காணி உரிமை என்பது மனிதனின் இன்றியமையாத பொருளாதார உரிமையாகும். இவ்வுரிமை பிறருடைய சட்ட வழி உரிமையை பாதிப்பதாக இருத்தல் கூடாது என்பதுடன் அது சட்டரீதியான நிர்வாகி ஒருவரினால் வழங்கப்பட்டதாக இருத்தல் வேண்டும இவ் உரிமையை நிலைநாட்டுவதற்கு சட்ட ஆவணம் ஒன்று இருத்தல் வேண்டும் என்பதுவும் அவசியமாகியுள்ளது. இன்று எமது பிரதேசத்தில் காணியானது இனவிரிசல்களை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையில் ஒருவர் எப்பிரதேசத்திலும் ஆதனத்தை வைத்துக் கொள்ள முடியும். இதற்கு காணி பற்றிய அறிவினை பெற்றுக் கொள்வதன் மூலம் ஒருவரின் உரித்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
காணி உரிமைiயினை ஒருவர் நிலைநாட்டுவதற்கு ஆதனத்தின் இடாப்பு, அட்டவணை என்பன தெளிவாக குறிப்பிட்டிருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி கையொப்பங்கள் முத்திரைகள் என்பன தெளிவாக இடப்பட்டிருத்தல் வேண்டும். சட்டரீதியாக பதியப்பட்டிருக்கும் வலிதான ஆவணம் ஒன்றின் மூலம் உள்ள நிபந்தனைகள் அனைத்தும் உரிமையாளரையும் அவருக்குப் பின்னர் உரிமையாளராக வரும் சகலரையும் கட்டுப்படுத்தும்.
இலங்கையினைப் பொருத்தவரையில் காணி உரிமைகள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு உரிமையாகவும், பொருளாதார உரிமையாகவும் காணபட்படுகின்ற அதே வேளை பல்வேறுபட்ட சட்டங்களினால் நெறிப்படுத்தப்பட்டவையாக காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் அமைப்பின் மூன்றாம் அத்தியாயத்திலுள்ள அடிப்படை உரிமையின் 14வது உறுப்புரையில் ஒருவர் விரும்பிய இடத்தில் வசிப்பதற்கும,; தொழில் செய்வதற்குமான பொருளாதார உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காணி உரிமையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவே கொள்ள முடியும். அத்துடன் இலங்கை சர்வதேச சமவாயங்களில் கையொப்பம் இட்டு ஏற்றுக் கொள்வதன் மூலம் அச்சமவாயங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பொருளாதார உரிமையான காணி உரிமையினை ஏற்றுக் கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி பல்வேறுபட்ட சட்டங்கள் மூலம் காணி தொடர்பான விடயங்களை நெறப்படுத்தி ஒழுங்குபடுத்தியுள்ளது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை எடுத்துக்கொண்டால் உறுப்புரை 17 ல் ஆதனம் ஒன்றை தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக வைத்திருப்பதற்கு உரிமை நிலையிடுகின்றது. அத்துடன் ஒருவருக்கு சொந்தமான ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்காக பறிக்கப்படுதல் கூடாது எனவும், ஒருவரின் ஆதனம் தொடர்பான உரிமையினை பாதுகாக்கின்றது. இவைதவிர பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயமும், பின்கெய்ரோ கோட்பாடுகளும் ஒரு மனிதனின் ஆதன உரிமையினை தெளிவாக வலியுறுத்துகின்றன.
அரச காணிகளும், தனியார் காணிகளும் இலங்கையைப் பொருத்தவரையில் காணிகள் பொதுவாக அரசகாணி, தனியார் காணி என இரு வகைகளில் பிரிக்கப்பட்டு அவை தொடர்பான உரிமைகளும் சட்டரீதியான முன்னெடுப்புக்களைக் கொண்டு நடாத்தப்படுகின்றன. அரச காணி என்பது இலங்கை அரசின் கட்டு;ப்பாட்டில் உள்ள இலங்கை அரசிற்கு சொந்தமான காணியாகும். தனியார் காணி என்பது தனியாளுக்கு அல்லது குழுவிற்கு பரம்பரை வழியில் வந்த தனி;ப்பட்ட காணிகள் ஆகும்.
