– மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ :
ஒரு முஸ்லிம் தன் காரியத்தில் வெற்றி பெறுவதற்கு இரண்டை செய்ய வேண்டும். முதலாவது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது, இரண்டாவது அந்த செயல் நிறைவேறுவதற்கான காரணத்தை செய்வது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் உரிய முறையில் பிரார்த்திப்பதோடு துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களையும், நிலைகளையும் பேணுவோமேயானால் நமது பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதில் ஐயமில்லை. அந்த நேரங்களும், நிலைகளும் பின்வருமாறு
1. லைலதுல் கத்ரின் இரவில் கேட்கப்படும் பிரார்த்தனை.
‘அல்லாஹ்வின் தூதரே! லைலதுல் கத்ரின் இரவை நான் அடைந்து கொண்டால் என்ன கூறவேண்டும் என கேட்டேன்
اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
அல்லாஹும்ம இன்னக அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃப அன்னீ’.
பொருள்: இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புபவன், என்னை மன்னிப்பாயாக!’
2. இரவின் நடுப்பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை.
இரவின் நடுப்பகுதி அல்லது (இரவில்) மூன்றில் இரண்டு பகுதி சென்றதற்கு பின் உயர்வு மிக்க அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கிக் கேட்கின்றான். ‘ கேட்கக்கூடியவர் இருக்கின்றாரா? கொடுக்கப்படும், பிரார்த்திப்பவர் இருக்கின்றாரா? அவருக்கு விடையளிக்கப்படும், பிழைபொறுப்பு கேட்பவர் இருக்கின்றாரா அவருடைய பாவம் மன்னிக்கப்படும் என்று சுப்ஹுடைய நேரம் வரும் வரை அல்லாஹ் கேட்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
3. ஐநேரத் தொழுகைக்குப் பின் (ஸலாம் கொடுப்பதற்கு முன்)
அல்லாஹ்வின் தூதரே! எந்த துஆ அல்லாஹ்விடத்தில் மிகவும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது என நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, இரவின் கடைசி நேரத்திலும் பர்ளான தொழுகைக்கு பின்னும் என்றார்கள். ஆதாரம்: திர்மிதி
ஹதீதில் பர்ளான தொழுகைக்கு பின் என்பதின் கருத்து, ஸலாம் கொடுப்பதற்கு முன்பா அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பின்பா என்பது பற்றி அறிஞர்கள் கூறும் கருத்து பின்வருமாறு
• இப்னு தைமிய்யா மற்றும் இப்னுல் கைய்யிம்(ரஹ்) அவர்களின் கருத்து, ஸலாம் கொடுப்பதற்கு முன்பு என்பதாகும்.
• ஸாலிஹ் பின் உதைமீன்(ரஹ்) அவர்களும் இந்தக் கருத்தையே கூறுகின்றார்கள். தொழுகைக்கு பின் துஆ ஓதவேண்டும் என்று வரும் ஹதீதுக்குரிய கருத்து, ஸலாம் கொடுப்பதற்கு முன்பு என்பதாகும். தொழுகைக்கு பின் திக்ர் ஓதவேண்டும் என்று வரும் ஹதீதுக்குரிய கருத்து ஸலாம் கொடுத்ததற்கு பின்பு என்பதாகும் எனக் கூறுகின்றார்கள்.
4. அதான் இகாமத்துக்கு இடையில் செய்யப்படும் பிரார்த்தனை.
‘அதானுக்கும் இகாமத்துக்குமிடையில் செய்யப்படும் துஆ தட்டப்படமாட்டாது’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி
5. பர்ளான தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் போதும் யுத்த களத்தில் போர் மூழும்போதும் செய்யப்படும் பிரார்த்தனை.
‘இரண்டு பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது அல்லது குறைவாகவே தட்டப்படும். தொழுகைக்காக அழைப்பு கொடுக்கப்படும் போதும் போர்களத்தில் சிலர் சிலருடன் சண்டை போட்டுக் கொள்ளும் போதும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: அபூதாவூத்
6. மழை பொழியும் போது செய்யப்படும் பிரார்த்தனை.
‘இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படமாட்டாது, தொழுகைக்காக பாங்கு சொல்லப்படும் போதும் மழை பொழியும் போது கேட்கப்படும் பிரார்த்தனையும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: அபூதாவூத்
7. இரவில் ஒரு நேரம்.
‘இரவில் ஒரு நேரம் இருக்கின்றது அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் உலகம் மற்றும் மறுமையின் நலவை கேட்டால் அல்லாஹ் அதை அவனுக்கு கொடுக்காமலில்லை, இது ஒவ்வொரு இரவிலும் இருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: முஸ்லிம்
8. வெள்ளிக் கிழமையில் கேட்கப்படும் பிரார்த்தனை.
