காத்தான்குடி: எந்த உத்தியோகத்தருக்கும் கிடைக்காத வறிய மக்களுடன் வேலை செய்யும் பாக்கியம் திவிநெகும என கூறப்படும். சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைத்துள்ளது, அதை அவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாலவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
மாவட்ட திவிநெகும பணிப்பாளர் திரு குணரெட்ணம் மறறும் திவிநெகும முகாமையாளர்கள் திவிநெகும உத்தியோகத்தர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
கடன் என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் அதை திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதை வாங்க வேண்டும். அப்போதுதான் அல்லாஹ் அதை கொடுக்க வழியேற்படுத்திக்கொடுப்பான். ஏமாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கியவர் அதை கொடுக்கமுடியாது கஷ்டப்படும் நிலையைக்காண்கின்றோம்.
அரசாங்கத்தினால் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் இக்கடன் திட்டம் மிகவும் பயன்மிக்கதாக பயன்படுத்த வேண்டும். நகை வாங்குவது, உடுப்பு வாங்குவது என்று செல்லாமல் குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தி உங்கள் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப பயன்படுத்த வேண்டும். சுனாமி எமது பகுதியில் ஏற்பட்டு மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றியுள்ளது. எதையாவது இலவசமாக தருவார்களா என்ற எண்ணம் எம்மில் உள்ளது. இந்நிலை மாற வேண்டும். இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்
மேற்படி நிகழ்வின்போது 25 பேருக்கு ஒரு இலட்சம் மற்றும் ஐம்பதாயிரம் கடன் வழங்கப்பட்டதுடன் சிசு திரிய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவும் மாணவர்களுக்கு அமைச்சரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.