waqarலாஹூர்: “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. அவையனைத்தும் சரி செய்யப்படுவது அவசியம்” என அவ்வணியின் பயிற்சியாளர் வக்கார் யூனுஸ் கூறியுள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு வங்க தேசத்திடம் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான், இப்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படும் இந்தத் தோல்வி, அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வக்கார் யூனுஸ் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்ப தாவது:

“எங்களுடைய கிரிக்கெட்டை பற்றிய விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். அணியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஏராளமான துறைகளில் அணி பலவீனமாக உள்ளது. அணியை வலுவான அணியாக உருவாக்குவதற்கு சிறிது காலம் பொறுமையாக இருந்துதான் ஆக வேண்டும்”.

“பாகிஸ்தான் அணி உடனடியாக வலுவான அணியாக மாறிவிடாது. தற்போதைய அணியில் இருப்பவர்கள் அனைவருமே புதிய வீரர்கள். புதிய தலைமையில் புதிய அணியை கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் எல்லோரும் பொறுமையாக இருந்தாக வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. எனினும் பழைய உத்திகளை கையாள்வது நம்முடைய கிரிக்கெட்டை இன்னும் அதிகமாக பாதிக்கும்”.

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் ஒரே மாதிரியான கிரிக்கெட்டையே விளையாடி வருகிறது. அதை மாற்றுவது அவசியம். பாகிஸ்தான் பெரும்பாலும் தடுப்பாட்டத்தையே கையாண்டு வருகிறது. அந்த மனநிலையில் இருந்து வீரர்கள் மீள்வதற்கு சில காலம் ஆகும்”.

பாகிஸ்தான் வீரர்களுக்கு அதிக அளவில் உடற்தகுதி பிரச்சினைகள் உள்ளன. அதனால் புதிய பயிற்சிக்கு தங்களை தகவமைத்துக் கொள்ள அவர்களுக்கு கொஞ்ச காலம் ஆகும். எனினும் அணியை முன்னேற்ற வேண்டு மென்றால் உடற்தகுதி விடயத்துக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும். அதில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.