சித்தீக் காரியப்பரின் கடிதம்:
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பரிடமிருந்து, ஊடகத்துறை சார்ந்தோரின் கவனத்துக்கு!
இந்த நாட்டிலும் புலம்பெயர்ந்தும் வாழக்கூடிய தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள், எழுத்தளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்குமான ஓர் அறிவித்தல்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தொடர்பில் நான் எனது முகநூலில் பதிவிட்ட ஒரு விடயம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் சகோதரரான ரவூப் ஹஸீர் என்னைப் பற்றி ஒரு தவறான குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் ஹக்கீமுக்கு ஆதரவாக பல விடயங்களை நான் எழுதியுள்ளமை நீங்கள் அறிந்ததே! ஆனால், ஓரிரு விடயங்களில் அவர் விடும் தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்காக இன்று என்னை ‘வாழ்வாதாரப் பிரச்சினை, வயிற்றுப்பிழைப்பு இதற்கெல்லாம் வேறு தொழில்கள் உள்ளன. ஊடகம் அப்படியானவர்களுக்கு பொருத்தமற்றது. என்று என்னைச் சுட்டியே அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளமை சிரேஷ்ட ஊடகவியலாளர் என்ற வகையில் என்னை வேதனையடையச் செய்துள்ளது. எனது குடும்பத்தினர் கூட இந்தக் குறிப்பைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்து, ஊடகத்துறையிலிருந்து என்னை வெளியேறுமாறு நிர்ப்பந்திக்குமளவுக்கு வெறுப்படைந்துள்ளனர்.
இந்த நல்லாட்சியில் ஊடகத்துறையினர் மீதான அடக்கு முறைகள் வேறு வடிவத்தில் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறதோ தெரியவில்லை. இதனை கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் ஹஸீர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஊடக குடும்பத்தைச்சேர்ந்த சகோதரர்களே! இந்த விடயத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்களில் ஒருன். நான் இன்று இவ்வாறு அவமரியாதைப்படுத்தப்பட்டுள்ளேன். மேலும், இந்த விடயம் தொடர்பில் சிங்கள, ஆங்கில ஊடக நண்பர்களுக்கும் அறிவித்துள்ளேன். அவர்கள் தங்களது கரிசனையைச் செலுத்தவுள்ளார். இப்படிப்பட்ட நபர்களை என்னால் நம்ப முடியாதுள்ளது. கொந்தராத்துகள் மூலம் என்னைக் கொலை செய்யவும் துணிவர். அவ்வாறு இடம்பெற்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஹஸீரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
………………………………………
எனது பதில்:
அன்புடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பர் அவர்களுக்கு, ‘வார உரைகல்’ புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் எழுதிக் கொள்வது,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹூ
ஊடகத்துறையினருக்கு நீங்கள் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த அறிவித்தலை இணையதளம் ஒன்றின் வாயிலாக அறிந்தேன். இதற்கு முன்னரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் குறித்தும், அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் மீது சிங்கள ஊடகம் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் நீங்கள் மேற்கொண்ட பதில் நடவடிக்கை பற்றியும் உங்களின் பதிவுகளை நான் வாசித்து அறிந்துள்ளேன்.
உங்களுடன் எனக்கு எதுவித தொடர்பாடல்களும் இன்று வரைக்கும் இல்லாத நிலையிலும் எனது பார்வையில் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகமான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் நீங்கள் ஒரு மாற்றுத்திறன் கொண்ட ஊடகவியலாளராகவே கருதப்படுகிறீர்கள்.
இலங்கையில் ஊடகத்துறையும், ஊடகவியலாளர்களும் என்பது, அரசியல்வாதிகளை அடி ஆதாரமாகக் கொண்டே கட்டியெழுப்பப்பட்டு வாழ்ந்து வருவதாகக் கொள்ளலாம். அன்றாடம் பத்திரிகைகளையோ, இணையதளங்களையோ நாம் புரட்டினால், அரசியல் வியாபாரிகளின் அடிக்கல் நாட்டு விழாக்களும், கட்டிடத் திறப்பு விழாக்களும், மாலை அணிவிப்பு, மக்கள் திரள் வரவேற்பு மற்றும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கும் நிகழ்வுகளுமே பெரும்பாலான ஊடகவியலாளர்களினதும், ஊடகங்களினதும் செய்திச் சேவைகளாகக் காணப்படுவது கண்கூடு.
இந்நிலையில் உங்களைப்போன்ற ஒரு சில மாற்றுச் சிந்தனைவளம் கொண்ட ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் சுயாதீன விமர்சனங்களுடன் செயற்பட எத்தனிக்கும்போது இவ்வாறான தாக்குதல்களும், அவதூறுகளும், அச்சுறுத்தல்களும், பழிவாங்கல்களும் பல்வேறு வடிவங்களில் வந்தடைவதானது சகஜமே.
