“தேசியத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுக்கே வெற்றி கிட்டும்” – பிரிட்டிஷ் அமைப்பு

பிரிட்டனின் பல்தேசிய ஊடகக் கம்பனியான எக்கனோமிஸ்ற் குரூப்பின் ஒரு அங்கமாக இயங்கும்எக்கனோமிஸ்ற் இன்ரெலிஜென்ஸ் யூனிற்‘  உலக விவகாரங்களையும் சர்வதேச வர்த்தக நிலைவரங்களையும் கிரமமாக ஆய்வுசெய்து எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றை முன்கணிப்புச்செய்யும்  சேவைகளையும் ஆலோசனைசேவைகளையும் வழங்கிவரும் ஒரு பிரபலமான அமைப்பாகும்

அது இலங்கையின் தற்போதைய அரசாங்கம் வருட இறுதியில் வீழ்ச்சிகண்டுவிடும் என்றும் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் என்றும் கூறியிருக்கிறது.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெறும் சாத்தியம் இருக்கிறது என்று அந்த அமைப்பு கூறியிருந்தபோதிலும் மைத்திரிபால சிறிசேனவே வெற்றிபெற்றார்.

அப்போது அவ்வாறான ஒரு தவறான முன்கணிப்பை வெளியிட்ட அமைப்பு இப்போது பொதுஜன பெரமுனவே தேசியத் தேர்தல்கள் இரண்டிலும் வெற்றிபெறும் என்று உறுதியாகக்கூறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் இவ்வருட இறுதிக்கு முன்னதாக முனகூட்டியே இலங்கையில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவே கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றும். தேர்தல்களுக்கு முன்னரான காலகட்டத்தில் அரசாங்கம் பலவீனமடைந்து அரசியல் நிலைவரம் உறுதியற்றதாக மாறும் 2020 நடுப்பகுதிக்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டியதில்லை என்றபோதிலும் 2019 பிற்பகுதியில் முன்கூட்டியே அது நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நடக்கும்போது பொதுஜன பெரமுன மிகக்கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றி அரசாங்கத்தை அமைக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றும் எக்கனோமிஸ்ற் இன்ரெலிஜென்ஸ் கூறியிருக்கிறது.

2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்களில் பொதுஜன பெரமுன பெற்ற மகத்தான வெற்றி அந்தக் கட்சிக்கு இருக்கின்ற பெரும் மக்கள் செல்வாக்கையும் அரசாங்கம் மீது மக்களுக்கு இருந்த கடுமையான வெறுப்பையும் தெளிவாக வெளிக்காட்டின என்று நினைவுபடுத்தியிருக்கும் அறிக்கை  அண்மைக்காலத்தில் இடம்பெற்ற அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் பொதுஜன பெரமுனவிற்கு வாக்காளர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும் ஆனால், அந்தப் பாதிப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

அடுத்த தேர்தல்களில் பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என்று நாம் தொடர்ச்சியாக முன்கணிப்புச் செய்துவருகின்றோம். 2015 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் பிரகாரம் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு பாதை திறந்தேயிருக்கிறது.வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவின் நெருங்கிய சகா ஒருவர் அல்லது அவரின் உறவினர் ஒருவர் வெற்றிபெறுவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டபோதிலும் அரசாங்கத்தின் எஞ்சிய பதவிக்காலம் அரசியல் உறுதிப்பாட்டுக்கு ஆபத்தைக்கொண்டுவரக்கூடிய பல நிகழ்வுகளைக் காணவேண்டியிருக்கும்.நிறைவேற்று அதிகார பீடத்துக்கும்  பாராளுமன்றத்துக்கும் இடையிலான பதற்றம் நீடித்து 2019 இல் அரசாங்கம் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்று நாம் நம்புகிறோம்.

மேலும்,  சேர்ந்து பணியாற்றுவதில் அரசாங்கத்தின் வெவ்வேறு மட்டங்களுக்கு( கடுமையான கொள்கை வேறுபாடுகள் காரணமாக ) இருக்கின்ற இயலாமை அரசியல் உறுதிப்பாட்டைப் பாதிக்கும். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் விரைவில் நொய்தானதாக மாறக்கூடிய சாத்தியம் இருக்கிறது.அரசாங்கத்துக்கு வெளியே இருக்கும் சிறுபான்மையின கட்சிகளின் ஆதரவில் அரசாங்கம் தங்கியிருப்பதால் பதவிக்காலம் நிறைவடையும்வரை அது தாக்குப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் வெகு குறைவாக இருக்கும்.பலவீனமான பாராளுமன்ற நிலை மற்றும் தொடருகின்ற அரசியல் பூசல்கள் காரணமாக இவ்வருட இறுதியில் அரசாங்கம் வீழ்ச்சியடைந்து முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டிய நிலை உருவாகக்கூடும்.

அந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான நிருவாகம் பதவிக்குவரும் என்றும் இலங்கையின் அரசியல் நிலைவரத்துக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற உறுதிப்பாட்டை புதிய அரசாங்கம் கொண்டுவரும் என்று நாம் எதிர்வு கூறுகிறோம் என்று எக்கனோமிஸ்ற் இன்ரெலிஜென்ஸ் யூனிட்டின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s