உலக மக்களுக்கெல்லாம் ஒளியாக அருளப்பட்ட புனித அல்குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தை முஸ்லிம்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள்.வருடத்தில் உள்ள ரமளான் தவிர்ந்த ஏனைய பதினொரு மாதங்களுக்கும் பயிற்சி பெறக் கூடிய மாதமான ரமளானை நாம் எவ்வாறு கழிக்க வேண்டும்.வெறுமனே முஸ்லிம்கள் அது வருவதையிட்டு குதூகலமாக இருந்தால் மாத்திரம் போதுமா? என்ற சில விடயங்களை இந்த கட்டுரையினூடாக பார்ப்போம்.
இஸ்லாமிய மார்க்கத்தில் புனித ரமளான் மாதம் என்பது மிகப் பெரும் அருள் பொருந்திய ஒரு மாதமாகும்.ஏனெனில் அதில்தான் உலக மக்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டக் கூடிய புனித அல்குர்ஆன் அருளப்பட்டது.
அல்லாஹ் கூறுகின்றான் ‘நிச்சயமாக நாம் லைலதுல் கத்ர் எனும் இரவில் புனித அல்குர்ஆனை இறக்கி வைத்தோம்’ (சூரதுஸ் ஸில்ஸால்)
தொடர்ந்து அல்லாஹ் ‘லைலதுல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது’ எனக் குறிப்பிடுகின்றான்.
இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை பொதிந்துள்ள இந்த ரமளான் மாதம் உலக மக்களுக்கு ஒரு ஏழையின் பசியின் கொடூரத்தை உணர்த்துகின்றது.ரமளானில் அதிகாலையிலிருந்து மஃரிப் வரையான காலப்பகுதிக்குள் ஏழை பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி பசித்து தாகித்திருப்பதன் மூலம் சகலருக்கும் பசிக்கொடுமையை உணர்த்துகின்றது.
அநாதைகள்,ஏழை எளியோரின் உணர்ச்சிகள் என்பவற்றை பிரதிபலித்துக் காட்டக்கூடிய ஒன்றாக இந்த நோன்பு அமைந்துள்ளது.
உண்ணுவதற்கு உணவிருந்தும் அருந்துவதற்கு பானமிருந்தும் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு அடிபணிந்து உண்ணாமல் பருகாமல் போராட்டத்துடன் இருப்பதன் மூலம் மாபெரும் பொறுமையை இஸ்லாம் இம்மாதத்தில் முஸ்லிம்களுக்கு போதிக்கின்றது.
என்ன கஷ்டங்கள் என்ன துயரங்கள் நேர்ந்தாலும் பொறுமை என்ற மிகப் பெரிய கேடயத்தை இந்த நோன்பு முஸ்லிம்களுக்கு வழங்குகின்றது.
ஆனால் முஸ்லிம்களில் சிலர் அதில் அசட்டைத் தனம் செய்கின்றனர்.
இந்த மாதத்தில் ஒரு மனிதன் நோன்பினூடாக உடல் உள சமூக ரீதியாக சிறந்த பலாபலன்களை அடைந்து கொள்கின்றான்.
போதியளவு உணவுக்கட்டுப்பாடு,சிறந்த உடல் கட்டமைப்பு,இச்சைகளை கட்டுப்படுத்தல்,தரங்கெட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்புப் பெறல் உள்ளிட்ட பல்வேறு பலன்களை அடைந்து கொள்கின்றான்.
ஷைத்தானுடைய ஊசலாட்டம் இல்லாத சிறந்த ஆண்மீக சூழல் ரமளானில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதனால் ஆண்மீக ரீதியில் பாரிய விமோசனத்தை ஒரு மனிதன் அடைந்து கொள்ளலாம்.