பெரும்பாலும் அரச காணி எது, தனியார் காணி எது என்று அடையாளப்படுத்துவதிலேயே காணி தொடர்பான பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. காணி விற்பனை, காணி கொள்வனவு, காணி சுவீகரிப்பு போன்றவற்றின் போது அரச காணியா? தனியார் காணியா? என்ற பிரச்சினை எழுகின்றது.
குறிப்பாக அரச காணி பற்றியும் தனியார் காணி பற்றியும் அடையாளப்படுத்துவதற்கு நில அளவையாளர் திணைக்களத்தின் காணி வரைபடத்தினை பரிசீலிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். அத்துடன் காணியின் உரிமையாளர் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்வதற்கு காணி தொடர்பான ஆவணங்களை ஆராய்தல் அவசியமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் பெரும்பாலானவர்களுக்கு அத்தகைய வரைபடங்கள் தயாரிக்கப்படவில்லை என்பதுவும் பொதுமக்களிடம் ஆவணங்கள் இல்லை என்பதுவும் தனியான அரச காணிகள் தொடர்பில் பிரச்சினையை உருவாக்குகின்றது. தனியார் காணியை பொருத்தமட்டில் உரிமையாளருக்கு நொத்தாரிசினால் உறுதிப்படுத்தப்பட்ட காணிக்கு உறுதி இருத்தல் வேண்டும். அந்த உறுதியின் உண்மைத் தன்மையை அறிவது தொடர்பில் அக்காணியின் 30 வருடங்களிற்கான வரலாற்றுப் பதிவினை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். காணி உறுதியானது உரிமையாளரிடம் இருத்தல் வேண்டும். என்பதுடன் அக்காணி உறுதியானது மாவட்ட காணி பதிவகத்தில் பதியப்படுதல் வேண்டும்.
அதாவது, காணி உரிமையாளர், கொள்வனவாளர், இரண்டு சாட்சிகள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரு நொத்தாரிசு முன்னிலையில் குறித்த உறுதியினை நிறைவேற்றுதல் வேண்டும் அத்துடன் உரிய முத்திரைக் கட்டணம் செலுத்தப்பட்டு மாவட்ட காணிப் பதிவகத்தில் பதியப்படுதல் வேண்டும். இங்கே தனியார் காணியைப் பொருத்த வரையில் இத்தகைய உறுதிகள் நிறைவேற்றப்படுவதிலும் அவை பதியப்படுவதிலும் பல்வேறு மோசடிகளும் குழறுபடிகளும் நடப்பதால் மாவட்ட நீதிமன்றத்தில் காணி தொடர்பான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. தனியார் காணியைப் பொருத்த வரையில் காணப்படுகின்ற மிக முக்கியமான பிரச்சினை ‘அற்றோனி’ தத்துவப் பத்திரம் மூலம் அதிகாரம் அளிக்;கப்பட்ட ஒருவர் காணியினை விற்பது அல்லது மாற்றம் செய்தல் ஆகும். அதுமட்டுமன்றி வெளிநாட்டில் உள்ள ஒருவரின் ஆதனத்தை இங்கு முறைகேடாக விற்பனை செய்தல் போன்றதும் அடங்குகின்றன.
அற்றோனி தத்துவப் பத்திரம் மூலம் காணியைப் பராமரிப்பதற்கும், குடியிருப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்ட ஒருவர் அவ் அனுமதி பத்திரத்தினை பிழையான முறையில் பயன்படுத்தி காணியை விற்பனை செய்யும் போது காணி கொள்வனவாளர் பாதிப்புக்கு உள்ளாகின்றார். இங்கு மோசடி தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2ன் ஏற்பாட்டின்படி, அங்கே காணி உரிமையாளர் கையொப்பம் இடுவதில்லை. எனவே இங்கே குறித்த உறுதியின் சட்ட வலிமைத்தன்மை கேள்விக்குட்படுகின்றது. இங்கே அறியாமையின் காரணமாக கொள்வனவாளர் இது தொடர்பில் கவனிக்க தவறிவிடுகின்றார். ஆனால் சட்ட ரீதியில் ஒரு பிரச்சினை வரும் பொழுது கொள்வனவாளர் தனது கொள்வினை நிருபிக்க வேண்டியுள்ளது.