‘வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியான் தொழுத நிலையில் அல்லாஹ்விடத்தில் எதைக் கேட்டாலும் அதை அவன் கொடுக்காமல் இருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
9. சுஜுதில் செய்யப்படும் பிரார்த்தனை.
‘ஒரு அடியான் அவனுடைய இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரம் அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில் ) அதிகம் துஆச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
10. சேவல் கூவும் சப்தத்தை கேட்கும் போது செய்யப்படும் பிரார்த்தனை.
‘சேவல் கூவும் சப்தத்தை நீங்கள் கேட்டால் அல்லாஹ்விடம் அவனின் அருளை கேளுங்கள் நிச்சயமாக அந்தச் சேவல் ஒரு மலக்கை கண்டிருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
என்னும் திக்ரை ஓதிய பின் செய்யப்படும் பிரார்த்தனை.’
‘மீனுடைய நபி (யூனுஸ் -அலை-) அவர்கள் மீனுடைய வயிற்றினுள் இருந்த நேரத்தில் அவர் செய்த பிரார்த்தனை’
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
என்பதை கூறி எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தித்தால், அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
இன்னும் (நினைவு கூர்வீராக) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து ”உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 21:87)
இந்த ஆயத்திற்கு விளக்கமளிக்கும் போது குர்துபி (ரஹ்) அவர்கள் அவர்களுடைய ‘அல்ஜாமிஉ லிஅஹ்காமில் குர்ஆன்’ எனும் தப்ஸீரில் கூறுகின்றார்கள், யூனுஸ் நபியின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்று அவர்களை பாதுகாத்தது போன்று, இவ்வார்த்தையை கொண்டு பிரார்த்திப்பதை, ஒருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனையாக அல்லாஹ் கூறுகின்றான்’ என்று கூறியுள்ளார்கள். (தப்ஸீருல் குர்துபி 11-334)
11. ஏதாவது ஒரு துன்பம் ஏற்படும் போது செய்யப்படும் பிரார்த்தனை.
நான் நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கின்றேன். எந்த ஓர் அடியாருக்காவது ஒரு சோதனை ஏற்பட்டு, அவர்
إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اَللَّهُمَّ اؤْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ هَذِهِ وَاخْـلُفْ لِيْ خَيْراً مِنْهَا
”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஉஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ ஹாதிஹி வக்லுஃப் லீ கைரன் மின்ஹா’
பொருள்: (நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள், நிச்சயமாக நாங்கள் அவன் பக்கமாகவே மீளுபவர்களாக உள்ளோம். யா அல்லாஹ்! என்னுடைய சோதனையில் எனக்கு நற்கூலியை தந்தருள்வாயாக! அதைவிடச் சிறந்ததை எனக்குப் பகரமாக்கித் தந்தருள்வாயாக!) என்று கூறுவாரேயானால், அல்லாஹ் அவருக்கு அவரின் சோதனையின் விஷயத்தில் நற்கூலியை வழங்கி, மேலும் அதைவிடச் சிறந்ததை அவருக்குப் பகரமாக்கித் தருவதை தவிர வேறில்லை.
உம்மு ஸலமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள், அபூ ஸலமா(ரலி) மரணம் அடைந்ததும், நபி(ஸல்) அவர்கள் கூறிய இந்த துஆவைக் நான் கூறினேன். அதனை ஏற்று அல்லாஹ் எனக்கு அவரை விடச் சிறந்தவர்களாக நபி(ஸல்) அவர்களை கணவராக ஆக்கித் தந்தான். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்:முஸ்லிம்.
