காத்தான்குடி போக்குவரத்துப் பொலீசாரின் பிழையான பார்வையும், அநியாய அபாரதமும்!

Police–  புவி எம் ஐ ரஹ்மதுல்லாஹ்

காத்தான்குடி: இன்று 23.07.2015 வியாழக்கிழமை காலை 11.45 மணிக்கு புதிய காத்தான்குடியிலுள்ள எனது வீட்டிலிருந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராகக் கல்வி பயிலும் எனது மகளுக்கான பகலுணவை எடுத்துக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி எனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்.

கல்லடிப் பாலத்தில் நுழைவதற்கு 20 மீட்டர் அளவு இருக்கும் தூரத்தில் எனக்குப் பின்னால் வேகமாக வந்த லொறியொன்று முந்திச் செல்வதற்கு மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லொறிக்கு இடமளிக்கும் வகையில் நான் எனது மோட்டார் சைக்கிளை இடதுபக்கமாகச் செலுத்தியபோது, வீதியின் மறுபுறத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொலீசார் சைகை காட்டி என்னை நிறுத்தினர்.

எனக்குப் பின்னால் வந்த லொறி என்னைக் கடந்து சென்றதன் பின்னர் என்னிடத்தில் வந்த மோட்டார் போக்குவரத்துப் பொலீசார், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கேட்டார். அதனை நான் அவரிடம் கொடுத்தேன். அதனைக் கையில் வாங்கிக் கொண்ட அவர், ‘இடதுபக்க வெள்ளைக் கோட்டுக்கு அப்பால் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியது குற்றமல்லவா?’ எனக் கேட்டார்.

Police

அதற்கு நான், ‘எனக்குப் பின்னால் வந்த லொறி ஒலியெழுப்பியவாறு வேகமாக வந்ததால்தான் அதற்கு இடமளிக்கும் நோக்கத்துடன் நான் எனது சைக்கிளை ஓரமாக்கிச் செலுத்தினேன். நீங்கள் குற்றம் பிடிப்பதானால் இந்தப் பாலத்தின் ஏற்றத்தில் பின்னால் வரும் வாகனம் முந்திச் செல்வதற்கு அவசரப்பட்டதைத்தான் அவதானித்து அந்த வாகனத்தையே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். நான் இடது பக்க வெள்ளைக் கோட்டைத் தொட்டவாறு எனது வாகனத்தை ஓரமாக்கி இருக்காவிட்டால் என்னை மோதிக் கொண்டல்லவா அந்த லொறி சென்றிருக்கும்?’ என்றேன்.

எனது விளக்கத்தால் சினமுற்ற அந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி, நான் சட்டம் பேசுவதாகக் கோபப்பட்டார். நான், ‘சட்டத்தை வீதியில் நின்று பேச முடியாது. அதை நீதிமன்றத்தில்தான் பேச வேண்டும். நான் நீங்கள் கூறிய குற்றச்சாட்டுக்குரிய எனது விளக்கத்தைத்தான் கூறினேன். உங்களின் பார்வையில் எனது செயற்பாடு குற்றமாகத் தெரிந்தால் நீங்கள் உங்களின் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

இந்த நேரத்தில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் இன்னமொரு மோட்டார் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி வந்தார். அவர் என்னை முன்னதாக விசாரித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு அடையாளப்படுத்தினார். இவர்தான் காத்தான்குடியில் வெளிவரும் பத்திரிகையின் ஆசிரியர். மினிஸ்டர் ஹிஸ்புல்லாவின் போட்டோக்களைப் போட்டு அவரை விமர்சிப்பவர் என்று அந்தப் போலீஸ் அதிகாரியிடம் அவர் சொன்னார்.

Police

நான் அவரிடம் ‘தயவு செய்து மீடியா விடயங்களை இவ்விடத்தில் பேச வேண்டாம். அது எனது தொழில். நீங்கள் இங்கே உங்களின் கடமையைச் செய்யுங்கள்’ என்றேன். இப்போது, என்னை தடுத்து நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிக்கு என்னைப் போக விடுவதா? அல்லது என்மீது நடவடிக்கை எடுப்பதா? என்ற நிலைமை ஏற்பட்டது.

