மனாமா: இலங்கைக்கும் பஹ்ரைனுக்கு மிடையிலான நல்லுறவு மற்றும் தொடர்புகளைப் பலப்படுத்தும் வகையில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
விளையாட்டு, கலாசாரம் மற்றும் கலைத்துறைகளை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கும் பஹ்ரைன் பல்கலைக்கழகத்துக்குமிடையில் தொடர்புகளை வலுப்படுத்தும் ஒப்பந்தமும் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பஹ்ரைனுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் இஷா அல் – கலீபா பஹ்ரைன் அல் ஸபீர் மாளிகையில் மகத்தான வரவேற்பளித்தார். அந்நாட்டின் பிரதமர் பலிபா பின் சல்மான் பின் ஹமாட் அல்பலீஷா இளவரசர் மற்றும் பஹ்ரைன் நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கை ஜனாதிபதி ஒருவர் பஹ்ரைனுக்கு விஜயம் செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இரண்டு நாடுகளிலும் சிறந்த நல்லுறவின் அடையாளமாக இச்சந்திப்பு நிகழ்வதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கு மிடையிலான இரு தரப்புப் பேச்சுவார்த்தையின் போது முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக சர்வதேச அரங்குகளில் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் இரு தலைவர்களுக்குமிடையில் இணக்கம் காணப்பட்டது.
இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவத்தைப் பாராட்டிய பஹ்ரைன் மன்னர் அவரது நேர்மை, திறமைகள் தொடர்பில் தமது தூதுக்குழுவினருக்குத் தெளிவுபடுத்துயுள்ளார். அத்துடன் பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக அவர் ஆற்றியுள்ள மகத்தான சேவையையும் இதன் போது பஹ்ரைன் மன்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வுகளில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ரிசாட் பதியுதீன், டிலான் பெரேரா, பிரதியமைச்சர் சரத் வீரசேகர, மேல் மாகாண சபை உறுப்பினர் நெளசர் பெளஸி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பஹ்ரைனிலுள்ள இலங்கை தூதுவர் அநுர எம். ராஜகருணா உட்பட இலங்கையின் முன்னணி வர்த்தகத் தூதுக்குழுவினரும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கைக்கும் பஹ்ரைனுக்கு மிடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் 1992ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கடந்த வருடம் பெப்ரவரு மாதம் அந்நாட்டின் தலைநகரான மனாமாவில் புதிய இலங்கை தூதரகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார ரீதியான தொடர்புகள் பலம் மிக்கதாக திகழ்வதுடன் 2009ல் இலங்கைக்கு விஜயம் செய்த பஹ்ரைன் பிரதமர் வடக்கின் மீள் நிர்மாண கருத்திட்டங்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்கன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இலங்கைக்கும் – பஹ்ரைனுக்குமிடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் 2003 ம் ஆண்டில் 7.3 மில்லியன் டொலராக இருந்துள்ளதுடன் கடந்த வருடம் இத்தொகை 34.9 மில்லியன் அமெரிக்கன் டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.