காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய சேவையை பாராட்டி காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மற்றும் காத்தான்குடி ஜம்இய்யத்துல் பலாஹ் ஆகிய முஸ்லிம் அரபிக்கலாசாலையினுடைய ஏற்பாட்டில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கான கௌரவம் நேற்று இரவு ஜம்இய்யத்துல் பலாஹ்வின் உள்ளக மண்டபத்தில் இடம்பெற்றது. ஜம்இய்யத்துல் பலாஹ்வினுடைய பணிப்பாளர் மதிப்பிற்குரிய மௌலவி அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எப்.எம்.சிப்லி பாறுக், நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் காத்தான்குடி காதி நீதிபதியும் ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அலியார் பலாஹி உள்ளிட்ட சங்கைக்குரிய உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய சமூக சேவையினை பாராட்டி அவர் முஸ்லிம் சமூகத்திற்காக வழங்கும் அர்பணிப்புகளை பாராட்டி மதிப்பிற்குரிய மௌலவி அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களினால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நினைவுச்சிண்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு அவரோடு இணைந்து முஸ்லிம் சமூகத்திற்காக பணியாற்றி வரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எப்.எம்.சிப்லி பாறுக் நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் உள்ளிட்டோருக்கும் இந்த கௌரவம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதன் போது சிறப்பு உரையினை கவிமணி கலாபுசனம் மௌலவி புஹாரி பலாஹி அவர்கள் நிகழ்த்தியதுடன் விசேட உரையினை காத்தான்குடி காதி நீதிபதி அலியார் பலாஹி நிகழ்த்தி வைத்ததுடன் நிகழ்வின் பிரதம அதிதி உரையினை பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிகழ்த்தினார்.
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இங்கு உரையாற்றுகையில் ‘சமூகத்தின் தலைவிதியை நிர்வகிப்பவர்கள் முஸ்லிம் தலைவர்கள் குறிப்பாக உலமக்கள். உலமக்கள் மேற்கொள்கின்ற சகல நடவடிக்கைகளையும் கண்டு மற்ற மதத்தவர்கள் எமது சமுகத்தைப் பார்த்து முஸ்லிம்களின் நிலை பற்றி உணர்ந்துகொள்வதற்கு மிக முக்கியமானவர்கள் உலமாக்களே ஆகவே உலமாக்கள் தங்களுடைய வாழ்க்கைக் கல்வியினை கற்று சிறப்பாக செயற்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.