12. ஒருவரின் உயிர் கைப்பற்றப்பட்டதற்கு பிறகு மனிதர்கள் செய்யும் பிரார்த்தனை
நபி(ஸல்) அவர்கள் அபூ ஸலமா(ரலி) அவர்களிடம் சென்றிருந்த போது அவருடைய பார்வை (கண்) திறந்திருந்ததை பார்த்த நபி(ஸல்) அவர்கள், அவர்களின் கண்ணை மூடிக்கொண்டு, நிச்சயமாக உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை உயிரை பின்தொடருகின்றது என்றார்கள், அப்போது அவர்களின் குடுப்பத்தினர்கள் ஓலமிட்டார்கள், நல்லதைக்கொண்டே தவிர உங்கள் மீது நீங்கள் பிரார்த்திக்க வேண்டாம் காரணம் நீங்கள் கூறுவதற்கு மலக்குகள் ஆமீன் கூறுகின்றார்கள். ஆதாரம்: முஸ்லிம்
அபூ ஸலமா(ரலி) அவர்கள் மரணம் அடைந்த பொழுது நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். அவரின் கண்கள் திறந்து இருந்தன. அவரின் கண்களை நபி(ஸல்) அவர்கள் மூடினார்கள், பிறகு கூறினார்கள், ”நிச்சயமாக உயிர் கைப்பற்றப்பட்டு விட்டால் அவரின் பார்வையும் உயிரை பின்தொடருகின்றது. (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடிவிடுங்கள்) அப்பொழுது அபூஸலமாவின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கதறி அழுதார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் அவர்களை நோக்கிக் கூறினார்கள், நன்மையைக் கொண்டே தவிர நீங்கள் உங்களுக்கு துஆச் செய்யாதீர்கள். நிச்சயமாக மலக்குகள் நீங்கள் சொல்லக் கூடியவைகளுக்கு ஆமீன் கூறுகிறார்கள்”. பின்பு நபி(ஸல்) அவர்கள்,
اَللَّهُمَّ اغْفِرْ لِأَبِي سَلَمَةَ، وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّيْنَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَارَبَّ الْعَالَمِيْنَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيْهِ
”அல்லாஹும்மஃபிர் லி அபீ ஸலமா, வர்பஃ தரஜதஹுஃபில் மஹ்திய்யீன், வக்லுஃப்ஹு ஃபீ அகிபிஹீ பில்ஃஹாபிரீன், வஃபிர்லனா வலஹுயாரப்பல் ஆலமீன் வஃப்ஸஹ் லஹுஃபீ கப்ரிஹி வ நவ்விர்லஹு ஃபீஹி”
பொருள்: இறைவா! அபூஸலமாவின் பிழைகளைப் பொறுப்பாயாக! நேர்வழி பெற்றவர்களின் (அந்தஸ்தில்) அவரின் அந்தஸ்தை உயர்த்துவாயாக! அவரின் வாரிசுகளுக்கு நீயே சிறந்த பிரதிநிதியாக இருப்பாயாக! அகிலங்களின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் பிழை பொறுப்பாயாக! அவரின் மண்ணறையை விஸ்தீரணமாக்கி வைப்பாயாக! அவரின் மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பாயாக! என அவருக்காக துஆச் செய்தார்கள். ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி)
13. நோயாளியிடம் செய்யப்படும் பிரார்த்தனை.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் நோயாளியிடமோ, அல்லது மரணித்தவரிடமோ சென்றால் நன்மையானவைகளைக் கூறுங்கள். (நல்ல துஆக்களைச் செய்யுங்கள்) நிச்சயமாக மலக்குகள் நீங்கள் கூறுவதின் மீது ஆமீன் சொல்கிறார்கள். உம்மு ஸலமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அபூ ஸலமா(ரலி) அவர்கள் மரணம் அடைந்ததும், நான் நபியவர்களிடம் சென்று அபூஸலமாவின் மரணச் செய்தியைக் கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்.
اَلَّلهُمَّ اغْفِرْلِيْ وَلَهُ، وَأَعْقِبْنِيْ مِنْهُ عُقْبًى حَسَنَةً
”அல்லாஹும்மஃபிர்லீ வலஹு, வஅஃகிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன்” பொருள்: இறைவா! எனக்கும் அவருக்கும் பிழை பொறுப்பாயாக! எனக்கு அவரை விட அழகிய பகரத்தை ஏற்படுத்துவாயாக! என நீர் துஆச் செய்வீராக எனக் கூறினார்கள். நான் அவ்வாறு துஆச் செய்தேன். பின்னர் அவருக்கு பகரமாக அவரை விடச் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்கு கணவராக ஏற்படுத்தித் தந்தான். ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி)
14. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை
‘அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை பயந்து கொள்ளுங்கள், காரணம் அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் திரையில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ ஆதாரம்: அஹ்மத்
‘அநியாயம் செய்யப்பட்டவன் கெட்டவனாக இருந்தாலும் அவனுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும், அவனுடைய பாவம் அவனோடு சேர்ந்தது’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத்
15. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்யும் பிரார்த்தனை