தனியார் காணியின் கைமாற்றம் தொடர்பில் ஆவணங்கள் தயாரிக்கும் போது ஏற்றபடுகின்ற ஒரு பிரச்சினை முத்திரை வரி செலுத்துவதாகும். காணியினை மிக கூடுதலான விலை கொடுத்து கொள்வனவு செய்கின்ற போதிலும் அதிகரித்த முத்திரை வரியினை செலுத்துவதைக் குறைப்பதற்காக உறுதியில் பெறுமதியினை குறைத்துப் போடும் வழக்கம் நிலவுகின்றது. இங்கே சில சமயங்கிளில் இது விற்பனையாளர் கொள்வனவாளரை ஏமாற்றி ஆதனத்தினை மீளப் பெற்றுக் கொள்ள வழிசமைக்கிறது. அதாவது விற்பனையாளர் காணியின் உண்மையான பெறுமதி இது என்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நம்பிக்கை ஆதனமாக மீட்டுத்தறுமாறும் கோரி வழக்குத் தாக்கல் செய்து உறுதியில் குறிப்பிட்ட பணத்தை செலுத்தி காணியினை மீளப்பெறும் சந்தர்ப்பம் நிலவுகின்றது. எனவே இங்கு காணி கொள்வனவாளரின் நிலை கவலைக்கிடமாகின்றது.
அத்துடன் முத்திரை வரி குறைப்பிற்காக காணி விற்பனை கிரய உறுதியாக எழுதாமல் நன்கொடை உறுதியாக எழுதுகின்ற ஒரு வழக்கமும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின்; வழக்கமாகவுள்ளது. அத்துடன் ஆவணங்களை பதிவு செய்யும் சட்டத்தின் கீழேயே இவ் கைமாற்றங்களும் பதிவு செய்யப்படுகிறது. காணி தொடர்பான ஒரு ஒப்பந்தம் பதியப்படுகின்றதே அன்றி ஆதனத்தின் உரித்து முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. இதனால் பல்வேறு மோசடிகளும் பிழையாக ஆவணங்கள் பதிவதாலும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
தனியார் காணியைப் பொறுத்த மட்டில் காணி ஆவணங்கள் தொலைந்து போதல் காணி பதிவகத்தில் வரலாற்று விபரங்கள,; காணி புத்தகங்கள் சேதமடைதல் போன்ற விடங்கள் உரிமையாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக உள்ளன. காணி ஆவணங்கள் தொலைந்து போதல் மற்றும் சேதமடைந்த போது அவற்றை எவ்வாறு மீளப்பெற்றுக் கொள்ளுதல் என்பது தொடர்பில் மக்களின் அறியாமையும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
எனவே இது தொடர்பிலான விழிப்புணர்வும், முறையான ஆவணப் பதிவும் காணி உரிமையாளர் பாதுகாப்பு தொடர்பில் மிக முக்கியமானவையாகும். அரச அளிப்பின் மூலம் வழங்கப்பட்ட ஒரு காணியை நொத்தாரிசு உறுதி மூலம் மாற்றம் செய்தல் அரச காணிகள், அனுமதிப் பத்திரங்கள், அன்பளிப்புக்கள் மூலம் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இங்கே அரச அனுமதிப் பத்திரங்கள் வாயிலாக வழங்கப்பட்ட காணியின் உரிமையினை மாற்றம் செய்வது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு தெளிவான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் இல்லை என்றே கூறமுடியும்.
உண்மையிலேயே அனுமதிப் பத்திரம் மூலம் அளிக்கப்பட்ட அரச காணி ஒன்றினை இரத்த உறவுகளுக்கன்றி வேறு யாருக்கும் கைமாற்றம் செய்ய முடியாது. ஒருவர் தனக்கென ஒரு பங்கினை வைத்துக் கொண்டே தனியாள் உரிமை மாற்றம் செய்ய முடியும். இது மீண்டும் ஒரு காணியற்ற குழுவினரை உருவாக்க கூடாது என்பதற்கான ஒரு ஏற்பாடேயாகும். ஆயினும் பொது மக்களைப் பொருத்த வரையில் இது தொடர்பான விழிப்புணர்வு என்பது குறைவாகவே காணப்படுகிறது. அரசகாணியினை பிரதிபலனுக்காக விற்பனை செய்ய முடியாது. இவ்விடயம் தெளிவின்மையால் பிழையாக வழிநடாத்தப்படுகின்றது.
