டெல்லி: பொதுவாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் பெண்களுக்கு, கன்னித்தன்மையை சோதிக்க கை விரல்களை பயன்படுத்துவது டொக்டர்கள் வழக்கம். ஆனால் தற்போது இதற்கு தடை விதித்து வேறு விதமான முறைகளில் சோதனைகள் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நவீன யுகத்திலும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு நடத்தப்படும் சோதனைகள் பழமையான முறையிலேயே உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் கன்னித்திரை கிழிந்துள்ளதா என சோதனை செய்ய இரு விரல்களை டொக்டர்கள் பயன்படுத்துகின்றனர். டொக்டர்களின் இத்தகைய சோதனையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் உடல் ரீதியாகவும்இ மன ரீதியாகவும் கஷ்டமே ஏற்படுகிறது.
எனவே, இரு விரல் சோதனையை தடை செய்ய வேண்டும் எனறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து நீதிபதிகள் பி.எஸ். சவுகான் மற்றும் எம்.எம். கலிபுல்லா ஆகியோர் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், ‘பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் உண்மை நிலை மற்றும் கன்னித்தன்மையைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் இரு விரல் சோதனை சந்தேகமே இல்லாமல் அந்தப் பெண்ணின் தனித்தன்மைக்கும் உடலுக்கும் மனதிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
பெண்ணின் மரியாதையை சீர்குலைக்கும், அத்தகைய சோதனை கை விடப்பட வேண்டும். மருத்துவ அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் இது போன்ற முறையில் நடத்தப்படும் சோதனைகள் ஆய்வுகள், பாதிக்கப்பட்ட பெண்களின் துயரத்தை மேலும் தீவிரமாக்குகின்றன. சோதனை மற்றும் அதன் முடிவுகள் நேர்மறையாக இருந்தாலும் சோதனையால் அந்தப் பெண் அனுபவிக்கும் வேதனை அதிகமாகத் தான் இருக்கும். எனவே, மாற்று வழிகள் சோதனை முறைகளை பின்பற்றப்பட வேண்டும்.’என தெரிவித்தனர்.