கட்டார் 3 வருட வேலைக் காலத்தை முடித்துவிட்டு 3 மாதகால விடுமுறையில் சொந்த ஊரான காத்தான்குடிக்கு நாளை இரவு விமானம் ஏறுகின்றான் அப்துல்லாஹ். செய்தி கேள்விப்பட்டதும் அவனது நண்பர்களும் இன்னும் பல ஊராட்களும் அவனைச் சந்தித்து முபாஸாபாச் செய்துவிட்டு, பெருநாளைக்கு தனது சொந்தங்களுக்கு கொடுத்தனுப்பும் சிறு பார்சல்களையும் அவனது கையில் கொடுத்துவிட்டு விடைபெறுகின்றனர்.
ஓர் தொழிநுட்ப அலுவலகராக உயர் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் அப்துல்லாஹ்வுக்கு ஊரை நினைக்கையில் மண்வாசனை மூக்கைத் துளைக்கின்றது. தனது அன்புத் தாய், தந்தை மற்றும் தங்கை அனைவரையும் கண்ணீருடன் பிரிந்துவந்த அந்த நாட்களை நினைக்கையில் இன்னும் அவனுக்கு அழுகை அழுகையாகவே வரும்.
அல்ஹம்துலில்லாஹ்! ஏதோ என்னால் முடிந்ததை சேமித்து இருந்த கடன்களைக் கொடுத்து, தங்கச்சிக்கும் வீடு கட்டுவதற்கு ஓர் காணித்துண்டையும் வாங்கி, அந்தக் காணியில் தற்போதைக்கு வசிக்கக்கூடிய அளவுக்கு ஓர் வீட்டையும் அரைவாசிகட்டி முடித்திருக்கிறான். இதனை நினைக்கையில் வெளிநாடு வந்ததில் தன்னிடம் போதியளவு இல்லாவிட்டாலும் குடும்பம் சந்தோசமாக வாழ்ந்திருக்கிறது. அதனால் எப்போதும் அல்லாஹ்வைப் புகழ்ந்துகொள்வான்.
ஊர் மக்கள் எதிர்பார்த்தபடி பெரிய சம்பளம் இல்லாவிட்டாலும், அவன் எதிர்பார்த்த சம்பளத்தில் அவனுக்கும் ஓர் திருப்தி.
இருபத்தாறாம் இரவு: புனித ரழழானின் வாடை மக்கள் மனங்களில் மகிழ்ச்சியை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. தான் கொண்டு வந்த பொருட்களைப் பிரித்து வாப்பா, உம்மா, தங்கச்சிக்குக் கொடுத்திவிட்டு, நண்பர்களின் பார்சல்களை கொடுப்பதற்காக வாப்பாவின் பைக்கிள் விரைகின்றான்.
மெயின்வீதி… ஓர் சிறிய கட்டார் போல் காட்சியளித்தது! மக்கள் அலை மோதுகின்றனர். பித்ரா அரிசி என்றும், பித்ரா காசி என்றும் கடைத்தெருக்களில் பலர் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர். பெண்களும் ஆண்களும், சிறுவர்களும் கடைத்தெருக்களில் பெருநாள் ஆடைகள் கொள்வனவுகளுக்காக நிரம்பி வழிந்தனர்.
வீடு திரும்பியதும், உம்மாவின் கையால் ருசியாகச் சமைக்கப்பட்ட இரவுச் சாப்பாட்டை அனைவருடன் மகிழ்ச்சியாக இருந்து ருசித்து, ருசித்து சாப்பிட்டான். கட்டார் போகும் போது 6ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த தங்கை பெரிய ஆளாக தோளுக்கு மேல் வளர்ந்திருந்தால். உம்மாவும் தங்கையும் தறாவீஹ் தொழுவதற்கு பள்ளிக்குபோக பக்கத்து வீட்டு ராத்தாவுடன் போகுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். தான் கட்டார் வரும்போது சிறுவர்களாக இருந்தவர்களெல்லாம் இப்போது அடையாளம் தெரியாதளவுக்கு வளர்ந்திருக்கின்றனர். ஆச்சரியமாகவே இருந்தது அவனுக்கு
இருபத்தேழாம் இரவு! இந்த இரவை ஊரில் எனது பள்ளி நண்பர்களுடன் கொண்டாட வேண்டும் என்று எத்தனை நாள் காத்திருந்தேன். அந்த நாட்கள் மீண்டும் வந்துவிட்டது. பள்ளிக்குப் போனான். மக்கள் ஆர்வமாய்க் கேட்டனர். தம்பி எப்ப வந்தீங்க? லீவுல வந்தீங்களா? முடிச்சிட்டு வந்தீங்களா? அவன் புன்னகையோடு சொன்னான் ‘ லீவுலதான் வந்தேன்‘ (விட மாட்டாங்களே)
பள்ளிவாயல் நிறைந்து நறுமனம் வீசிக்கொண்டிருந்தது. சிறுவர்களும் பெரியவர்களும், பெண்களும்….அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. மாஸாஅல்லாஹ்! எப்படி இருந்த ஊர். வெடியோசையும், குண்டு வெடிப்புக்களும் சுமந்த மண். ஆனால்… இன்றும் ஓர் பெருநாள் போன்றே இருக்கின்றது.
