– பழுலுல்லாஹ் பர்ஹான்  
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி நபர்களுக்கு சொந்தமான இரண்டு மீன்பிடி படகு 21 நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி படகுகளில் ஒரு படகின் முன்பகுதி அதிகம் சேதமடைந்துள்ளதாகவும் மற்றைய படகு  சிறிதாக சேதமடைந்துள்ளதாகவும் இதனை சரி செய்வதற்கு சுமார் 20 இலட்சம் ரூபா தேவைப்படும் எனவும் குறித்த செயலில் ஈடுபட்டவர்களை பொலிசார் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி நட்ட ஈடுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த படகு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும்  படகு உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.