சிறிது நேரத்தின் பின் அவர், ‘அங்கிள்.. நான் 100 ரூபாவுக்கு சிறிய அபராதம் விதித்து பற்றுச்சீட்டுத் தருகிறேன்’ என்றார். அதற்கு நான், ‘நீங்கள் தொகையை நிர்மாணிக்கவோ, கூட்டல் குறைத்தல் செய்யவோ வேண்டியதில்லை. உங்களின் பார்வையில் எனது குற்றம் எப்படிப்பட்டது எனத் தெரிகின்றதோ அதற்கான நடவடிக்கையை எடுக்கலாம். தயவு, தாட்சண்யம் காட்டத் தேவையில்லை’ என்றேன். நான் இவ்வாறு சொன்னதும், இடையில் வந்து என்னை அடையாளம் காட்டிய அந்தப் போக்குவரத்துப் பொலீஸ் அதிகாரி தன்பாட்டில் அங்கிருந்து சென்று விட்டார்.

இதன் பின் அந்த மோட்டார் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி என்னை 500 ரூபா அபாரதம் செலுத்தி விட்டு வருமாறு உரிய பத்திரங்களைத் தந்து, எனது சாரதி அனுமதிப்பத்திரத்தையும் தன்வசம் வைத்துக் கொண்டார்.

என்னிடம் கையளிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான பதில் உத்தரவுப்பத்திரத்தில் 05.08.2015ம் திகதியன்று நீதிமன்றத் திகதி குறிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்துடன் இந்த பதில் உத்தரவுப்பத்திரமும் காலாவதியாகுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் உண்மையில் குறித்த போக்குவரத்துப் போலீசாரின் பார்வையும், அவதானிப்புமே பிழையாகும்.

எனக்குப் பின்னால் அதிவேகமாக முந்திச் செல்வதற்கு ‘ஹோர்ன்’ ஒலித்தவாறு வந்த குறித்த லொறிச் சாரதியையே அவர்கள் சைகை செய்து தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். கல்லடிப்பாலம் அண்மித்த நிலையில் நான் எனது மோட்டார் சைக்கிளை வெள்ளைக் கோட்டைத் தொட்டதாக ஓரப்படுத்தாமல் சென்றிருந்தால், என்மீது குறித்த லொறி மோதியிருந்தால் நானே எனது சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகி அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பேன். சிலவேளை ஆற்றுக்குள் மோதுண்ட நிலையில் தூக்கி வீசப்பட்டும் இருப்பேன்.

எனது வாகனத்தையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் மக்கள் நடமாட்டமோ, துவிச்சக்கர வண்டிகளின் போக்குவரத்தோ அறவே இல்லாதிருந்த அந்த நேரத்தில் நான் அவசரப்பட்டு முந்திச் செல்ல வழி கேட்டு வரும் பெரிய வாகனமொன்றுக்கு வழி விட்டு ஓரமாகிச் சென்றது குற்றமா?

காத்தான்குடி மோட்டார் போக்குவரத்துப் பொலிசார் வீதிகளில் நின்று சைகை காட்டி நிறுத்திவிட்டால் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது அவர்களின் அழுக்குப்படியாத பரிசுத்தமான கைகளுக்குள் ஏதாவது திணித்தாக வேண்டும் என்கிற நியதி நடைமுறையிலுள்ள சாதாரண விடயமாகும்.

