சிறுவர் என்பதற்குரிய வரைவிலக்கணம் பதினெட்டு வயதிற்கு குறைந்த ஆண், பெண் என்பதாகும். இது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரைவிலக்கணமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் தொடர்பான சமவாயம் இதனையே வெளிப்படுத்துகின்றது.சிறுவர்கள் இன்றைய எமது சமூகத்தின் நாளைய சிறந்த பயனுக்காக விதைக்கப்படும் விதைகள் என்பது யாவரும் அறிந்த விடயம்.
இவ்வாறிருந்தபோதிலும் இன்று அவர்கள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாக அவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக நடத்தைகளே காணப்படுகின்றன. இது அவர்களை உடல், உளரீதியாக பாதிப்புக்குள்ளாக்குவதாக அமைகின்றது. இன்று எமது சமூகம் நாகரிகம் உச்சத்தின் மீது தனது செயற்பாடுகளை அமைத்து வருகின்றது.
வளர்ந்து வருகின்ற விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள் கயவர்களால் தீயமுறையில் பயன்படுத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறுவர்களைப் பயமுறுத்தி ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் எடுக்கின்றனர். இவ்வாறு எடுக்கப்படும் வீடியோக்களை, படங்களைப் பிரசுரிக்கின்றனர். புகைப்படக்கருவிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இதுபோன்ற பலதரப்பட்ட நவீன அபிவிருத்தியிலான தொழில் நுட்பங்களுடன் தயார் செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டு தேவையற்ற முறையில் அதனைப் பயன்படுத்தி சிறுவர்கள் அறியாத சந்தர்ப்பத்தில் படமெடுத்துப் பின்பு அவைகளைக் காட்டிப் பயமுறுத்தி அவர்களைக் கொண்டு தங்களின் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.
சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் 17(2) எனும் பந்தியில் சிறுவருக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய தகவல்கள் மற்றும் தகவல் சாதனங்கள் என்பவற்றிலிருந்து சிறுவர்களைப் பாது¡ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கிறது. எனவே சிறுவரின் ஒழுக்கத்திற்குக் கேடான தகவல்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் என்பது உணர்த்தப்படுகின்றது. பாலியல் ரீதியான துஷ்பிரயோக நடவடிக்கை பலரும் வெறுக்கத்தக்க இழிவான செயலாகும்.
சிறுவரின் மீது பிரயோகிக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் என்பதற்கான ஏற்பாடுகள் தண்டனைச் சட்டக் கோவை மற்றும் ஆபாசப் படங்கள், கட்டளைச் சட்டம் என்பவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது. முதலில் தண்டனைச் சட்டக்கோவை எவ்வாறான ஏற்பாடுகளை கொண்டுள்ளது எனப் பார்ப்போம்.
அவையாவன, சிறுவர்கள் ஆபாசப் படங்களில் தோன்றக் காரணமாக இருப்பது, அத்தகைய படங்களை வைத்திருப்பது.
புகைப் படங்களைக் கழுவுபவர்கள் அத்தகைய ஆபாசப் படங்களைக் கண்டால் பொலிஸ¤க்கு அறிவிக்கத் தவறுதல்.
ஆபாசப் படங்களை விற்கும் அல்லது கண்காட்சி நோக்கத்திற்காக உற்பத்தி செய்தல், வைத்திருத்தல்.
கணினி சேவை வழங்குனர், அது சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு பயன்படாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சேவை வழங்குனர் இதனை மீறிச் செயற்படுதல் அல்லது அறிவிக்கத்தவறுதல் குற்றமாகும்.
ஏதேனும் வளவு அல்லது கட்டிடத்தின் பொறுப்பை, கட்டுப்பாட்டை அல்லது உடைமையை வைத்திருப்பவர் அவ்விடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக அறிந்து பொலிஸ¤க்கு அறிவிக்க தவறுதல், சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பரிந்து கேட்டல்.
ஆபாசப் படங்களை அல்லது எழுத்துக்களை விற்கும் அல்லது கண்காட்சி நோக்கத்திற்காக உற்பத்தி செய்தல், வைத்திருத்தல்.
