உலகமெல்லாம் வாழும் இந்துக்களும் பௌத்தர்களும் இன்று புதுவருட பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கடந்த முப்பது வருட காலமாக இந்நாட்டில் ஏற்பட்டிருந்த கொடிய யுத்தத்தில் இப்புத்தாண்டு காலங்களில் மாத்திரம் யுத்த நிறுத்த உடன்படிக்கை பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ சம்பந்தப்பட்ட இரு தரப்புக்குமிடையில் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவிட்டு, புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஒரே ஒரு வாரம் மாத்திரம் வழங்கப்பட்டு, இருள் சூழ்ந்திருந்த அக்காலத்தை இந்நாட்டில் வாழும் மூவின மக்களும் எளிதில் மறந்திட முடியாது!
ஒவ்வொரு இனங்களின் விசேட நாட்களில் குறிப்பாக பெருநாட்களில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் பத்திரிகைகளில் புன்முறுவல் உதிர்ந்த தங்களது புகைப்படங்களுடன் ஏதாவது ஓர் வாழ்த்துச் செய்தியை கடமைக்கு உதிர்ந்துவிட்டுப் போவோம் என்ற தொணியில் காலா காலம் ஏதோ ஒரு தலைப்பில் பெருநாள் கொண்டாடும் மக்களை தொட்டுச் செல்கின்றனரே தவிர, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டுவதற்கு முகம் கொடுக்க மறுத்துவிடுகின்றனர்!
எனினும் இநநாட்டில் போர் முடிந்து 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும், சிறுபான்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதும், உரிய தீர்வுகளை சிறுபான்மை மக்கள் கிடைக்கப்பெறாமல் இருப்பதும் கவலை தருகின்ற விடயமாகவே இருக்கின்றன.
சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் விரோதங்களை மறந்து தங்களது உரிமைகளுக்காக ஓரணியில் நின்றால் மாத்திரமே இந்நாட்டில் எங்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது கடந்தகால வரலாறுகள் எங்களுக்கு கற்பித்திருந்தன.
இந்நேரத்தில் உலகெங்கிலும் இருந்து எமது தளத்திற்கு வருகை தரும் எமது அன்பான தழிழ் வாசகர் சகோதரர்களுக்கும் மற்றும் சிங்கள சகோதரர்களுக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இயக்குனர் குழு
உங்கள் காத்தான்குடி
Leave a Reply