இதற்குப் பிரதான காரணம், எமது மக்களுக்கு நீதி, நியாயத்தை வேண்டி நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கு நேரம் இல்லை. ஒன்றில் இடைமறிக்கின்ற போக்குவரத்துப் பொலிசாரின் கையில் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம் போன்ற ஆவணங்களுடன் ஏதாவது ஒரு தொகையைத் திணித்து அவ்விடத்திலேயே விவகாரத்தை முடித்துக்கொண்டு கழன்று சென்று விடுவார்கள். அல்லது நீதிமன்றத்தில் பெயர் அழைக்கப்பட்டதும் எதிரிக் கூண்டுக்குள் ஏற முன்னரே குற்றவாளி என்று குற்றத்தை ஒப்புக் கொண்டு நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தைச் செலுத்தி விட்டு சென்று விடுவார்கள். இது யதார்த்தமாக நாளாந்தம் நடைபெறும் விடயமாகும்.

ஆனால் நான் இந்த அநீதியான நடவடிக்கைக்கு உடன்படுபவனல்ல. எனது பக்கம் உண்மையில் நியாயம் இருக்கிறது. ஏற்கனவே எனது பத்திரிகையில் காத்தான்குடி மோட்டார் போக்குவரத்துப் பொலீசாரின் மேற்கண்டவாறான அடாத்தான செயற்பாடுகள் குறித்து பக்கம் பக்கமாக விமர்சித்து எழுதியிருக்கின்றேன்.

என்னைப் பழிவாங்கும் நோக்குடன் காத்தான்குடிப் பொலிஸார் பலவகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு என்மீது அநியாயமாக வழக்குகள் பதிவு செய்து அலைக்கழித்தும் வந்துள்ளனர்.

எந்தவொரு வழக்கிலாயினும் பொலிஸார் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபித்து வெற்றி பெற்றது கிடையாது.
இதிலிருந்து காத்தான்குடி பொலீசாரின் சட்டம் தெரியாத, வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கைகள் என்மீது முன்னெடுக்கப்பட்டிருப்பது தெளிவாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டிலும் நான் என்பக்கத்து நியாயங்களை எடுத்துரைத்து நீதிமன்றத்தில் வாதாடுவேன். மோட்டார் போக்குவரத்துப் பொலீசார் நீதியாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பார்க்கும்பேதே, யுத்த காலத்தில் காட்டுப்பகுதிகளில் ஆயுதங்களுடன் நின்று வழிமறிப்புச் செய்கின்ற பயங்கரவாதிகளைப் பார்ப்பது போன்ற பயம் மக்களுக்கு வருகிறது. ‘சேர் கையைப் போட்டால் 500 ஒன்று கழரும்’ என்கிற மனோ நிலை மக்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது. இந்த அடிமைத்தனம் மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தேர்தல் ஆணையாளர் சொத்து விபரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருப்பது போல், பொலிஸ் மா அதிபரும் மோட்டார் போக்குவரத்துப் பொலிசார் உட்பட பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது, அவர்களின் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு கோர வேண்டும். அப்போதுதான் வீதிகளில் அரச உத்தியோகக் கவசங்களுடன் நின்று அப்பாவிப் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கைக்கு இந்த நல்லாட்சி அரசில் முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

குற்றம் என் பக்கம் இருப்பின் அதனைத் தயக்கமின்றி ஒப்புக்கொண்டு உரிய பிராயச்சித்தம் ததேடிக்கொள்வதென்பது என் பிறவிக்குணம். அதேபோல் அநீதிக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராகக் குரலெழுப்புவதும், அதனை எதிர்த்துப் போராடுவதும் என்னில் இயற்கையாகவே அமைந்த குணம். அநியாயமாக ஒரு சதம் இழப்பதை விட, அநீதியாகக் கிடைக்கும் தண்டனையை அனுபவிப்பது ஆத்மாவுக்குச் சாந்தியளிக்கும்!

One Response to “காத்தான்குடி போக்குவரத்துப் பொலீசாரின் பிழையான பார்வையும், அநியாய அபாரதமும்!”

  1. mahthi Says:

    Ethu ponra anagareega seyal purium police officers pathaviyilitunthu neekkappada vendum enakkum 2011 el Ethuponra otu sampavam Mandur police man otuvaral nadathappaddathu


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s