ரமழான் 28ம் நாள். மறுநாட்காலை அப்துல்லாஹ்வின் வருகையைக் கேள்விப்பட்ட உறவினர்கள், நண்பர்கள் அவனைத் தேடி வந்து நலம் விசாரித்தனர். மாமாமாரும் தனது பிள்ளைகளுடன் வந்தனர். கொண்டு வந்த உடுப்புக்களையும் இனிப்புக்களையும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தான்.
அப்துல்லாஹ்வுக்கு மூன்று மாதத்துக்கு முன்புதான் திருமணம் நிச்சயமானது. அவனுக்கு வயது 28. எனினும் தங்கச்சியின் திருமணத்தின் பின்னர்தான் தான் திருமணம் செய்வதாக சொல்லிவந்தான். எனினும் உம்மா, வாப்பாவின் வற்புருத்தலால் சம்மதித்து நோன்புப் பெருநாள் மாசம் முடிப்பதற்கு ஆமோதித்தான்.
‘நாளை இரவு ஒரு வேளை பெருநாளாக இருக்கலாம். அதனால இன்றிரவு பெண்ணைப் பார்த்திட்டு வருவோம்‘ என உம்மா, வாப்பா, தங்கையுடன் சென்று பெண்ணைப் பார்த்து, பேசிவிட்டு அன்பளிப்பாக ஒரு மொபைல் போனையும் கொடுத்துவிட்டு வந்தான்.
சிறுவயதில் குடும்பக் கஸ்டத்தில் உயர் கல்வியைக் கற்காவிட்டாலும், தொழிநுட்பக் கல்வியைக் கற்று முன்னேறியவன் அப்துல்லாஹ். தங்கையை எப்படியும் படிக்கவைத்து ஆளாக்கவேண்டும் என்றுதான் அவனது ஒரே விருப்பம்.
இருபத்தொன்பதாம் இரவு அது. பள்ளிக்குப் போவோம் என்றிருக்கையில் மாமா வந்தார். ‘எனக்கும் தொழில் கஸ்டம். 3 பிள்ளைகள். உடுப்பேதும் இன்னும் எடுக்கல்ல. கடனோடதான் வாழ்க்கையை சமாளித்திட்டு வாரேன். கையில காசு இருக்கா‘ என்று அப்துல்லாஹ்விடம் கேட்டார்.
சின்ன வயசுல எங்களை வளர்த்து ஆளாக்கியவர். எப்படி இல்லை என்பது. இதற்கு முன்னரும் கொடுத்திருகிறான். என்றாலும் பெருநாள்…. யோசித்துவிட்டு ‘எவ்வளவு வேணும்‘ என்று கேட்டு, அவருக்குத் திருப்தியான அளவில் பணத்தைக் கொடுத்தான்.
பள்ளியில் சந்தித்த நண்பன் கேட்டான் ‘ மச்சான் ஒரு இரண்டு லட்சம் இருந்தா கொடு. அவசரமா செக் பிரச்சினை இருக்கு. நான் 2 மாசத்தில தந்திடுவேன்‘.
‘அந்த அளவு எனக்கிட்ட இல்ல மச்சான் ஒரு ஐம்பது தாரேன். ஆனா நீ உனது வசதிப்படி ஆறதலா பிறகு தா. அவசரமில்ல‘ என்றான்.
பெருநாள் தினம்: புத்தாடைகளும் நறுமனங்களும் வகைவகையான உணவுகளும் வர்ணிக்க ஏது வார்த்தைகள். என்ன இருந்தாலும் பெருநாள் என்றா அது அவன் அவன்ட ஊரில கொண்டாடனும். அதுவும் காத்தான்குடி என்றா அதைவிட வேறு எந்த இடம் வேண்டும் பெருநாள் கொண்டாட!
பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு நண்பர்களோடு பைக்கிள் சவாரி சென்று கூல் ஸ்பொட் போய் வீடு வந்தான் அப்துல்லாஹ். பெண்வீட்டார் மூவர் திருமணம் பற்றிப் பேச வந்திருந்தனர். திருமணம் அடுத்தவாரம் நிச்சயிக்கப்பட்டது.
தங்கச்சியின் வீடு கட்டியதில் கட்டுமானப் பொருட்கள் எடுத்த கடையில் பாக்கியாக 170,000 வரைக்கும் இருந்தது. அதையும் கொடுக்க வேண்டும். திருமணத்துக்கு நகை கட்டாரிலிருந்து கொண்டு வந்தான். 4 பவுண்வரைக்கும்தான் இருக்கும். திருமணச்செலவுகள் இப்படி செலவு போய்க்கொண்டிருந்தது.
திருமணம் இனிதே முடிந்தது. வலீமா விருந்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பெண்வீ;ட்டார்கள் சிலர் ஒன்று சேர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுள்…

‘கட்டாரில இருந்து வந்த எங்கட மச்சான் எனக்கு 10 பவுண்ல தாலி கட்டினாரு. அடையாளம் போடுவதற்கு ஒரு லப்டப் அனுப்பி இருந்தாரு‘
‘எங்கட தங்கச்சிக்கு அவட மச்சான் அடையாளம் போடுவதற்கே 2 பவுன்ல பிஸரஸ்லட்டும் ஒரு போனும் கொடுத்தாரு‘
‘என்ட கூட்டாளி சியாமாவுக்கு அவங்கட மச்சான் 3 பவுண்ல அடையாளமும் போட்டு 7 பவுண்ல தாலி கட்டி இப்போ கட்டாருக்கும் கூட்டிட்டுப் போயிட்டாரு‘….
இவ்வாறு தொடர்ந்தது…
பாவம் அப்துலலாஹ். அவனுக்கு வாழ்க்கையே அவனது அருமைக் குடும்பம். என்றாலும் திருமணம் ஒரு வாழ்க்ககையின் பாதி. திருமணம் முடித்து தன் அன்பு மனைவியுடன் இனிதாய் வாழ்ந்த இரு மாதங்களில் மீண்டும் கட்டார் செல்ல ஆயத்தமாகிறேன்.
மனைவி விடாப்பிடியாக அழுதாள் ‘போகாதீங்க. இங்க ஏதாவது தொழில் செய்ங்க‘.
கட்டாரில் 3 வருடங்கள் உழைத்த பணம் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும், கல்லிலும் மண்ணிலும், நன்கொடைகளிலும்…திருமணத்திலும் கரைந்துவிட்டன.
சமுதாயத்தக்கு ஒவ்வொரு மனிதனின் நிலை எங்கே விளங்கப்போகின்றது. தன்னால் சுமக்க முடியுமான அளவில், வயித்தக்கட்டி, வாயக்கட்டி உழைத்து குடும்பத்தைப்பார்க்க, பெருநாள்கொண்டாட, திருமனம் முடிக்க ஊர் போனால் சமூகத்தின் பார்வை ஓர் ராஜ பாரவையாகவே இருக்கின்றது.
பயணப்பொதிகள் தயாராகிக் கொண்டிருந்தன. அன்பு மனைவி தோளில் சாய்ந்து அழுது–அழுது ‘போகாதீங்க..’.என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
புரியவைக்க முடியாது. 3 மாத லீவில் ஊர் வந்த அப்துல்லாஹ்வுக்கு 4 இலட்சம் மீண்டும் கடன். ஒரு கடனாளியாகவே அவன் விமானம் ஏறப் புறப்படுகையில் அவனது அன்பு மனைவி கேட்டாள்….’எனக்கு இங்க இருக்கேலா.. நீங்க வாங்க இல்லாட்டி…எப்படியாவது என்னை அங்கு கெதியா எடுங்களேன்‘
பெருநாளைக்கு ஊருக்கு வந்த அப்துல்லாஹ் மீண்டும் பயணிக்கிறான் கட்டாருக்கு. விமானத்தில் கண்ணீருடனும், பல கற்பனைகளுடனும் உழைக்க வேண்டும் என்பதற்காக மாத்திரம் கடல் கடக்கும் ஆயிரம் இதயங்களுள் மீண்டும் அப்துல்லாஹ் இணைந்து கொள்கிறான்.