ஏனெனில் ‘ரமளான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் வாயில்களெல்லாம் திறக்கப்படும்.நரக வாயில்கள் மூடப்படும்.ஷைத்தான்களெல்லாம் விலங்கிடப்படுவார்கள்'(ஆதாரம்:புகாரி,முஸ்லிம்) என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
புனித அல்குர்ஆனை பாராயனம் செய்தல்,இரவு வேளைகளில் தொழப்படக் கூடிய தராவீஹ் எனப்படும் இராக்கால வணக்கம்,எமது தேவைகளை அல்லாஹ்விடத்திலே கேட்டு மன்றாடி பெற்றுக் கொள்ளல் போன்ற பல்வேறு ஆண்மீக செயற்பாடுகளை எவ்வித இடைஞ்சலுமின்றி செய்யக் கூடிய வாய்ப்பு இந்த ரமளானில் வழங்கப்படுகின்றது.
‘என்னுடைய அடியான் என்னைப் பற்றிக் கேட்டால் நான் சமீபத்திலே உள்ளேன் என நபியே! நீங்கள் கூறுங்கள்.என்னை அவர்கள் அழைத்து அவர்களது தேவைகளைக் கேட்டால் அவற்றைக் கொடுப்பதற்கு நான் தயார் நிலையிலே உள்ளேன்.என்னை அவர்கள் நம்பிக்கை கொள்ளட்டும்.அவர்கள் சீர் நிலையை அடைந்து கொள்வார்கள்’ (அல்குர்ஆன் சூரா பகரா 186)
இந்த நோன்பினூடாக ஒரு மனிதன் சகல அழுக்காறுகள்,பாவச் செயல்களை விட்டும் தூய்மையாக்கப்பட்டு அதிக நன்மைகளை சம்பாதிக்கக் கூடியவனாக மாறுகின்றான்.
நபி முஹம்மத் (ஸல்) கூறினார்கள். ‘யாரொருவர் ரமளான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்த வண்ணமும் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கிறாரோ அவருடைய முன்னைய பாவங்கள் அனைத்தும் மண்ணிக்கப்படும்’ (நூல்:புகாரி)
இந்த நோன்பு மாதத்தில் நபியவர்கள் அதிகமாக தான தர்மங்களை செய்திருக்கிறார்கள்.முஸ்லிம்களுக்கு மாத்திரமில்லாமல் ஏழைகளாக கஷ்டத்துடன் இருப்பவர்களுக்கு எம்மால் முடியுமான அளவு தர்மங்களை செய்ய வேண்டும். ‘இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)அவர்கள் ஏனைய மாதங்களை விட ரமளான் மாதத்தில் அதிகம் வாரி வழங்கக் கூடியவராக இருந்துள்ளார்கள்.ரமளானில் ஜிப்ரீல்(அலை) சந்திக்கும் நாட்களில் நபியவர்கள் பலமாக வீசும் காற்றை விட வேகமாக தர்மம் செய்யும் கொடை வள்ளலாக இருந்தார்கள்’ (புகாரி,முஸ்லிம்)
அவர்களோடு மனிதாபிமானமாக நடந்து கொள்ள வேண்டும்.நம்மிடத்தில் கொடுப்பதற்கு இல்லாவிட்டாலும் அழகிய வார்த்தைகளை உபயோகித்து அவர்களோடு நடந்து கொள்ள வேண்டும்.
அது மாத்திரமல்லாமல் நோன்பின் பிரதான இலக்கான இறையச்சத்தை ‘தக்வா’ பெற்றுக் கொள்ள முடியும்.
அல்லாஹ் கூறுகின்றான். ‘ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக மாற வேண்டும் என்பதற்காக நோன்பு உங்களுக்கு முன்பிருந்தோருக்கு கடமையாக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் கடமையாக்கியிருக்கின்றோம்’ (அல் பகரா 183)
நோன்பு என்பது வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் அல்ல.அதில் அல்லாஹ்வைப் பற்றிய அச்ச உணர்வு அதிகரிக்கப்பட வேண்டும்.வீண் பேச்சுக்கள்,கேளிக்கைகள்,பொய்,பொறாமை உள்ளிட்ட இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களை செய்தல் கூடாது.அவ்வாறு செய்தால் பிடித்திருக்கின்ற நோன்பினால் எவ்வித பிரயோசனத்தையும் அடைந்து கொள்ள முடியாது.
