போதுமான அளவு பணத்தை கையில் வைத்துக்கொண்டு எவரும் உழைக்கும் நோக்கில் வெளிநாட்டுக்குப் போவதில்லை. வெளிநாட்டு வாழ்க்கை என்பது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு மாத்திரம் காய்த்த மரம், அனேகமானவர்களுக்கு அது பட்ட மரம்!
வெளிநாட்டுக்குப் போகும் போது, புரோக்கர், முகவர், கொழும்பு, பிரயாணங்கள் என்று நாய் மாதிரி அலைந்து திரிந்த அலைச்சல்கள் கொஞ்சமல்ல!
இந்த அலைச்சல்களின் பின்னர் வீஸா கிடைத்ததும் பணமே நோக்கம் என அனைவரும் வெளிநாடு செல்கின்றனர். தான் அத்தனை காலமும் வாழ்ந்த மண்ணைப் பிரிந்து, அன்புப் பெற்றோரைப் பிரிந்து, கூடி விளையாடிய நண்பர்களைப் பிரிந்து அழுதுதான் விமானம் ஏறுகிறோம்.
சென்றபின் நாலு பணம் கைக்குக் கிடைத்ததும், நாங்கள் வெளிநாடு செல்வதற்குப் பட்ட கஷ்டங்கள், வேதனைகள் அனைத்தும் மறந்துவிடும். பக்கத்து கொம்பனிக்காரன், அல்லது பக்கத்து ரூம் நண்பர் பெட்டி போடுவதற்கு தயாராகுவார். பெட்டியின் அளவு 2, 4, 5 மீட்டர் என்று போகும்.
அதற்குள் இலங்கையில் இல்லாத பொருட்கள் என்று எதுவுமிருக்காது. அனைத்தும் இலங்கையில், தனது சொந்த ஊரில் மலிவாக வாங்கக்கூடிய பொருட்களாகவே இருக்கும். (சில இலத்திரனியல் சாதனங்களைத் தவிர).
இனிப்பு வகைகள், உடுப்பு வகைகள், விளையாட்டுப் பொருட்கள் என்று தேவையில்லாத பொருட்களாலும், நண்பர்களின் பார்சல்களாலும் 5 மீட்டர் பெட்டி நிரப்பி மூடப்படும்.
கொழும்பு வந்ததும் இந்தப் பெட்டியைக் கிளியர் செய்வதற்கு ஒரு நாள் செலவு செய்ய வேண்டும். போக்குவரத்து, பெட்டிக்கான போக்குவரத்து என்று பணத்தை எறிய வேண்டும். கார்கோ கவுண்டரில் பணம் செலுத்த வேண்டும்.பெட்டி பரிசோதிக்கும் நிலையத்தின் ஊழியர்களிடத்தில் அவதமானமாக இருக்க வேண்டும். கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு, முக்கிய பொருட்களை அபகரித்து விடுவார்கள். வீட்டுப் பணிப்பெண்கள் என்றால் இன்னும் ஏமாற்றம் கூடுதலாக இருக்கும்.
சுங்கத்திணைக்கள அதிகாரியை எங்களுக்கு பயம்காட்டி ஓரு சில மயில்களை உருவப்பார்ப்பார்கள். அதிலும் வட–கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
பெட்டி வெளிநாட்டில் போட்டதற்குரிய பணம், கார்கோ ஊழியர்களுக்கான பணம், லொறிக்கூலி, ஊரில் வந்து அந்தப் பெட்டியை இறக்கும் கூலி மற்றும் நாட்டாமைகளுக்கான தனிக்கூலி, நாட்டாமைகள் பெட்டியைத் தொட்டாலும், பெட்டியை உருட்டினாலும் றியால்களில், அல்லது டொலர்களில் கேட்பார்கள்.அதிலும், வீடு வீதியோரத்தில் இல்லாவிட்டால் அதே கதிதான்!
கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் எப்படியும் பெட்டியை வெளிநாட்டில் இருந்து ஏற்றி வீட்டில் இறக்கும் வரைக்கும் ஆகக் குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாய் கரைந்திருக்கும். பெட்டிக்குள் சில பொருட்கள் உடைந்திருக்கும். இன்னும் சில வேளைகளில் நண்பர்கள் தந்த பொருட்கள் எங்கேயோ காணாமல் போயிருக்கும். அல்லது சேதமடைந்திருக்கும்.இதன் காரணமாக பல வருடங்கள் ஒற்றுமையாக வெளிநாட்டில் வாழ்ந்த எத்தனையோ நட்புக்கள் உடைந்திருக்கின்றன.
நீங்கள் பெட்டி போடப்போய்த்தான் பெட்டிக்கேற்ற பொருட்களை, தங்கள் வீட்டுக்குக் கொடுப்பதற்காக (பார்சல்கள்) உங்களுக்குத் தருகிறார்கள். நீங்கள் பெட்டி போடாவிட்டால் எவரும் பார்சல்கள் தரப்போவதில்லை.இதேபோல் நீங்களும் ஏற்கனவே பெட்டி போட்டவரிடம் பல பொருட்களைக் கொடுத்திருப்பீர்கள். இதனால் நீங்களும் அவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்படும். அதைவிட, நீங்கள் கேட்கத்தவறினாலும், பின்னர் மனக்கசப்புக்கள் ஏற்படும்.
வெளிநாட்டிலிருப்பவர்கள் ஸ்மார்ட் தொலைக்காட்சி, மற்றும் குளிர்சாதனப்பெட்டிகளையே அதிகமாக இலங்கைக்கு வரும்போது கொண்டு வருகின்றனர். இந்தப் பொருட்களுக்காகவே பெட்டி போடவேண்டிய தேவை சிலருக்கு ஏற்படுகிறது.
இத்தகைய நவீன சாதனங்கள் அனைத்தும் பல வருட உத்தரவாதங்களுக்கு இலங்கையில் தாராளமாகக் கிடைக்கின்றன. அதைவிடவும் இலங்கை விமான நிலைய டியூட்டி பிரி சந்தையிலும் வாங்க முடியும். தற்பொழுது அனைத்தும் சுட்டுவிரலுக்குள் அடங்கிவிட்டதால், நீங்கள் வாங்கும் பொருட்களின் விலைகளை, மொடல்கள் மற்றும் அதன் தரம்களை இணையத்தில் பார்த்து முடிவு செய்யலாம்.
வெளிநாட்டுப்பெட்டி வீட்டுக்கு வந்ததும், குடும்பத்தினர் சூழ உடைத்து பொருட்களும் பிரிக்கப்படும். ஓர் ரி.வி அல்லது பிரிட்ஜைத் தவிர உரியவர்களுக்கென்று பெட்டியின் அளவுக்கு என்று எந்தப் பொருட்களையும் காண முடியாது. மறு மூலையில் பெட்டியின் மூன்றில் இரண்டு அளவு பொருட்கள் குவிக்கப்பட்டிருக்கும். அப்பொருட்கள் அனைத்தும் நண்பர்களுடையதாகவே இருக்கும்.
குடிகாரன் பேச்சு விடிந்தாப் போச்சு என்பது போல பெட்டி வந்தது. பொருட்களும் போய்விட்டன என்றதைத் தவிர எந்தப் பிரயோசனமும் இத்தகைய வெளிநாட்டுப் பெட்டிகளில் காணமுடியாது.
விடுமறை முடிவதற்கு முன்னரே பணத்தின் அருமை விளங்கும். இப்போது எங்களுக்கு வெளிநாட்டுக்கு முதற்தடவை போகும்போதிருந்த பணத்தின் அருமை புலப்படும்.
எந்தப் பெற்றோரும் பெட்டி போடுங்க என்று கூறுவதில்லை. பணத்தைச் சம்பாதிங்க. பணம்தான் இப்போது தேவை. பணமிருந்தால்தான் ஊரில்,நாட்டில் வாழமுடியும். உங்களையும் மத்தவர்கள் மதிப்பார்கள்.
எனவே, வீண்விரயமான இந்த பெட்டி போடுதல் விடயத்தில் வெளிநாட்டு சகோதரர்கள் கொஞ்சம் சிந்தித்து நடங்கள். பணத்தை சேமியுங்கள்.