காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2015 சாதனையாளர் பாராட்டு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்- 21-03-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபையின் ஸ்தாபகத் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் தலைமையில் இடம்பெற்ற இவ் சாதனையாளர் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர், சிப்லி பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி வரலாற்றில் கல்வித் துறையில் சாதனை படைத்த மாணவர்கள் அதிதிகளினால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய அதிபர்கள் ஆகியோர் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர்,பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை, கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், மட்டக்களப்பு, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும், காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நளீமி உட்பட ஊர்பிரமுகர்கள்,உலமாக்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளம் மற்றும் ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய அதிபர்கள், மூத்த சமூக சேவையாளர்கள், கல்விமான்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.