சாய்ந்தமருதுவில் நேற்று இரவு நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் 15 சடலங்களை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என போலீஸ் உடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆறு பேரில், மூன்று பேர் தங்களது குடும்பத்துடன் இறந்துள்ளனர். 

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினரால் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று, சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வெடி சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்துக்கு அருகே வசித்து வந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் பிரார்த்தனைகள், மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க தேவாலயம் அறிவித்துள்ளது.