிகாமார்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்,எமக்கு முன்னால் பல வேதங்கள் அருளப்பட்டிருக்கின்றன என இன்னும் பல மறைவான விடயங்களிலும் முஸ்லிம்கள் ஆழமான  நம்பிக்கைகளை கொண்டுள்ளனர்.

Madinaஉண்மையில் இஸ்லாம் மனிதனின் உடல் அறிவு ஆன்மா ஆகிய மூன்று பிரதான அம்சங்களுக்கும் இடையில் சமநிலை பேணுகின்ற ஒரு அழகியவாழ்வு நெறியை எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளது, மண்ணிலே வாழுகின்ற மனிதனின்சடரீதியிலான ஆசாபாசங்களை தேவைகளை அறிவினாலும் ஆராய்ச்சியினாலும் உழைப்பினாலும் முயற்சியினாலும் அடைந்து கொள்கின்ற உலக வாழ்வின் அடைவுகளை வாழ்வின் வெற்றி தோல்வி குறித்த பெறுமானங்களாக கணிப்பீடுகளாக இஸ்லாமகருதுவதில்லை.

அதேவேளை உலக வாழ்வின் ஆசாபாசங்களை தேவைகளை இச்சைகளை முற்று முழுதாக துறந்து முனிவர்களாக சந்நியாசிகளாக துறவறம் பூணும் சமயத் துறவிகளாகவாழுமாறும் இஸ்லாம வலியுறுத்தவில்லை அவ்வாறான ஒரு ஆன்மீக மெஞ்ஞான பேரின்பத்தையும் இஸ்லாம் போதிக்க வில்லை.

ஆக,இஸ்லாமிய  ஆன்மிகம் ,இஸ்லாமிய நபிக்கைக் கோட்பாடுகள் உலக வாழ்வில் மனிதன் தனியாளாகவும் குடும்பமாகவும் சமூகமாகவும் தேசமாகவும் ஆசைகளையும்தேவைகளையும்  அடைந்து கொள்கின்ற போராட்டத்தை இறைவழியில் நெறிப்படுத்துகின்ற உயிரோட்டமுள்ள ஆன்மீகமாகும், மனிதன் தனது பொருளாதார சமூக அரசியல் கலைகலாச்சார பண்பாட்டு வாழ்வில் அல்- குரானும் சுன்னாவும் அவற்றினடியாக பெறப்பட்ட இஸ்லாமிய ஷரீஅத்தும் காட்டுகின்ற நெறிமுறைகள் பிறழாது முழுநேரஇறையுணர்வை இறையச்சத்தை  பேணுதலை விழிப்புணர்வை அவதானத்தை உள்ளுணர்வுகளை உந்துதல்களை இஸ்லாமிய ஆன்மிகம் மனிதனில் ஏற்படுத்துகின்றது.

ஆழமான ஆன்மீக பண்பாட்டு பக்குவப் பயிற்சிகளை ஒவ்வொரு விசுவாசியும் பெற்றிருத்தல் அவசியமாகிறது அந்த வகையில் அல் குரான்அருளப்பட்ட மாதம் முழுவதுமாக புனித நோன்பு கடமையாக்கப்பட்டு விசுவாசிகளுக்கான ஆன்மீக பயிற்சிகளை இஸ்லாம் கண்டிப்பாக கடமையாக்கியுள்ளது.

மனிதன் தனது ஆசாபாசங்களை இச்சைகளை உள்ளுணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துதனது சொல் செயல அங்கீகாரம் உற்பட வாழ்வின் சகல அங்கங்களிலும் அமசங்களிலும் புனிதனாக்கப்படும் புனித மிகு மாதமே ரமழான் மாதமாகும்.

DUA3அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் இடையில் உள்ள உறவை நோன்பு நெருக்கமாக்குகின்றது,ஒவ்வொரு தனிமனிதனினதும் நோன்பும் அதன் தராதரமும் அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையில் உள்ள மிகவும் இரகசியமானபந்தமாகும், அந்த உறவு ஆன்மீக உயர்வுகளை ஈடேற்றத்தை அடையச் செய்கிறது குடும்பத்திலும் சமூகத்திலும் தேசத்திலும் ஒரு மனிதப் புனிதரை அவதரிக்கச்செய்கிறது, ஒரு மாத காலம் பெறப்படும் ஆன்மீக பண்பாட்டுப் பக்குவப் பயிற்சிகள் ஏனைய பதினோரு மாதங்களிலும் மனிதனை உயரிய மனித விழுமியங்களுடன்குண நலன்களுடன் வாழ வைக்கின்றது.

