கவனம் உங்கள் வீட்டிலும் திருடர்கள் வரலாம்!

thief– எமது விசேட செய்தியாளர்

காத்தான்குடி: அண்மைக்காலமாக காத்தான்குடியில் பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவது மக்களை பீதியடையச் செய்திருக்கின்றது.

மதிலோடு மதில்கள் இணைந்து, இராப்போசனமும் நிறைவடைந்து, நள்ளிரவு 12 மணிவரை மின்விளக்குகள் எரியும் காத்தான்குடி நகரில், மக்களின் கண்களில் மண்ணள்ளித்தூவிவிட்டு, மிகத்திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!

இவ்வாறான களவுகளை பல வகைகளாப் பிரித்தாலும் முக்கியமாக பின்வருமாறு சுருங்கக் கூறலாம்.

கண்காணித்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் கொள்ளை அல்லது திருட்டுக்கள்:

அவை அதிகமாக அதிகாலை நேரங்களிலேயே இடம்பெறுகின்றன. ஆண்கள் இருந்தாலும், குழந்தைகள் இருந்தாலும், கச்சிதமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் நூற்றுக்கு நூறு வீதம் திருடர்களுக்கு வெற்றியாகவே அமைகின்றன.

இத்தகைய மாஸ்டர் மைண்ட் அல்லது மேஜர் திருட்டுக்கள் குழுக்களாகவே இடம்பெற்று வருகின்றன. இக்குழுவில் பெரிய கள்ளன் எனப்படும் ஒருவரின் அனுபவத்தால், திட்டமிட்டு கண்காணித்து காரியங்கள் கச்சிதமாக இடம்பெற்று வருகின்றன.

இவர்களின் திருவிளையாடலின் பின்னர் ஆகக் குறைந்தது 10 இலட்சம் பணம், 20 பவுண் நகை, இதரப் பொருட்கள் என வரிசைப்படுத்த முடியும். இதுவரையிலும் இவர்களால் திருடப்பட்ட எந்த பொருட்களும், பணமும் உரியவர்களுக்குக் கிடைக்கப்பெற்றதாக சரித்திரமில்லை!

திருட்டுச் சம்பவங்களுக்கு, குழுக்களாக வரும் இவர்கள், தற்பொழுது மயக்க மருந்துகளை வீட்டுக்குள் ஸ்ப்றே மூலமாக தெளிப்பதாகவும், அதன் பின்னர் தங்களது வேட்டையை கச்சிதமாக முடித்து, இலகுவாக தப்பிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இவ்வாறான மயக்க மருந்து ஸ்ப்ரே தெளிக்கின்றனரா என்பது இதுவரையில் எவராலும் நிரூபிக்கப்படவில்லை.

நாங்கள் வழமையாக தஹஜ்ஜத்துக்கு அலாரம் வைத்து எழும்புவோம். சுப்ஹூக்கு அலாரம் வைத்து எழும்புவோம். மகள் படிப்பதற்கு எழும்புவார், பிள்ளைக்கு பால் கொடுக்க நான் அதிகாலை எழும்புவேன்…ஆனால் இன்று ஆழ்ந்த தூக்கத்தில் நாங்கள் அனைவரும் இருந்தோம். என்ன நடந்தது என்பதை ஊகிக்க முடியாமல் இருந்தது. வாழ்நாளில் நாங்கள் யாரும் இப்படி உணர்வுகளில்லாமல் உறங்கியதில்லை.. என்பதாக களவு கொடுத்த குடும்பத்தவர்கள் கூறுவதைக் கேட்கும்போது, மயக்க மருந்துகள் பாவிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

இதே போல் உறுதிப்படுத்தப்படாத கூறமுடியாத சில சம்பவங்களும் இம்மயக்க மருந்தின் மூலம் இடம்பெற்றிருப்பதாக அஞ்சப்படுகிறது.

பொலிஸார் கைவிரல் அடையாளங்களைப் பெறுகின்றனரா? மயக்க முருந்துகள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை ஆராய்ச்சி செய்கின்றனரா என்பது பற்றி தங்களுக்கு தெரியாது என்பதாக சொத்துக்களைப் பறிகொடுத்தவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான களவுகளில் ஈடுபடுவோர் வீட்டுக்கு வெளியில் இருந்து தங்களை மிக நீண்ட நாட்களாக அவதானித்திருக்கின்றனர் என்பதை உரியவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். வெளியில் போகும்போது நகைகளை அள்ளிப் போடுதல், வியாபாரம், அது சம்பந்தப்பட்ட விபரங்களை அறிந்த பின்னர் இலக்கு வைக்கின்றனர். இலக்கு வைக்கப்பட்டால், இலக்கு வைக்கப்பட்ட வீட்டில் ஆகக் குறைந்தது 10 இலட்சமாவது திருடப்படுகிறதே! வீட்டில் அன்று

இருந்த அந்தப்பணம் திருடர்களுக்கு எப்படித் தெரிந்தது??

தனித்திருடர்கள்:

இவர்கள் ஆண்கள் இல்லாத சமயத்தில் அல்லது பெண்களும், குழந்தைகளும் இருக்கும் சமயத்தில் எந்நேரத்திலும் வீட்டுக்குள் நுழைந்து வெளியில் இருப்பதை எடுத்துவிட்டு ஓட முனைவது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் கழுத்தில், கையில் அணிந்திருக்கும் நகைகளை இலக்கு வைத்து வீட்டுக்குள் நுழைவது. இவர்களில் பலருக்கு இலக்கை அடைய முடியாது.

இவர்கள் அதிகமாக பொலிஸாரிடம் மாட்டிவிடுவார்கள். களவாடப்பட்ட பொருட்களும் சில கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகம்.

வழிப்போக்கர்கள் வேடம்:

பிச்சைக்காரர்கள், மற்றும் சிறுவியாபாரிகள் போன்று வீட்டுக்குள் நுழையும் இவர்கள் கண்ணில் தெரிவதை  மடியில் கட்டிக் கொள்ளல். உதாரணமாக கையடக்க தொலைபேசி, பணம், பணப்பை, வீட்டு சிறு தளபாடங்கள். இவ்வாறு வருபவர்கள் அனைவரும் திருடர்கள் அல்லர் என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்க!

முன்னொரு காலத்தில் மின்குமிழ் திருடர்கள் அப்போது ஊரில் இருந்தனர். அதன் பின்னர் துவிச்சக்கர வண்டித் திருடர்கள் இருந்தனர். ஆனால் இப்போதெல்லாம் மெகா திருடர்கள் வலை விரித்துக் கொண்டிருக்கின்றனர்.
என்ன செய்யலாம்?

குறிப்பாக நகைகளை வெளியில் காட்டாதீர்கள். கடற்கரை, கண்காட்சி, பிள்ளைகளின் விளையாட்டுப் போட்டிகள்,மருத்துவமனைக்குக்கூட நகைகளை அணிந்தே பல பெண்கள் செல்வது வியக்கத்தக்கது!

அயலவர்களுடன் உறவாக, ஒற்றுமையாக இருங்கள். தங்களது வீட்டில் என்ன நடக்கு என்பதை இலகுவாக அறியக்கூடியவர்கள் அயலவர்கள் மாத்திரமே!

தாங்கள் எத்தனை மணிக்கு தூங்குகிறோம். எத்தனை மணிக்கு எழும்புகிறோம் என்பதை மனதில் பதித்திருப்பவர்கள் அயலவர்கள். வழமைக்கு மாறாக ஏதாவது ஊகம் எழுமாயின் முதலில் எம் கதவைத் தட்டக்கூடியவர்களும் அவர்களே!!
வித்தியாசமான நபர்களின் தொடர்ச்சியான, சடுதியான நடமாட்டம், கண்காணிப்புக்களை அப்பகுதி இளைஞர்கள் கவனத்திற்கொள்ளவேண்டும்.

பாலடைந்த வளவுகள், வீடுகள், உயரமாகக் கட்டப்பட்டு, கவனிப்பாரற்றுக்கிடக்கும் மாடிவீடுகள் இவற்றின்மீது கண்களை வையுங்கள். உளவு பார்ப்பதற்கும் திட்டங்கள் தீட்டுவதற்கும், திருட்டுக்களை வழிநடாத்துவதற்கும் இவ்விடயங்கள் உறுதுணையாக இருந்துவருவது முக்கிய விடயம்.

ஆண்கள் உதவி இல்லாதவர்கள் உறவினர்களின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களுக்கு பேச முடியாவிட்டாலும், மிஸ் கோல் அல்லது குறுந்தகவல் ஒன்றை அனுப்புங்கள். அல்லது அவசர பொலிஸாருக்கு அழையுங்கள்.

மின்விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள். அயலவர்களுக்கு சந்தேகம் ஏற்படுமிடத்து, அவசர பொலிஸாருக்கு விடயத்தை தெளிவுபடுத்தி சரியான இடத்தை குறிப்பிடுங்கள்.

ஸ்கைப் மற்றம் தொலைபேசியில் உரையாடும் பெண்கள் அவதானமாக இருங்கள். தங்களின் பேச்சில் லயித்திருப்பதால் வீட்டுக்கதவு தாழிட மறந்து போகுதல், வெளிச் சத்தத்தை உணர முடியாமல் இருத்தல் என்பவை ஆபத்தானவை.

வீட்டில் நுழைந்த கள்ளன் இவர்களின் உரையாடல்களையும், இலவச காட்சிகளையும் இரசித்துவிட்டு, திருடிவிட்டும் சென்ற சம்பவங்களும் இன்று அதிகமான வீடுகளில் இடம்பெற்று வருகின்றன.

சில வீடுகளில் உணவுகள் குழப்பி வைக்கப்பட்டிருக்கின்றதைக் காண முடிகிறது. நேரகாலத்தோடு வீட்டுக்குள் நுழையும் திருடர்கள் அல்லது வீட்டுக்காரர்கள் வெளியில் சென்றபின்னர் உணவில் மயக்க மருந்துகளை கலக்கின்றனரா அல்லது உணவுக்குள் நகைகளை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுகின்றனரா என்பதை ஊகிக்க முடியாமல் இருக்கின்றது.

பரம்பரை பரம்பரையாக வித்தியாசமான முறையில் திருட்டுக்கும் கொள்ளைக்கும் களமாக அமையும் காத்தான்குடி நகரை திருடர்களில் இருந்து பாதுகாப்பதற்கான திட்டமான நடவடிக்கையை நிரந்தரமாகச் செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.

இத்தனை காலமாக பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் கண்களில் விரலை குத்தி வேடிக்கை காட்டிவரும் அந்த பெரிய கள்ளன் யார்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s