சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, மீண்டும் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய அவர், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் (05) கூடிய அமைச்சரவையில் அவரை மீண்டும் அப்பதவியில் நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அவரை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மீளப் பெற்றுள்ளார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த அமைச்சரவை பத்திரம் மீள் பெறப்பட்டுள்ளதோடு, அவரை மீண்டும் பதவியில் நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

உரிய காரணங்கள் குறிப்பிடப்படாமல் சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக, சுங்க திணைக்கள தொழிற்சங்கங்கள் கடந்த வாரம் முதல், சட்டப்படி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், புறக்கோட்டையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மொத்த வியாபாரிகளும் அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்களும் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி இன்றைய தினம் (05) ஹர்த்தால் அனுஷ்டித்தமை குறிப்பிடத்தக்கது.