அல்குரான் அருளப்பட்டதால் ரமழான் மாதம் புனிதம்,மகத்துவம் பெற்றது,

லைலதுல் கத்ர் ஆயிரம் மாதங்களை விட சிறப்படைந்தது, எங்கள் உயிரிலும் மேலான முஹம்மத் (ஸல்) அவர்கள மீது அல் குரான் அருளப்பட்டு அகிலத்தாருக்கு இறுதி இறைதூதரை அறிமுகப்படுத்திய புனிதமிகு மாதம்.  இது அல் குரானுடயதும் அல் சுன்னாஹ் வினதும் மாதமாகும்.

“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு(முழுமையான வழிகாட்டியாகவும்,தெளிவான சான்றுகளைக்கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமானஅல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.   

ஆகவே,உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;.எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;.அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும்,  உங்களுக்கு  நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின்மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ்இதன் மூலம் நாடுகிறான்).”

(ஸுரத்துல் பகறா:185)

 இன்னும் முறையாக அணுகப்படாத,புரியப்படாத அல் குரான்…

 “நிச்சயமாக,இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” (54:17)

“மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? “ (47:24 )

Quraanஅல் குரான் யாருக்கு வழிகாட்டும்..?

 இது,(அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;,இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, (தக்வா) இறையச்சம் உடையோருக்கே (இது) நேர்வழிகாட்டியாகும் (ஸுரத்துல் பகறா:02)

நோன்பு அதற்குரிய அடிப்படை தகைமையை பெற்றுத்தரும்.!

 :ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் (தக்வா) இறையச்சம் உடையோராக ஆகலாம்.” (ஸுரத்துல்பகறா:183)

 

யா அல்லாஹ்..!!

அல்-குர்ஆனைக் கொண்டு எங்கள் ஆன்மாக்களையும்,உள்ளங்களையும்,அறிவு ஆற்றலையும்,செயற்பாடுகளையும் ஒளிபெறச் செய்வாயாக..! அல்-குர்ஆனின் மாதமான ரமழான் சுமந்து வரும் சுப சோபனங்களுக்கு உரித்துடையவர்களாக எம் அனைவரையும் ஆக்கியருளவாயாக.! எங்கள் பெற்றாரகளது பாவங்களை மன்னித்து அவர்கள் மீது ஈருலக வாழ்விலும் கருணை காட்டுவாயாக.

புனிதமிகு ரமழான் மாதமும் இப்தார் ஏற்பாடுகளும்!

அல்-குரான் அருளப்பட்ட புனிதமிகு ரமழான் மாதத்தில் மனிதர்களை புனிதர்களாக்குவதற்காகவே நோன்பு கடமையக்கப்பட்டிருக்கின்றது, நாம் பெறும் உயரிய ஆன்மீக, தார்மீக, பண்பாட்டு பெறுமானங்களின் வெளிப்பாடுகளாக பரோபகாரம்,தயாளகுணம், இல்லாதவர், இயலாதவர் மீதான கருணை, ஏழை எளியவர் மீதான கரிசனை போன்ற செயல் வடிவங்கள் காணப்படுகின்றன.

ramadanஒருவரை நோன்பு துறக்கச் செய்பவருக்கு நோற்றவரின் நன்மையில் எதுவித குறைவுமில்லாமல் அதற்கீடான நன்மைகள் கிடைப்பதாக எங்கள் உயிரிலும் மேலான இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) கூறியுள்ளதன் மூலம் சமூகத்தில் உள்ள ஏழை எளியவர்கள், நிர்க்கதியில் உள்ளவர்கள், வழிபோக்கர்கள் என தேவையுடைய அனைவர் மீதான சமூக அக்கறையையும் உம்மத்தின் மீது வலியுறுத்தியுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் அல்-குரானும் சுன்னஹ்வும் வலியுறுத்துகின்ற சமூககடப்பாடுகளின் அடிப்படை இலக்குகளை ஆழமாக மனதில் இருத்தியவாறே நாம் இப்தார் ஏற்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

இப்தார் ஏற்பாடுகளை வெறுமனே மற்றுமொரு நூதனமான சடங்காகவோ,சம்பிரதாயமாகவோ, விஷேட விழாவாகவோ, ஆடம்பரமான கொண்டாட்டமாகவோ, தனிநபர், இயக்க ,வியாபார விளம்பரங்களாகவோ நாம் மேற்கொள்வோமாயின் நிச்சயமாக நல்லதே செய்வதாக எண்ணிக் கொண்டு மிகப்பெரும் தவறினையே நாம் இழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏழை எளிய மக்கள், பசி ,பட்டினி, வறுமையில் உள்ளவர்கள் சஹர் செய்வதற்கே போதுமான உணவுப் பொருட்களை கொண்டிராத பொழுது வகை வகையான சிற்றுண்டிகளையும், வகையறாக்களையும், ஆடம்பரமான உணவுவகைகளையும் அளவுக்கதிகமாக கொண்ட இப்தார் ஏற்பாடுகளை செய்வதில் இருந்து அல்லது அவற்றை “இப்தாருஸ் ஸாயிம்” எனற அடையாளத்துடன் செய்வதில் இருந்து நாம் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளுடன் இஸ்லாமிய வழிகாட்டல் விழிப்புணர்வு மற்றும் சன்மார்க்க வரையறைகளை மீறாத சமாதான சகவாழ்வு நிகழ்வுகள் அத்தோடு நோன்பு தரும் ஆன்மீக பண்பாட்டு ஒழுக்கவியல் மாண்புகளை அடுத்த சமூகங்களும் புரிந்து கொள்ளச் செய்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் ஆகுமானவையே.