சிறுவர்களைப் பாலியல் நடவடிக்கைகளில் பங்குகொள்ள அனுமதித்தல், விளம்பரம் ஊடாகதூண்டுதல்.
ஆட்களிடையிலான மிக்க இழிவான செயல் (தன்னினச் சேர்க்கையை உள்ளடக்கலாம்).
ஒருவர் இன்னொருவரை சொல், செயல் மூலம் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்குதல். 2006ம் ஆண்டின் 16 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவைக்கான திருத்தத்தின்படி பாலியல் வல்லுறவு பாரிய பாலியல் துய்பிரயோகம் அல்லாதவற்றை உள்ளடக்கலாம், அத்துடன் உள அல்லது மனோ நிலையிலான பாதிப்பினையும் உள்ளடக்க முடியும்.
பாலியல் குற்றமொன்றில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை தெரியக்கூடியதாக செய்தி வெளியிடுதல்.
பாலியல் நோக்கத்துக்காக ஆட்களை சேர்ப்பதற்கு சிறுவர்களைப் பயன்படுத்தல்.
மேலும் ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2, பின்வருமாறு ஏற்பாடு செய்கின்றது. ஏதாவது ஆபாசமான விடயத்தை உள்ளடக்கிய ஒன்றை விற்பதற்காக, விநியோகம் செய்வதற்காக, பொதுக் கண்காட்சிக்காக, ஏற்றுமதிக்காக, இறக்குமதிக்காக, விளம்பரம் செய்வதற்காக, உற்பத்தி செய்தல், உடைமையில் வைத்திருத்தல் குற்றமாகும் எனச் சுட்டிக்காட்டுகின்றது.
சிறுவர்கள் ஆபாச விடயங்களில் பங்கேற்கின்ற விடயமானது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அவை தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போது சர்வதேச ரீதியாக இணையத்தளப் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சிறுவர்கள் தேவையற்ற நடத்தைகளுக்குத் தானாகவே உள்வாங்கப்படுகின்றனர். மேலும் இன்று அநேக சிறுவர்கள் சமுதாயத்தில் காணப்படுகின்ற சீர்கேட்டாளர்களால் விலைப்படுத்தப்படுகின்றனர். இது சமுதாய ஒழுக்கத்தினை வீழ்ச்சிக்கு உட்படுத்தும் இழிவான செயலாகும்.2005 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க விபசாரத்திற்காகப் பெண்களையும்,சிறுவர்களையும், விலைப்படுத்தலைத் தடுத்தலும், எதிர்த்தலும் மீதான சமவாயச் சட்டமானது (Convention on preventing and combating Tariffing in woman and children Act.) விபசாரத்திற்காகப் பெண்களையும், சிறுவர்களையும், விலைப்படுத்தலைத் தடுத்தலும், எதிர்த்தலும் மீதான சார்க்சமவாயம் 2004 ஆம் ஆண்டு ஜனவரியில் பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய கழகத்தினால் காத்மண்டுவில் ஏற்றுக்கொண்டதன் விளைவாக கொண்டுவரப்பட்டது. இச்சமவாயத்திற்கு 2000 ஆம் ஆண்டு ஜனவரி 5ந் திகதியன்று இலங்கை கையெழுத்திட்டது. இச்சட்டத்தின் கீழ் சிறுவர்களை விலைப்படுத்தும் நோக்கத்திற்காக அல்லது அதனுடன் தொடர்புபட்ட விடயத்திற்காக ஏதேனும் கட்டிடத்தை முகாமை செய்கின்ற அல்லது அதனை அறிந்துகொண்டு நிதியளிக்கின்ற அல்லது வாடகைக்கு விடுகின்ற ஆள் குற்றம் புரிந்தவராவார்.
