கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் குருநாகல், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (04) நண்பகல் கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இடம்பெற்றன.
இதன் போது வேட்பாளர் அறிமுகம், தேர்தலுக்கான முன் ஆயத்தங்கள், மேற்கொள்ளப்படவுள்ள பிரசார யுக்திகள் என்பன பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடல்கள் குருநாகல் மாவட்டத்திற்கு வேறாகவும், வடமாகாணத்திற்கு வேறாகவும் தனித்தனியாக இடம்பெற்றன.
குருநாகல் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலில் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி எம்.பி, முதன்மை வேட்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தொழில் அதிபர் தஸ்லீம் ஆகியோர் பங்குபற்றினர்.
வடமாகாண சபைத் தேர்தல் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலில் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி எம்.பி, முத்தலீப் பாவா பாருக் எம்.பி, கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.