இலங்கை அரசு ஒவ்வொரு வருடமும் 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றபோதிலும்,அவர்களுள் 200 பேர் வெளிநாடுகளுக்கும் தனியார் வைத்தியசாலைகளுக்கும் சென்று விடுகின்றனர்.மீதி வைத்தியர்களை நாட்டில் உள்ள அணைத்து வைத்தியசாலைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து மிகவும் சிரமத்தின் மத்தியில் சிறந்த சேவையை வழங்கி வருகிறோம் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் கூறினார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் அரச ஒசுசல கட்டட திறப்பு விழாவும் புனர்வாழ்வு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பைசல் காசீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று காலை [16.08.2018] இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் பல குறைபாடுகள் உள்ளன.வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு உள்ளது.ஒரு வருடத்துக்கு நாம் 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றோம்.

அவற்றுள் 200 பேர் எங்களை விட்டுச் செல்கின்றனர்.இவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர்.மீதியாகவுள்ள ஆயிரம் வைத்தியர்களை நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றோம்.இன்னும் 150 வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்க முடியாமல் உள்ளோம்.

அதேபோல்,2200 வைத்திய ஆலோசகர்கள் சுகாதார அமைச்சின்கீழ் வேலை செய்கின்றனர்.அதிகமான ஆலோசர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.இது கவலைக்குரிய விடயம்.

இவ்வாறான குறைபாடுகளுடனும் சவால்களுடனும்தான் நாம் இந்த சுகாதார சேவையை சிறந்த முறையில் வழங்கி வருகின்றோம்.இன்னும் இரண்டாயிரம் இருதய சத்திர சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

இவ்வாறான குறைபாடுகளின் மத்தியில் எமது வைத்தியர்களும் தாதியர்களும் சிறந்த சேவையை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.அதற்காக அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொளிறேன்.

ராஜித சேனாரத்ன அவர்கள் சுகாதார அமைச்சராக வந்ததன் பின்தான் வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொடுத்துள்ளார்.எல்லா வைத்தியர்களுடனும் பேசி பிரச்சினையைத் தீர்க்கின்றார்.

அவர் எல்லா மாவட்டங்களையும் சமமாகப் பார்த்து அபிவிருத்தி செய்கின்றார்.அவர் இனவாதமற்ற நீதியான மனிதர்.நான் 14 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன்.எனது இந்தக் காலத்துக்குள் பல சுகாதார அமைச்சர்களைக் கண்டுவிட்டேன்.அவர்கள் அனைவரும் அவர்களின் மாவட்டங்களை மாத்திரம் அபிவிருத்தி செய்பவர்களாகவே இருந்திருக்கின்றனர்.அவர்கள் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்வர்.ஆனால்,ராஜித மட்டும்தான் முழு நாட்டிலுமுள்ள வைத்தியசாலைகளையும் சமமாகப் பார்த்து அபிவிருத்தி செய்கிறார்.

இப்போது யாழ்.மாவட்ட மக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் ஒசுசலவில் 48 மருந்துப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.இது யாழ்.மக்களுக்கு கிடைத்த பாக்கியமாகும்.

எனது ஊரில் ஒசுசல ஒன்றைத் திறந்தோம்.அப்போது இரண்டாயிரம் ரூபாவுக்கு வாங்கப்பட்ட மருந்தை அந்த மக்கள் ஒசுசலவில் 200 ரூபாவுக்கு வாங்குகின்றனர்.அதற்காக நாம் ஒசுசலவில் தரம் குறைந்த மருந்துகளைக் கொடுக்கவில்லை.இதனால் ஏழைகள் நன்மை அடைகின்றனர்.

வைத்திய புனர்வாழ்வு நிலையம் ஒன்று இல்லாததால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.அவ்வாறானவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கும் வகையில் இப்போது புனர்வாழ்வு மையம் ஒன்று யாழில் அமைக்கப்படவுள்ளது.அதற்கான நிதியை குவைத் ரெட் கிரஸண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.அவர்களுக்கு நாம் நன்றி கூறுகின்றோம்.-என்றார்.

[ பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு ]