எம்.எஸ்.எம்.ஸாகிர்

கல்முனையில் உள்ள பெண்கள் கல்விகற்கும் பிரபல பாடசாலையான மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐ.எல்.ஏ. ரஹ்மான் நியமிக்கப்பட்டு,  உத்தியோகபூர்வமாக கடந்த திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதே பாடசாலையில் நீண்ட காலம் ஆசிரியராகவும், உயர்தர பிரிவுக்கான பகுதித் தலைவராகவும் செயற்பட்டு, மாணவர்களின் முன்னேறத்திலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பங்களிப்பைச் செய்திருந்தார்.

அவர், பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி என்பதுடன் 1984 ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று, கடந்த 34 வருடங்கள் கல்வித்துறையில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.

2009 ஆண்டு அதிபர் சேவைக்கான (SLPS) போட்டி பரீட்சையில் சித்தியடைந்து, அதிபர் சேவையில் இணைந்த இவர், இப்பாடசாலையில் பிரதி அதிபராகவும், சிலகாலம் அதிபராகவும் சேவையாற்றிள்ளார்.  2015 ஆண்டு அதிபர் தரம் ஒன்றுக்கு (SLPS & I) பதவி உயர்வு பெற்று, சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளராக நியமனம் பெற்றதோடு, சாய்ந்தமருதின் கல்வி முன்னேற்றத்துக்கு முக்கிய பங்களிப்பாளராகத் திகழ்ந்தார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, இப்பாடசாலையில் அதிபராக நியமனம் பெற்ற அவர், கல்வித் துறையில் பல பட்டங்களை பெற்றார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பீ.ஏ. பட்டம் பெற்றதோடு, பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE) சிறப்பு தேர்ச்சி, பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா (DSM)  சிறப்பு தேர்ச்சி, பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா  (PGDEM) சிறப்பு தேர்ச்சி, இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உளவியல் டிப்ளோமா போன்ற பட்டங்களை பெற்று அனைத்து டிப்ளோமா கற்கையிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

தற்போது ‘கல்விமுகாமைத்துவம்’ கற்கையில் MSC பட்டத்துக்காக தனது ஆய்வு கட்டுரையையும் சமர்பித்துள்ள அதிபர் ஐ.எல்.ஏ. ரஹ்மான், இப்பாடசாலையை பற்றி நன்கு அறிந்தவர் என்பதுடன் கடந்த காலத்தில் இவரது சேவையால் பாடசாலை பல சாதனைகளையும் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்க வியமாகும்.

சிறந்த ஆளுமையும், தலைமைத்துவ இயல்பும், அனைவரோடும் நேர்மையாக பழகும் பண்பும் கொண்ட ஐ.எல்.ஏ. ரஹ்மான் அதிபரின் வருகையைத் தொடர்ந்து கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மேலும் முன்னேற்றமடைந்து பல சாதனைகளைப் புரியும் என்பதற்கு ஆசிரியர் குழாம் ஒன்றாக நின்று ஒருமித்து அதிபரை வரவேற்றமை எடுத்துக் காட்டாகும்.