‘மூன்று பேருடைய பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது, பெற்றோர் தன் பிள்ளைக்கு செய்யும் பிரார்த்தனை, நோன்பாளி மற்றும் பிரயாணியின் பிரார்த்தனை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: பைஹகி
16. பெற்றோர்கள் தன் பிள்ளைக்கு செய்யும் சாபம்
மூன்று பிரார்த்தனைகள் எந்த சந்தேகமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும், அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை, பிரயாணியின் பிரார்த்தனை, பெற்றோர் தன் பிள்ளைக்கு செய்யும் சாபம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
17. ஸாலிஹான குழந்தை தன் பெற்றோர்களுக்கு செய்யும் பிரார்த்தனை
‘ஆதமுடைய மகன் மரணித்தால் அவனுடைய அமல்களில் மூன்றைத்தவிர (மற்ற அனைத்து அமல்களும்) துண்டித்து விடும். நிரந்தர தர்மம், அவருக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான குழந்தை, பயனுள்ள கல்வி என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ ஆதாரம்: முஸ்லிம்
18. சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து லுஹர் தொழுவதற்கு முன் செய்யப்படும் பிரார்த்தனை
‘நபி(ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததற்கு பின் லுஹர் தொழுவதற்கு முன் நான்கு ரக்அத் சுன்னத் தொழுதுவிட்டு, இது வானத்தின் கதவுகள் திறக்கப்படும் நேரமாகும், இந்த நேரத்தில் எனது அமல் உயர்த்தப்படுவதை நான் எனது எனது எனது அமல் உயர்த்தப்படுவதை நான் விரும்புகின்றேன் என கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
19. இரவில் தூக்கத்திலிருந்து விழித்து செய்யும் பிரார்த்தனை
யாராவது இரவில் விழித்தெழுந்து
سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ، اَللهُ اَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ
என்று கூறி, அதன் பின்
‘اللَّهُمَّ اغْفِرْ لِيْ
என்று கூறினால் அல்லது ஏதாவது பிரார்த்தனை செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும், அவர் உளு செய்து தொழுதால் அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
20. ஒரு முஸ்லிம் சகோதரருக்காக மறைமுகமாக கேட்கப்படும் பிரார்த்தனை
‘ஒரு முஸ்லிம், தன் சகோதரருக்காக மறைமுகமாக செய்யும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும், அவருடைய தலைப்பக்கம் அதற்காக சாட்டப்பட்ட ஒரு மலக்கு நின்று கொண்டு தன் சகோதருக்காக நலவானதைக் கொண்டு அவர் பிரார்த்திற்கும் போதெல்லாம், ஆமீன் (அல்லாஹ் இந்த துஆவை ஏற்றுக் கொள்வானாக) என்று கூறுகின்றார், இன்னும் உனக்கும் இவ்வாறு கிடைக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
21. நீதியான அரசன் செய்யும் பிரார்த்தனை
‘மூன்று பேர் செய்யும் பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது, நோன்பாளி நோன்பு திறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை, நீதியான அரசனின் பிரார்த்தனை, அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை (இம்மூவரின் பிரார்த்தனையையும்) அல்லாஹ் மேகத்திற்கு மேல் உயர்த்தி வானத்தின் வாசல்களை திறந்து, என் கண்ணியத்தின் மீது ஆணையாக (இப்போது இல்லாவிட்டாலும்) பிறகாவது நிச்சயம் நான் உனக்கு உதவி செய்வேன் என இறைவன் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
22. பிரயாணி பிரயாணத்தின் போது செய்யும் பிரார்த்தனை
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதர்களே! அல்லாஹ் தூய்மையானவன் தூய்மையில்லாதவைகளை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். தூதர்களுக்கு ஏவியதையே இறை விசுவாசிகளுக்கும் ஏவியிருக்கின்றான் (என்று கூறிவிட்டு பின்வரும் ஆயத்தை கூறினார்கள்) (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள், நல்ல காரியத்தையும் செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன் (அல்குர்ஆன் 23:51) இன்னும் விசுவாசங்கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்ததில் நல்லவற்றை உண்ணுங்கள் (அல்குர்ஆன் 2:172) என்ற வசனத்தை கூறிவிட்டு, புழுதிபடிந்த நிலையில் பரட்டைத்தலையுடன் நீளமான பிரயாணம் செய்யும் ஒரு மனிதர் தன் இரு கைகளையும் வானத்தின் பக்கம் உயர்த்தி என் இறைவா! என் இறைவா! என்று (பிரார்த்திக்கின்றார்) அவர் உண்பதும் ஹராம், அவர் குடிப்பதும் ஹராம், அவர் அணிவதும் ஹராம், அவர் ஹராத்தைக் கொண்டே வளர்க்கப்பட்டிருக்கின்றார் அவருடைய பிரார்த்தனை எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்கள். ஆதாரம்: முஸ்லிம்.
– சுவனப்பாதை