“ரமழானே நீ வருக….”
“குர்ஆன் ரமழானே வருக…”
“எங்கள் பாவங்களை…”
“சுட்டெரிக்கவே நீ வருக….”
(மௌலாய… சல்லி.. வசல்….)
காத்தான்குடி: ஓவ்வொரு வருட ரமழானின் முதலாம் இரவில் செய்னுதீன் மௌலவியின் ரமழான் வரவேற்பு பயானின் ஆரம்பம் மேற்படி பாடலுடன் இனிதே ஆரம்பிக்கும்.
1985. காத்தான்குடி 5 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு இமாம்களின் தேவை ஏற்பட்டிருந்த காலம். இதற்கு முன்னர் மௌலவி ஆதம் லெவ்வை ஹஸரத் மற்றும் மௌலவி ஏ.ஜி.எம். அமீன் பலாஹி ஆகியோர் இமாம்களாக ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலில் கடமையாற்றியிருந்தனர்.
காத்தான்குடி 4ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், புதிய காத்தான்குடி மொகீடீன் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி செய்னுதீன் அவர்கள், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபிக் கல்லூரியில் மௌலவிப்பட்டம் பெற்று, மதீனா பல்கலைக்கழகத்தில் மதனிப் பட்டம் (பி.ஏ) பெற்றார்.
தனது மதீனா கல்வியை முடித்து நாடுதிரும்பிய 1985 இல், மிக அழகிய தோற்றமுடைய, கம்பீரக் குரலுடைய இளைஞனாக இருந்த மௌலவி செய்னுதீன் அவர்கள் மஅல்லா வாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.
தனக்கே உரிய அழகிய நெறியில் தனது பயானை ஜாமியுழ்ழாபிரீனிலும் மற்றும் குத்பா பிரசங்கங்களிலும் நிகழ்த்தி வந்தார்.
நோன்பு காலங்களில் நோன்பு எனும் தலைப்பில் ஒரு வாரமும், அதன் பின்னர் பிற தலைப்புக்களிலும், ஸகாத், ஃபித்ரா, ஸதகா, திருமணம், சொத்து, இம்மை, மறுமை, நரகம், சுவர்க்கம் போன்ற தலைப்புக்களில் மிகச்சிறப்பாக பயான் செய்து, அறியாமையில் சூழ்ந்திருந்த பல மூட நம்பிக்கைகளை இப்பகுதியில் தகர்த்தெறிந்தார்.
‘வஹ்ததுல் வுஜூத்‘ மற்றும் அவ்லியாக்களின் உதவி தேடல் நிலைத்திருந்த காத்தான்குடி 5 பகுதியை, தனது தனித்த பிரச்சாரங்கள் மூலம் கலைந்தெறிந்தார்.
தொழுகை சட்டங்களில் குடியிருந்த மூட நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து, சத்திய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் போதித்து வந்தார். இதன் காரணமாக ‘வஹாபி‘ என்ற முதலாவது பட்டம், வஹ்ததுல் வுஜூத் கொள்கையாளர்களால் செய்னுதீன் மௌலவிக்கு அப்போது வழங்கப்பட்டிருந்தது.
ஹஜ் காலங்களில், ஹஜ்ஜூக்குரிய பயான்களை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிகழ்த்தி, மார்க்க சந்தேகங்களை தெளிவுபடுத்தி வந்தார்.
நோன்பு காலங்களிலும் ஏனைய காலங்களிலும் செய்னுதீன் மௌலவியின் பயானைக் கேட்பதற்கு காத்தான்குயின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான மக்கள் ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலில் நிறைந்திருப்பர்.
செய்னுதீன் மௌலவிக்கு பள்ளிவாயல் நிர்வாகமும், அப்பகுதி மக்களும் மனம்விரும்பி மரியாதை கொடுத்தனர். செய்னுதீன் மௌலவிக்கு என்றே பல இளைஞர்கள் அப்போதைய சூழ்நிலையில் தங்களது தனிப்பட்ட ஆதரவை அவரது மார்க்கப் பிரச்சாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்தனர்.
ஜூம்ஆ குத்பாக்களில் பழைய புராணங்களை அன்று ஓதி, பள்ளிவாயலில் இருப்பவர்களை தூங்கச் செய்த பழைய ஜூம்ஆ நடைமுறையை தகர்த்தெறிந்து, சமகால நடப்பு விடயங்களை கச்சிதமாக மக்களுக்கு சென்றடையக்கூடிய விதத்தில் குத்பாப் பிரசங்கங்களை அவர் நிகழ்த்துவார். ‘இன்னும் கொஞ்சம் பயான் செய்ய மாட்டாரா‘ என்ற ஆவல் அப்போது பலரிடம் இருந்தது.
செய்னுதீன் மௌலவியின் பிரசங்கத்தில் லயித்த அப்போதய இளம் உலமாக்கள் அவரது பானியிலேயே பயான் செய்ய ஆரம்பித்தனர்.
1985 மற்றும் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதி வரைக்கும் செய்னுதீன் மௌலவியின் எழுச்சிமிக்க பயான்கள் பெரும்பாலானோரை சத்திய வழியில் செல்ல வழிகாட்டியது.
இதன் பின்னர் தப்லீஹ் ஜமாஅத்தில் தன்னை அர்ப்பணித்ததன் பின்னர், தனது எழுச்சிமிக்க மார்க்கப் பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டார்.
இன்றைய ‘நவீன‘ உலமாக்களில் சிலரைப்போல் அறபிகளின் பணத்துக்கு மாரக்கத்தை விட்டுவிடாமல் தான் கற்ற கல்வியை இறைவனுக்காக அன்று அர்ப்பணித்தார்.