ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட கொழும்பின் பிரபல பாதாள உலகத் தலைவனும் போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான கஞ்சிபானை இம்ரான் எனப்டும் 34 வயதான மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் இன்று டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
இதன்போது அவருடன் அமீரகத்தில் கைதான 38 வயதான ஜங்கா எனப்படும் தும்பேதொரஹேவா தனுஷ்க கெளஷால், ரொட்டும்ப அமில என்ப்படும் 37 வயதான அமில சம்பத்சேபால ரத்நாயக்க மற்றும் 42 வயதான கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அண்டர்ஷன் பேர்டினன்ஸ் ஆகியோரும் நாடு கடத்தப்பட்டனர்.
காலை டுபாயில் இருந்து வந்த பிளய் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான எப்.இஸட்.547 எனும் விமானத்திலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், காலை 6.15 அளவில் இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் பொறுப்பேற்றனர்.
இதன்போது கஞ்சிபானை இம்ரானும், ரொட்டும்பே அமிலவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யூ.எல்.101 எனும் ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானத்தில் மாலைத் தீவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு தரப்பினர் அதற்கு முன்பதாக தமது பொறுப்பில் அவர்களை எடுத்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந் நிலையில் இன்று மாலை வரை கட்டுநாயக்க விமான நிலைய சி.ஐ.டி. பிரிவில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கன்ஞ்சிபானை இம்ரான் சி.சி.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 4 கொலைகள் மற்றும் 14 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் அந்த பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.