என்றாலும் நாம் வாழுகின்ற சூழல், கள நிலவரங்கள் என்பவற்றையும் அடுத்த சமூகங்களின் உணர்வுகளையும் கருத்தில் எடுத்து மிகவும் சமயோசிதமாகவும் சமுதாய மற்றும் மஹல்லாக்களின் கூட்டுப் பொறுப்போடும் உலமாக்கள், புத்திஜீவிகள் சமூக ஆவலர்களின் ஆலோசனைகளோடும் அவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.

Iftharநாம் வாழ்கின்ற சூழலில் புனித ரமழான் எமக்கு வழங்குகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களின் பிரதிபலிப்புக்களான தாராளத் தன்மையும், தாள குணமும் பரோபகாரமும் அடுத்த சமூகங்களையும் அரவணைத்துச் செல்கின்ற அழகிய செயல் வடிவ முன்மாதிரிகள் விண்ணைப் பிளக்கும் ஒலிபெருக்கிப் பீரங்கிப் பிரசங்கங்களினை விடவும் ஆக்க பூர்வமான பிரதிபலன்களை கொண்டிருக்கும்.

விஷேட இப்தார் நிகழ்வுகளுக்கு என சமூக அமைப்புக்களும், இளைஞர் மாதர் அமைப்புக்களும், பலகலைக்கழக சமூகத்தினரும் ஏற்பாடுகள் செய்கின்ற பொழுது ஒருவர் வளவாளராகவும் மற்றெல்லாம் வலவலார்களாகவும் இருக்கின்ற அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், குறிப்பாக அடுத்த சமூக சகோதரர்கள் வருகை தந்திருக்கும் நிலையில்   நாம் எத்தகைய நடைமுறை வியாக்கியானத்தை செய்து கொண்டிருக்கின்றோம் என்பதனையும் கவன்த்த்சில் எடுக்க வேண்டும்.

அவ்வாறு ஏற்பாடு செய்கின்ற நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவோர் அதான் சொல்லும் வரை வெளியில் நின்று அரட்டையடிப்பதும் அல்லது இறுதி நேரத்தில் வருகை தருவதும் எதிர்பார்க்கப்படுகின்ற அடைவுகளை தருவதில்லை எனபதனையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அதான் சொன்னவுடன் குறுகிய நேரத்திற்குள் நோன்பை துறந்து விட்டு மஃரிபுத் தொழுகையை உரிய முறையில் எல்லோரும் நிறைவேற்றுவதனை அதற்காக அமைதியாக தயராவதனை நாம் உறுதி செய்து கொள்ளுதல் கட்டாயமாகும்.

மஸ்ஜிதுகளில் ஆண்களுக்கு மாத்திரம் தொடர்ந்து இப்தார் ஏற்பாடுகளை செய்வதும் பெண்களையும் குழந்தைகளையும் பெரியவர்களையும் மறந்து விடுவதும் முறையான இப்தார் ஏற்பாடுகளாக இருக்கவே மாட்டாது. அவர்களை மஸ்ஜிதுகளுக்கு அழைத்துவர முடியாத நிலை இருப்பதனால் அவற்றிற்கான மாற்றீட்டு ஏற்பாடுகள் குறித்து மஹல்லாக்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்.

Noiceஇப்தாருக்காக கிடைக்கப்பெருகின்ற பேரீத்தம் பழங்கள் மற்றும் இன்னோரன்ன உலருணவுப் பொருட்களை மஸ்ஜிதுகளூடாகவே எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் வினியோகம் செய்தல் வேண்டும், இயக்கங்கள் அமைப்புக்கள் தமக்கு கிடைப்பவற்றையும் மஸ்ஜிதுகளூடாகவே வழங்குதல் வேண்டும், அவ்வாறு கிடைப்பவை பெரும்பாலும் ஏழை எளியவர்களுக்காக வக்பு செய்யப்பட்டவை என்பதானால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதனை மஸ்ஜிதுகள் வழக்கபப்டுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களில் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படை இலக்குகளை மறந்து விடாது உரிய வரை முறைகள் பேணி எமது இப்தார் நிகழ்வுகளை நாம் அமைத்துக் கொள்ள முயற்சிப்போம், எமது குறை குற்றங்களை மன்னித்து அனைவரது உளத் தூய்மையான அனைத்து செயற்பாடுகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரித்து அருள்புரிவானாக!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s