சென்னை: 1989-90 காலப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி திடீரென விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையை மேற்கொண்டது ஏன் என்று கண்டறிவதில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருந்தது என்பதை விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுடனான கருணாநிதியின் உறவு சீரற்றதாகத்தான் இருந்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை கருணாநிதி மேற்கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் குறிப்பாக 1989ம் ஆண்டு டிசம்பர் முதல், குறிப்பாக கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.
கருணாநிதியின் இந்த நடவடிக்கைகளுக்கான காரணம் குறித்து திமுகவினர் திருப்தி அளிக்கக் கூடியவகையில் பதில் அளிக்கவில்லை. தமிழீழத்தை ஆதரிக்கும் தீவிர ஆதரவாளராக கருணாநிதி மாறுவதன் மூலம் டெல்லியுடனான உறவுப் பாலத்தைக் கூட அவர் முறித்துக் கொள்ள நேரிடுமோ என்றும் கருதப்படுகிறது.தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக திடீரென கருணாநிதி மாறியிருப்பதன் மூலம் தமிழகத்தில் அரசியல் சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் கடத்திய பின்னரும் கூட இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட்ட மீனவர்களைப் பாதுகாக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளை கேட்டுக் கொள்கிறார் கருணாநிதி.
இதேபோல் தமிழகத்தில் இதர போராளிக் குழுக்களுடன் தமிழீழ அகதிகள் இணைந்து செயல்படுவதையும் கருணாநிதி தடுக்கிறார். மார்ச் 25ம் தேதி சென்னைக்கு வந்த அமைதிப் படையை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் மறுத்துவிட்டார். இவை அனைத்துமே கருணாநிதியின் தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையைத்தான் வெளிப்படுத்துவதாகவே கருதப்படுகிறது.
இந்த விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. இந்திரா காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களும் அவர்களது கூட்டணிக் கட்சியான அனைத்திந்திய அதிமுகவினரும் அமைதிப் படையை வரவேற்காத கருணாநிதியின் தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதிலளித்த கருணாநிதி அமைதிப் படையைப் பற்றி விமர்சிக்கிறார். இதனால் காங்கிரஸ், அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்கின்றனர்.தமிழக ஊடகங்களும் பொதுவாக கருணாநிதியின் அமைதிப் படை பற்றிய கருத்தை விமர்சித்தன. திமுகவின் கூட்டணிக் கட்சியான சிபிஐ(எம்) எம்.எல்.ஏ ரமணியும் கூட, இந்திய ராணுவத்தைக் கருணாநிதி அவமதித்துவிட்டார் என்று கூறினார்.
1989 ஜனவரியில் டெல்லியில் ராஜிவ் காந்தியை பலமுறை சந்தித்து இலங்கை விவகாரத்தில் பிரதமர் ராஜிவ் காந்தியின் நிலைப்பாட்டை விமர்சித்திருக்கிறார் கருணாநிதி. தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்ததும் மார்ச் 31ம் தேதி அமைதிப்படை விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த 3 மாதங்களில் அமைதிப்படையை இலங்கையில் இருந்து விலக்குவது தொடர்பான பல பேச்சுக்களை அவர் மத்திய அரசுடன் நடத்தியிருக்கிறார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் கருணாநிதியின் நேசத்துக்குரிய தமிழ்ப் போராளிக் குழுவாக இருந்ததில்லை. ஏனெனில் கருணாநிதியின் அரசியல் எதிரியாக இருந்த மறைந்த எம்.ஜி.ஆருடன்தான் அவர்கள் மிக நெருக்கமாக இருந்தனர்.
ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலைப் புலிகளுக்கும் கருணாநிதிக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆன்டன் பாலசிங்கம்- -கருணாநிதி இடையேயான பேச்சுவார்த்தை முக்கியமானது. இதைத் தொடர்ந்தே விடுதலைப் புலிகளுடனான கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டு அவர்களுடன் இணைந்து ஒரு இணக்கமான அரசியல் சூழலை உருவாக்க கருணாநிதி முயற்சி மேற்கொண்டார்.இதனால் இலங்கையின் வடகிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் உள்ளிட்ட ஈபிஆர்எல்எப் தலைவர்கள் பலரும் கருணாநிதியின் பாரபட்சம் குறித்து இந்திய அரசிடம் புகாரும் செய்திருக்கின்றனர்.
மிக முக்கியமாக பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில்தான் திமுகவின் நிலைப்பாடு அப்படியே மாறிப்போனது. கருணாநிதியின் மருமகனும் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன், விடுதலைப் புலிகளின் வீரத்தைப் பாராட்டி அமைதிப்படைக்கு எதிரான போர் நடவடிக்கைகளைப் பாராட்டி தீர்மானத்தை வாசித்தார்.
கருணாநிதியின் இந்த விடுதலைப் புலிகள் திடீர் ஆதரவு நிலைப்பாட்டுக்கு என்ன காரணம் என்பது புதிராகவேத்தான் இருந்தது. திமுகவினர் கூட இதற்கான காரணத்தை அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டனர். மேலும் இதுபற்றித்தான் டீக்கடைகளிலும் பத்திரிகை அலுவலகங்களிலும் கட்சி தலைமையகத்திலும் விவாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
கருணாநிதியின் முற்று முழுதான புலிகள் ஆதரவு நடவடிக்கை என்பது பலரது புருவத்தையும் உயர்த்தவே வைத்தது.இதற்கு மிகவும் நம்பகமான ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்காவிட்டால் தமிழகத்தில் தீவிரவாத வன்முறைச் செயல்களை கட்டவிழ்த்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தச் செய்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருணாநிதியை மிரட்டினர் என்பதுதான் அது என்று அமெரிக்க தூதரகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
(OIT)