1400 ஆண்டுகளுக்கு முன் நடந்த விண்ணுலகப் பயணம் ‘அல் மிஃராஜ்’

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

makkah-space[1]நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நடத்திக்காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’ எனும் அற்புதப் பிரயாணம். 1400 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கண்டுபிடிப்புகளுக்கே வாய்ப்பில்லாத காலத்தில், இன்று வரையென்ன, உலகம் அழியும்வரை, யாராலும் எப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்களாலும் செல்லவோ, சிந்திக்கவோ முடியாத தொலை தூரத்தை ஒரு நொடிப்பொழுதில் நடத்திக்காட்டிய அற்புதப் பயணம் தான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’.

‘இஸ்ராஃ’ என்பதின் பொருள்: இரவில் பிரயாணம் செய்வது என்பதாகும். அதாவது கஃபத்துல்லாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை சென்ற பிரயாணத்திற்கு சொல்லப்படும். இந்த சம்பவம் பற்றி திருமறை குர்ஆன், இவ்வாறு கூறுகின்றது.

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)

இப்பிரயாணம் பற்றி, பின்வரும் ஹதீது மிகவும் தெளிவுபடுத்துகின்றது.

‘மிஃராஜ்’ என்பதின் பொருள்: மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானத்தை முன்னோக்கி செய்த பிரயாணத்திற்கு சொல்லப்படும். இந்த சம்பவம் பற்றி குர்ஆனில் சொல்லப்படவில்லை. ஆனால் ஆதாரப்பூர்வமான பல ஹதீதுகள் அறிவிக்கின்றது. பின்வரும் புகாரியின் அறிவிப்பு அதை தெளிவு படுத்துகின்றது.

‘இஸ்ராஃ’  பிரயாணம்: புராக் என்னும், (கழுதையை விட பெரிதும் கோவேரு கழுதையை விட சிறிதான) பிராணியின் மீது ஜிப்ரயீல்(அலை) அவர்களின் உதவியோடு தரையில் நடந்தது. ‘மிஃராஜ்’  பிரயாணம்: ஜிப்ரயீல்(அலை) அவர்களுடன் வான் நோக்கி செய்த பிரயாணமாகும். இந்த இரண்டு பிரயாணம் பற்றியும் புகாரியில் வந்திருக்கும் பின்வரும் ஹதீதைப் பாருங்கள்.

நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டபிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறு கழுதையை விடச்சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான ‘புராக்’ என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி  கட்டளையிடப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான்  ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள், (என்) மகனும் இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக! என்று சொன்னார்கள்.

பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். ‘யார் அது?’ என்று வினவப்பட்டது. அவர் ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்க, உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘முஹம்மது’ என்று பதிலளித்தார்.’ (அவரை அழைத்து வரும்படி) கட்டளையிடப்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரகாட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் ‘சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்’ என்று சொன்னார்கள்.

நாங்கள் மூன்றாவது வானத்திற்கு சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி  கட்டளையிடப்பட்டுள்ளதா?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் யூசுஃப்(அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன் அவர்கள், சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள்.

நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி  கட்டளையிடப்பட்டுள்ளதா?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான்     இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன் அவர்கள், சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள்.

பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன் அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று வாழ்த்துச் சொன்னார்கள்.

நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான்      மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் கூறினேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று வாழ்த்துச் சொன்னார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள், ‘இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது…. நான்  இப்ராஹீம்(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் கூறினேன். அவர்கள் ‘மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று சொன்னார்கள்.

பிறகு, ‘அல் பைத்துல் மஃமூர்’ எனும் வளமான இறையில்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், ‘இதுதான், அல்பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகிவிடும்’ என்று சொன்னார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ‘ஹஜ்ர்’ எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர், ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான்   ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக்குறித்து கேட்டேன். அவர்கள்  ‘உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.

பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘என் மீது ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்கமாட்டார்கள். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்’ என்று சொன்னார்கள். நான் திரும்பிச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும்  (சென்று நான் கேட்க, இறைவன்  அதை) முப்பதாக (30) ஆக்கினான். மீண்டும் அதைப்போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக (20) ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் ஐந்தாக (5) ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘என்ன செய்தீர்கள்?’ என்று கேட்க, ‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்’ என்றேன். அதற்கு அவர்கள், ‘முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன்’ என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக) ‘நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்’ என்று அறிவிக்கப்பட்டது. (புகாரி) 3207

புகாரியின் இன்னும் ஒரு அறிவிப்பில்: ஒவ்வொரு முறையும், ஐந்து, ஐந்தாக குறைக்கப்பட்டதாக வந்திருக்கின்றது. இச்சம்பவத்தின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்:

1. அல்லாஹ்வின் வல்லமை எவ்வளவு விசாலமானது என்பதை தெரிந்து கொள்வதாகும்.

2. முஹம்மது(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு இது பெரும் சான்றாகும்.

3. தொழுகையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்கு இச்சம்பவம் பெரிதும் உதவுகின்றது. அதாவது ஒவ்வொரு வணக்கத்தையும், நபி(ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ் வஹீ மூலம் கடமையாக்கினான். ஆனால் தொழுகையை மாத்திரம் இவ்வளவு நீளமான பிரயாணத்தை ஏற்படுத்தி, தன் பக்கம் அழைத்து கடமையாக்கினான். இது தொழுகையின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.

இச்சம்பவத்தின் மூலம் நமது சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் அனாச்சாரங்கள்.

1. ‘மிஃராஜ்’ இரவை கொண்டாடுவது. அதாவது ரஜப் மாதத்தின் 27ம் இரவை ‘மிஃராஜ்’ சம்பவம் நடந்த இரவாக எண்ணி, அந்த இரவில் விஷேச வணக்கவழிபாடுகள், சிறப்புரைகள், நார்ஸா என்னும் பெயரில் உணவுப்பண்டங்கள் செய்து பங்கிடுவது இன்னும் இது போன்றவைகளில் ஈடுபடுவது.

2. ‘இஸ்ராஃ’ பிரயாணத்திற்காக நபி(ஸல்) அவர்களை ஏற்றிச் சென்ற, ‘புராக்’ என்ற பிராணியாக நினைத்து, இரண்டு இறக்கைகள் கொண்ட ஒரு குதிரையின் உருவப்படத்தை,  வீட்டில் தொங்க விடுவது. அதனால் வீட்டினுள் அதிக அருள் கொட்டும்? என்பது சிலரின் நம்பிக்கை.

மிஃராஜ் இரவும் அனாச்சாரங்களும்

அனாச்சாரங்களுக்கு குறைவே இல்லையென்று சொல்லுமளவிற்க்கு, மாதத்திற்கு மாதம், ஏதாவது பித்அத்துக்களையும் அனாச்சாசாரங்களையும் இஸ்லாமிய சமுதாயத்தில் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அவைகளையெல்லாம் நமது சமுதாயத்திடமிருந்து களைந்து, நமது இஸ்லாமிய சமுதாயத்தை, தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்ற வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில், தேவைப்படும் போது, மக்கள் மத்தியில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதில் சுவனப்பாதை தவறுவதில்லை. இந்த அடிப்படையில் ரஜப் மாதத்தில் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘மிஃராஜ்’ இரவு பற்றியும் அதன் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அனாச்சாரங்கள் பற்றியும் ஒரு சில வரிகளை குறிப்பிட விரும்புகிறேன். நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று, ‘இஸ்ராஃ, மற்றும் மிஃராஜ்’ என்ற சங்கைமிக்க இரு சம்பவங்களும் நடந்தது என்பதில் எள்முனையளவு கூட ஒரு முஸ்லிமுக்கு சந்தேகமில்லாத ஒன்றாகும். ஆனால் அவ்விரு சம்பவமும் நடந்தது எப்போது என்பது பற்றி தெளிவான எந்தக் குறிப்பும் இல்லை. சில வரலாற்றுக் குறிப்புகள்தான் அதுபற்றி  கூறியிருக்கின்றது. அதை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது என்பது முதல் விஷயமாகும்.

