கொழும்பு: உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இம்முறை கொழும்பு நகரில் 17 கூட்டங்களும் 15 மேதின ஊர்வலங்களும் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, இம்முறை மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை முன்னிட்டு நாடு முழுவதிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை மக்கள் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி உட்பட முக்கிய கட்சிகளின் மேதினக் கூட்டங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளதால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 5,082 பொலிஸார் மேலதிக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களில் நபர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிக்க 2,572 பேரும் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படும் 1,910 பேரும் சிவில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் 600 பேரும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் பொலிஸ் திணைக்களம் மாற்று வழிகளை அறிவித்துள்ளது.