உங்களின் குடும்பத்தினரும் அறிவுறுத்தியுள்ளதுபோல் நீங்கள் உடனடியாகவே ஊடகவியலாளர் என்ற வட்டத்திலிருந்து வெளியேறி ஊடகப் போராளி எனும் அங்கியை அணிந்து கொண்டு இந்த ஊடகத்துறை எனும் ‘ரிஸாலத்’ தூதுத்துவத் துறையில் பரிணாமம் பெற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும். அப்போதுதான் இத்தகைய பிற்போக்குவாதிகளுடைய தாக்குதல்களின் ‘இனிமை’யை நீங்கள் இன்னும் எதார்த்தமாக அனுபவித்துணர முடியும். எனது 30 வருட ஊடகத்துறை அனுபவத்தைக் கொண்டு இதனைச் சொல்கிறேன். ஏற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம்.
எமது சமூக அரசியல்வாதிகளை – அரசியல் வியாபாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஊடகக் குடும்பத்திடம் எதிர்பார்ப்பது, அவர்களை யாரும் எந்த நிலையிலும், எந்த நியாயத்தின் அடிப்படையிலும் விமர்சிக்கக்கூடாது என்பது மட்டும்தான். இதற்கு நாம் ஓ.கே. என்றால் நாமும் அவர்களை விடவும் அதிகமான சௌபாக்கியங்களை அனுபவித்துக் கொண்டு, சலுகைகளைப் பெற்றுக் கொண்டு, விரும்பிய பிரதேச செயலகங்களில், கல்வி வலயங்களில், அரச திணைக்கள கூட்டுத்தாபனங்களில் கையெழுத்துப் போட்டு விட்டு முழு நேர ஊடகவியலாளர்களாக அந்த அரசியல் வியாபாரிகள் பங்குபற்றும் நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும், படங்களையும் அறிக்கையிட்டுக் கொண்டு இரட்டைச் சம்பளமும் பெற்றவர்களாக சுகமாகவும், சுதந்திரமாகவும் வாழலாம்.
அவ்வாறின்றி, இவர்களாலும், இவர்களின் இணைப்பாளர்கள், அமைப்பாளர்கள், செயலாளர்கள், கட்சிப் பிரதிநிதிகளாலும் மேற்கொள்ளப்படுகின்ற சமூக அநீதிகள், அபிவிருத்தி மோசடிகள், இவர்களுடைய அரசியல் கொள்கை கோட்பாடுகளில் காலத்திற்குக் காலம் பேரம் பேசுதல்கள் மூலம் நிகழும் கொள்கைப் பிறழல்கள், உருட்டுப் பிரட்டுக்கள், ஒழுங்கீனங்கள் போன்றவற்றை அலசி, ஆராய்ந்து, ஆதாரபூர்வமாக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினால் இவ்வாறுதான் பல்வேறு அச்சமூட்டும் எச்சரிப்புக்களும், அவதூறான சேறு பூசல்கல்களும், ஏன் நீங்கள் நியாயமாகவே அச்சப்படுவதுபோல் ஆளடிக் கூலிகளை ஏவி விட்டு கொலை செய்வதும் நிகழும்.
அநீதிக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராகக் குரல் கொடுப்பது, நாம் ஏற்றுக் கொண்டுள்ள இஸ்லாமிய மாhக்கத்தின் அடி வேராகும். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்க வேண்டியதானது ஊடகத்துறை எனும் ‘ரிஸாலத்’ தூதுத்துவத்துறையை ஏற்றுள்ள நம்மீது கடமையாகும். இதன் வழியில் போராடி மரணிப்பது என்பது மிகவும் இனிமையாகும்.
இவ்வழியே என் வழி! அவ்வழியே உங்கள் வழியாகவும் அமைய வேண்டுமென்பது அவா!
இறைவனின் நாட்டமின்றி ஒரு துரும்பும் அசையாது என்றும், அசைக்க முடியாது என்பதும் நாம் கொண்ட உறுதியான நம்பிக்கையாக உள்ளத்தரில் இருக்க, இந்தக் கபோதித்தனமான அவதூறுகள், எச்சரிப்புக்கள், தாக்குதல்கள் எல்லாம் நமக்கு ஜுஜுபி!
அரசியல் அதிகார அடாவடித்தனங்களுக்கு இலங்கையில் இரண்டாவது மேர்வின் சில்வாவின் தளம் எனப் பேசப்படுகின்ற களத்திலேயே கடந்த தசாப்த காலமாக இறையருளால் தாக்குப் பிடித்துத் தக்க வைக்கப்பட்டிருக்கும் என்னைப் போல உங்களையும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கென்று விதிக்கப்பட்ட முடிவு நேரம் வரும் வரை எல்லா வழிகளிலும் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையுடன், இவைகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஒரு விக்டர் ஐவன் போல நீங்களும் தமிழில் ஒரு அச்சமற்ற தமிழ் மொழியிலான ஊடக விமர்சகராகப் பரிணமிக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகின்றேன்.