ஒரு வாதத்திற்கு, அந்த இரவை நாம் தெரிந்து கொண்டாலும், அந்த இரவை, மற்ற இரவுகளை விட சிறப்புமிக்க இரவாக எண்ணி அமல்களை அதிகம் செய்வதற்கும், இன்னும் பல வணக்கங்களில் ஈடுபடுவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இருக்கின்றதா? என்பது இரண்டாவது விஷயமாகும். ஒருநாளை மற்ற நாட்களைவிட, ஒரு மாதத்தை மற்ற மாதங்களைவிட, ஒரு இடத்தை மற்ற இடங்களைவிட சிறப்புக்குரியது என்று கூறுவதற்கும், அதில் செய்யப்படும் அமல்களுக்கும், மற்ற நாட்களில் மற்ற இடங்களில் செய்யப்படும் அமல்களைவிட அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவதற்கும் ஆதாரம் சமர்பிக்கப்பட வேண்டும் என்பது ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

உதாரணத்திற்கு ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு மற்ற நாட்களில் நோற்க்கும் நோன்பை விட அதிக நன்மைகள் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமளான் மாதம், மாதங்களில் சிறந்தது, அதில் செய்யப்படும் அமல்கள் மற்ற மாதங்களில் செய்யப்படும் அமல்களைவிட சிறந்தது என்று திருமறை குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீதும் அறிவிக்கின்றது, மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) தொழுதால் மற்ற பள்ளிகளை விட ஒரு இலட்சம் நன்மைகள் அதிகம் கிடைப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ருடைய இரவு ஆயிரம் மதங்களைவிட சிறந்தது என அல்லாஹ் திருமறையிலும் நபி(ஸல்) அவர்கள் பொன்மொழிகளிலும் கூறியருக்கின்றார்கள். ஒரு நாளையோ, ஒரு மாதத்தையோ, ஒரு இடத்தையோ, மற்ற நாட்களைவிட, மாதங்களைவிட, இடங்களைவிட,  சிறந்த நாள், மாதம், இடம் என்று சொல்வதற்கு அல்லாஹுவிற்கும் இன்னும் அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு மாத்திரம்தான் அதிகாரம் உண்டு என்பதும், ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில் ‘மிஃராஜ்’ நடந்த சம்பவம், மாதம், தேதி, அதில் அமல்கள் செய்வது, மற்ற நாட்களில் செய்யப்படும் அமல்களைவிட இத்தனை மடங்கு சிறந்தது என, குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீதிலோ கூறப்பட்டிருக்கின்றதா? இந்தக் கேள்விகளுக்கு விடை இருந்தால் மாத்திரம் ‘மிஃராஜ்’ இரவை கொண்டாடுங்கள், இல்லை என்றால், அப்படி ஒரு இரவை கொண்டாடுவது ‘பித்அத்’ என்னும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட மாபெரும் குற்றமாகும்.

மிஃராஜும் தொழுகையும்

தொழுகையைத் தவிர மற்ற எல்லா வணக்கங்களும், நபி(ஸல்) அவர்கள் பூமியில் இருக்கும் போதே கடமையாக்கப்பட்டது. ஆனால் தொழுகையோ, ஏழு வானங்களுக்கும் மேல் தனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை அழைத்து, முதலில் ஐம்பதாக கடமையாக்கி, பிறகு அதை பல தடவைகளில் குறைத்து, ஐந்தாக இலகுவாக்கப்பட்டது. இந்த ஹதீதை படித்த பின், இத்தொழுகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளங்க முடியும். ‘மிஃராஜ்’ இரவை கொண்டாட வேண்டும் என்று சொல்பவர்களில் பலர், தொழுகையில் பொடு போக்குச் செய்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே, ‘இஸ்ராஃ, மிஃராஜ்’ சம்பவத்தின் மூலம், அல்லாஹ்வின் வல்லமையையும், தொழுகையின் முக்கியத்துவத்தையும் விளங்கி, அல்லாஹுவிற்கு முற்றிலும் அஞ்சி, அவன் கடமையாக்கிய  தொழுகையை நிலைநாட்டி, மிஃராஜ் இரவாக, ஒரு இரவை ஏற்படுத்துவதை விட்டும், மற்றும் அவன் தடுத்தவைகள் அனைத்தையும் முற்றாக தவிர்ந்து, ஈருலக வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக!

– சுவனப்பாதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s