நியுயோர்க்: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சனிக்கிரகத்தை ஆராய அனுப்பிய , கேசினி விண்கலன், ஜூலை 19 2013, எடுத்த சில அரிய புகைப்படங்களை இப்போது வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் , ஜூலை 19ம் தேதி ஏற்பட்ட சனிக்கிரகத்தால் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது கேசினி விண்கலனில் இருந்த கேமெராக்களால் எடுக்கப்பட்டன.
சனியைச் சுற்றி இயற்கையாக அமைந்திருக்கும், அழகிய, பனித்துளிகளாலான வளையம் போன்ற அமைப்பு இந்தப் படங்களில் அற்புதமாகத் தெரிகிறது.
மேலும், சனிக்கிரகத்தைச் சுற்றி அமைந்திருக்கும் அதன் நிலவுகளில் சிலவும் இந்த புகைப்படங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.
சூரியன், சனிக்கிரகம் மற்றும் இந்த கேசினி விண்கலன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்த போது ஏற்பட்ட இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, சனிக்கிரகத்திலிருந்து பல கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும், பூமியையும், படம் எடுக்க முடிந்திருக்கிறது.
இந்த விண்கலனால் எடுக்கப்பட்ட படத்தில், நாம் வசிக்கும் பூமி, ஒரு சிறிய புள்ளி போல, தன்னந்தனியாகத் தெரிவதைப் பார்க்கலாம்.
பூமியை இது போல ஆழ் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் முன்பும் வந்திருக்கின்றன.
1990ல் அமெரிக்க விண்கலனான ” வாயேஜர்” கலன் சூரியக் குடும்பத்திற்கு அப்பாலிலிருந்து எடுத்த படத்தில் பூமிக் கிரகம், ஒரு வெளிர் நீலப் புள்ளி போல தெரிந்தது. அந்தப் புகழ் பெற்ற படம் , விண்வெளியில் மனித சமூகம் எப்படி தன்னந்தனியாக இருக்கிறது என்பதையும், பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தியது.
இதே போல 2006ம் ஆண்டிலும், சனிக் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இருந்த கேசினி விண்கலன் தொலை தூரத்தில் தெரியும் பூமியை எடுத்த படம் , சனியைச் சுற்றி இருக்கும் பனித்துளி வளையத்தின் பிரம்மாண்டத்தை ஒப்பிட்டுப்பார்க்கையில, ஒரு சிறு துளி போலத் தெரிவதைக் காட்டியது அனைவரையும் பிரமிக்கவைத்தது.