ஏனெனில் நபியவர்கள் சொன்னார்கள். ‘நோன்பின் போது யார் பொய் பேசுதல்,பொய்யாக நடந்து கொள்ளல் என்பவற்றை விட்டு விட வில்லையோ அவர் காலையிலிருந்து மாலை வரை பசித்திருப்பதன் மூலமோ அல்லது தாகித்திருப்பதன் மூலமோ எவ்வித பயனும் கிடையாது’ (புகாரி)
‘ஆதமுடைய மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் அவர்களுக்குரியது நோன்பைத் தவிர.ஏனெனில் நோன்பு எனக்குரியது.அதற்கு நானே கூலி வழங்குகின்றேன்’ அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
அது மட்டுமல்லாமல் ‘சுவர்கத்தின் ரய்யான் என்று சொல்லப்படக்கூடிய ஒரு வாயில்(கதவு)உள்ளது.அதிலே நோன்பாளிகளைத் தவிர யாருமே நுழைய மாட்டார்.அங்கே நோன்பாளிகள் எங்கே?என்று கேட்கப்படும்.உடனேயே நோன்பாளிகள் குறித்த கதவினூடாக சுவண்டிகள் நிறைந்த சுவனபதிக்குள் நுழைவார்கள்’ (ஆதாரம் புகாரி)
இவ்வாறான எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கக்கூடிய இந்த அருள்மிகு ரமளான் மாதத்தை பொன்னான முறையில் கழிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
ஆனால் இன்று சமூகத்தில் சிலர் ரமளானை கேளிக்கைக்கும் விளையாட்டுக்கும் நித்திரை கொள்வதற்குரிய மாதமாக எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
காலையில் ஸஹர் செய்து விட்டு சுபஹையும் தொழுது விட்டு ளுஹர் வரைக்கும் தூங்கி பின்னர் ளுஹர் தொழுது விட்டு மீண்டும் அஸர் தொழுகை வரைக்கும் மொத்தமாகவே ரமளானை தூக்கத்தில் கழிக்கக் கூடிய சிலர் உள்ளனர்.
இவ்வாறு அலட்சியம் செய்வதற்காக கடமையாக்கப்பட்டதல்ல இந்த ரமளான் மாதத்தின் நோன்பு.
ரமளான் என்பது மிகப் பெறுமதி வாய்ந்த ஒரு மாதமாக இருப்பதால் அம்மாதத்தில் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அட்டவணையிட்டு ஒழுங்குபடுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் ரமளானின் பூரண பலாபலன்களை அடயாதவர்களாக நாம் மாறிவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
ரமளான் மாதத்தில் நாம் செய்யக் கூடிய செயல்கள் வணக்க வழிபாடுகளை பாதித்து விடக் கூடாது.
ஒரு வருடத்தில் ரமளான் என்பது முப்பது அல்லது 29 நாட்களைக் கொண்ட மிக முக்கியமான ஒரு காலப்பகுதி.ஆண்மீக செயற்பாடுகளுக்கும் இதர செயற்பாடுகளுக்கும் பூரண பயிற்சியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பயிற்சிப் பாசறை.இப்படியான பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ரமளான் மாதத்தை இஸ்லாம் சொன்ன அடிப்படையில் எவ்வித குறைபாடுகளுமின்றி கழிப்பதற்கு ஏக இறைவன் அல்லாஹ் அருள் புரிவானாக!ஆமீன்.
தொகுப்பு:-
அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸி)
சிரேஷ்ட விரிவுரையாளர்,
அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி,
காத்தான்குடி