கொழும்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்காக போலி ஆங்கில டிப்ளோமா சான்றிதழை சமர்ப்பித்த பெண் ஒருவரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடவத்தையைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவரே கோட்டை பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளும் பொருட்டு போலி சான்றிதழை அத்தாட்சிப்படுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவில் இவர் இதை ஒப்படைத்துள்ளார். இதன் போதே அதிகாரிகள் குறித்த சான்றிதழ் போலியானது என்பதனை உறுதி செய்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் தற்போது வெள்ளவத்தை ஆவண மோசடி பிரிவின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். TK