இங்கு வருடாந்த அனுமதிப் பத்திரம் மூலமாக காணியை விற்பனை செய்து நொத்தாரிசு மூலம் உறுதி எழுதினாலும் அங்கு உரித்து மாற்றம் நிகழாது. அந்த உறுதியானது சட்டத்தின் முன் வலிதன்று. அவ் உறுதியை எழுதிய நொத்தாரிசானவர் நொத்தரிசு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் ஒன்றைப் புரிந்தவர் என்பதுடன் இரண்டு வருடத்திற்குக் குறையாத சிறை அல்லது தண்டப் பணம் மூலம் தண்டிக்கப்பட வேண்டியவர் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகவிருக்கிறது.
அரசு அளிப்புக்கள் மூலம் வழங்கப்பட்ட காணி எனக் கூறும் போதும் அக்காணியை இரத்த உறவில்லாத ஒருவருக்கு விற்கக் கூடாது. ஆயினும் இக்காணிகளை தங்களது இரத்த உறவினர்களுக்கு நன்கொடை செய்ய முடியும். இதற்காக மாத்திரம் நொத்தாரிசு மூலமான உறுதியினை தயாரிக்க முடியும் என்கின்ற போதிலும் குறித்த உறுதியினை தயாரிப்பதற்கு குறித்த பிரதேசத்தின் அரசாங்க அதிபர்ஃபிரதேச செயலாளரிடம் அனுமதி பெறப்படல் வேண்டும். நொத்தாரிசு உறுதியில் நிபந்தனைகள் குறி;ப்பிட வேண்டும். என்பதுடன் வளவு பிரதேச செயலாளர், அரசாங்க அதிபரினால் சரிபார்த்து அங்கீகரிக்கப்பட்ட பி;ன்னரே மாவட்ட காணி பதிவகத்தில் குறித்த காணி பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆயினும் இந்த நடைமுறை பொதுவாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இன்மையால் பின்பற்றப்படுவதில்லை என்பதுடன் வெறுமனே ஆட்சி உறுதியை, நன்கொடை உறுதிகளாகத் தயாரிக்;கப்படுகின்றன. ஆனால் இவை தொடர்பிலான சட்டப் பிரச்சினை ஒன்று நிகழும் போது இத்தகைய ஆவணங்களின் வலிதான தன்மை என்பது கேள்விக்குட்படுகின்றது. பிரதேச செயலாளரிடம் அனுமதி பெறுக்கின்ற முறை என்பதும் சில இடங்களில் பிழையாகக் கையாளப்படுகின்றன என்பதை காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக, அரச அளிப்பான காணி ஒன்றினை விற்பனை செய்ய முன்வரும் ஒருவர் பிரதேச செயலாளர் அல்லது அரச அதிபரிடம் அனுமதி பெறுவதற்காக உறவு முறை ஒன்றினை குறிப்பிட்டு நன்கொடை செய்ய விரும்புவதாகத் தெரிவித்து அனுமதி பெற்று நன்கொடை உறுதியினை தயாரிக்கின்றனர்.
பின்னர் இரத்த வாரிசுகள் வந்து முறைகேடாக தங்கள் காணி பகிர்ந்;தளிக்கப்பட்டிருப்பதாகவும் தங்களின் உரிமையை நிலைநாட்டவும் கோரி வழக்கு வைக்கும் போது இங்கே பிரச்சினை எழுகின்றது. இங்கு கொள்வனவாளரின் உரிமையும் அவர் செலுத்திய பணமும் கேள்விக்குரியாகின்றது. இதைத் தவிர கிராமப்புறங்களில் துண்டு மாற்றல் மூலம் அரச காணிகளை வி;ற்பனை செய்யும் ஒரு நடவடிக்கை காணப்படுகின்றது. இங்கு துண்டு;ப் பரிமாற்றம் மூலம் செய்யப்படும் கொள்வனவில் எந்த இடத்திலும் உரிமைமாற்றமோ ஆவணப் பதிவோ இடம்பெறுவதில்லை என்பதால் எந்த வகையிலும் ஆதனத்தின் சொந்தம் மாறுவதி;ல்லை. எனவே இங்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதனத்தின் உரிமை கோரும் வழக்கோ அல்லது வெளியேற்றல் வழக்கோ தொடர முடியாது.
வெறுமனே தான் கொடுத்த பணத்திற்காக பண மோசடி வழக்கொன்றினையே மாவட்ட நீதிமன்றததில் தாக்கல் செய்ய முடியும். இவ்வழக்கின் வெற்றியும் நிகழ்தகவும் அவரினால் நிருபிக்கும் தன்மையிலேயே தங்கியுள்ளது.
தொடரும்………….