முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது.

முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்ட வகையில் நடைபெற்ற இனக் கலவரமானது கடந்த வருடம் அம்பாறை ஹோட்டல் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டு பின்பு அது கண்டி மாவட்டம் முழுவதும் அரங்கேற்றப்பட்டதுடன் நாடு முழுக்க அதன் தாக்கம் உணரப்பட்டது. .   கடந்த வருடம் மார்ச் மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் எட்டாம் திகதி வரைக்கும் இந்த நாட்டில் எந்தவொரு சிவில் நிருவாகமோ, அரச இயந்திரமோ இயங்கவில்லை. 

அத்துடன் மக்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு படையினர்கள் முகாமை விட்டு வெளியேறாமல் முகாமுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தர்கள். அவர்கள் இருந்த பகுதிகளில் வன்முறைகள் நடைபெற்றபோது அங்கிருந்த பாதுகாப்பு படையினர்கள் வேறு இடங்களுக்கு பின்வாங்கிய சம்பவங்களும் நடைபெற்றது. 

சிங்கள இனவாதிகள் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது காடைத்தனத்தினை அரங்கேற்றியபோது குறித்த தினங்களில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதற்கோ, வண்முறையை கண்டிப்பதற்கோ, பாதுகாப்பதற்கோ அல்லது உதவுவதற்கோ எந்தவொரு சிங்கள தலைவர்களும் முன்வரவில்லை. 

இலங்கை கிரிக்கட் வீரர் சங்கக்கார அவர்கள் பகிரங்கமாக முஸ்லிம்களுக்காக அனுதாபம் தெரிவித்த பின்புதான் அனைவரும் வாய் திறந்தார்கள்.      

2018 பெப்ரவரி 20ஆம் திகதி கண்டியின் தெல்தெனிய பகுதியில் ஒரு லொறியும், ஆட்டோவும் மோதிக்கொண்டதையடுத்து ஏற்பட்ட வாய்த் தகராறில் ஆட்டோவில் வந்த நான்கு முஸ்லிம் இளைஞர்கள் லொறியை ஓட்டிவந்த சிங்கள இளைஞ்சனை தாக்கினர். 

காயமடைந்த லொறி ஓட்டுனர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்பு முஸ்லிம் இளைஞ்சர்கள் நான்கு பேரும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார்கள். 

சுமார் இரு வாரங்கள் மருத்துவமனையில் இருந்த சிங்கள இளைஞ்சன், மார்ச் 3ஆம் திகதியன்று உயிரிழந்தான். இன வன்முறையினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் குறித்த சிங்கள இளைஞ்சனை கொலை செய்திருக்கலாம் என்றே கூறப்பட்டது. 

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவனது விகாரமான உடலை சிங்கள மக்கள் மத்தியில் காட்சிபடுத்தியே சிங்கள இளைஞ்சர்கள் உணர்ச்சியூட்டப்பட்டு முஸ்லிகளுக்கெதிராக களம் இறக்கப்பட்டார்கள். 

அதனை தொடர்ந்து முஸ்லிம்களின் கடைகளும், வீடுகளும் கொள்ளையிடப்பட்டு பின்பு எரியூட்டப்பட்டது. 

பள்ளிவாசலினுள் புகுந்த காடையர்கள் அங்கிருந்த குரான்களை எரித்ததுடன், பள்ளிவாசலையும் சேதப்படுத்தினார்கள்.   

அப்போதைய கணக்கெடுப்பின்படி கண்டி, திகன வன்முறை சம்பவங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 445 வீடுகளும், கடைகளும், 24 பள்ளிவாசல்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும், இதன் பெறுமதி எண்ணூற்றி எண்பத்தைந்து கோடி ரூபாய்கள் என்றும், 28 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு செய்தது. 

ஆனால் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பினைவிட அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அப்போது அறிக்கைகள் தெரிவித்தன.  

இவ்வளவு பாரிய இனக்கலவரம் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியாகியும், முஸ்லிம்களாகிய நாங்கள் அதிலிருந்து எந்தவித படிப்பினைகளையும் பெறாமலும், எதிர்கால எமது பாதுகாப்பு பற்றி சிந்திக்காமலும், அபிவிருத்தி என்னும் மாயையில் சிக்குண்டு வாழ்ந்து வருவதுதான் வேடிக்கையாக உள்ளது.