இன்று உலகம் கிராமமாக சுருங்கி வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இதன் விளைவாக நாம் வெகுசன தொடர்பு சாதனங்களோடு பின்னிப் பிணைகின்ற நிலைமை இயல்பாகவே உருவெடுக்கின்றது. தினந்தோறும் இவற்றில் அவதானிக்கப்படுகின்ற தீய விடயங்களும், பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு தூண்டுகோலாக அமைகின்றன.
மேலும் சிறுவர் தொடர்பான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பின் காரணமாக அமையும் விடயமாக சிறுவர் உழைப்பு காணப்படுகின்றது. சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படும் இடங்களில் மிகக் கூடுதலான பாலியல் வன்முறைகள் இடம்பெறுகின்றன. இதனை தடுக்கும் முகமாக கீழ்த்தரமான சிறுவர் உழைப்பு சமவாயத்தின் 1999 ஆம் ஆண்டு (worst forms of child labour convention) உறுப்புரை 03 இல் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் விபசாரம், ஆபாசப்பட உற்பத்தி என்பவற்றுக்கு சிறுவர்களை உபயோகித்தல் கீழ்த்தரமான வேலை ஆகும்.
மேலும் இன்று சட்டத்திற்கு முரணாக சிறுவர் திருமணங்கள் இடம்பெறுகின்றன. பொருளாதார பிரச்சினை, போதிய அறிவின்மை, யுத்தம், மூட நம்பிக்கை போன்ற இன்னோரன்ன காரணங்கள் இவற்றுக்கு மூலகாரணமாக அமைகின்றன. இவ்வாறான திருமணம் என்னும் போர்வையில் ஏராளமான பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன. இன்று சிறுவர் உரிமைகள் பற்றிப் பேசிவருகின்ற காலகட்டத்தில் அவர்களின் கல்வி, சுகாதாரம், ஆரோக்கியம் முடக்கப்படும் நிலைமை இதனால் உருவாகின்றது.
சிறுவர் திருமணங்கள் சிறுவர்களை உடல், உளரீதியாக வெகுவாக பாதிக்கின்றன. “சிறுவர் திருமணங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகளுக்கான பொருத்தனைகளும்” பின்வருமாறு கூறுகின்றது. இதன் பிரகாரம் பிள்ளையின் அதிகூடிய அக்கறையைக் கருத்திற்கொள்ள வேண்டும். மேலும் பிள்ளையுடைய கருத்துக்களை எவ்விதமான தலையீடின்றியும் சுதந்திரமாக தெரிவிக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். திருமணத்திற்கு சம்பந்தப்பட்ட ஆண், பெண், இருவருடைய சம்மதமும் முக்கியமாகும். சில நிர்ப்பந்திக்கப்பட்ட சூழ்நிலைகளில் பிள்ளைகளுடைய சம்மதத்திற்கு முரணாக பலாத்கார சிறுவர் திருமணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.
பெற்றோரால் கைவிடப்படும் சிறுவர்கள் வீதிகளில் மிகக் கடுமையான அவலங்களை எதிர்நோக்குகின்றனர். சில சிறார்கள் சமூகத்தில் காணப்படும் துஷ்டர்களால் பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளுக்கு வற்புறுத்தி திணிக்கப்படுகின்றனர்.
சிறுவர்கள் தேசத்தின் சொத்துக்கள், அவர்களை சமுதாயத்தில் காணப்படும் துஷ்டர்களிடமிருந்துது காப்பாற்றுவது அரசினதும், சமூகத்தினதும் பாரிய பொறுப்பு ஆகும். பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகள் மற்றும் அவற்றுக்கு தூண்டுதலாக அமையும் காரணிகள் இனங்காணப்பட்டு சமூகத்திலிருந்து அடியோடு இல்லாமலாக்கப்பட வேண்டும். எப்பொழுதும் சிறுவர்கள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். எமது சமூகத்தில் உள்ளவர்கள் சிறந்த மனிதனாக அவர்களிடம் நடந்துகொள்ளும் பட்சத்தில் தான் எதிர்காலத்தில் அவர்கள் ஒழுக்கத்துடன் சிறந்த மனிதர்களாக உருவெடுப்பார்கள்.
-தினகரன்