கொழும்பு: குடிவரவு குடியகல்வு சட்ட விதிகளை மீறினார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தங்களது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். நவம்பர் 08 ஆம் திகதி ‘விசிட்டிங் வீஸா’ மூலம் இலங்கைக்குள் வந்திருந்த மேற்படி அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அரசியல்வாதிகள் நேற்றுக் காலை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்த தயாரான நிலையிலேயே, தடுத்து விசாரணைக் குட்படுத்தப் பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தலைவர் சூலானந்த பெரேரா தினகரனுக்குத் தெரிவித்தார்.
விசிட்டிங் வீஸா’ வில் நாட்டி ற்குள் வந்தவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்துவது குடிவரவு குடியகல்வு சட்டவிதிகளை மீறும் செயலெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி வெளிநாட்டு அரசியல்வாதிகள் கொழும்பு ரீட் எவென்யுவில் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்த தயாராவதாக கிடைத்த செய்தியினை தொடர்ந்து குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் தமது நாடுகளுக்கு திரும்ப இணக்கம் தெரிவித்ததாகவும் சூலானந்த பெரேரா கூறினார்.
அவுஸ்திரேலியாவில் செனட் சபையைச் சேர்ந்த வீ. ரைனோன் மற்றும் நியூஸிலாந்தின் பசுமைக் கட்சி எம்.பி. யான யான் லொக்கி ஆகிய இருவருமே இலங்கை யிலிருந்து திருப்பியனுப்பப்பட்டதாக தெரிய வருகிறது.
இவ்விருவரும் வடக்கிற்கு விஜயம் செய்ததுடன் யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததுடன் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னரே கொழும்பில் நேற்று பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்த தயாரானமை குறிப்பிடத்தக்கது.
– தினகரன்