– ரைஸ்

கிண்ணியா: ‘கிண்ணியாவில் மறைந்து போன கலாசாரச் சுவடுகள்’ நூல் வெளியீடு நேற்று கிண்ணியா பொது நுலக கேட்போர் கூடத்தில் கிண்ணியா பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.முஸம்மில் தலைமையில் நேற்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி வருகை தந்திருந்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசம் மிக மிக முக்கிய இடத்தை வகிக்கும் நகரமாக காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 350 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது கிண்ணியாவின் வரலாறு. கடல் தொழிலை வாழ்வாதார தொழிலுக்காக பெரியாற்று முனையை தேர்ந்தெடுத்து, நம் முன்னோர்கள் குடியேறியதாக ஒரு வரலாறு சொல்கின்ற போது இன்னுமொரு வரலாறு ஜாவா இனத்தவர் வந்து குடியேறியதாகவும் சொல்கிறது.

எது எவ்வாறிருப்பினும் நமது முன்னோர்கள் கிண்ணியாவில் குடியேறி இற்றைக்கு 350 வருடங்களுக்கு முற்பட்டதென சொல்வதாக வைத்துக்கொண்டாலும் இற்றை வரைக்கும் நாம் பாதுகாக்கும் அளவுக்கு முழுமை பெற்ற கிண்ணியாவின் வரலாறு சொல்லும் நூல் இல்லாத ஒரு குறை இருந்து கொண்டே வருகின்றது.
ஆனால் கொஞ்சமாக வரலாற்றை ஞாபகப்படுத்தும் வகையில் அமைந்த புத்தகம் ‘கிண்ணியாவில் மறைந்து போன கலாசாரச் சுவடுகள்’ எனும் தலைப்பில் இற்றைக்கும் அழியாது பாதுகாக்கவேண்டிய எமது சில சொத்துக்களை ஞாபகப்படுத்தும் வகையில் புத்தகமாக தந்திருக்கின்றார் ஓய்வு பெற்றும் பெறாமலிருக்கும் அதிபர் எஸ்.ஏ. முத்தலி ஆசிரியர் அவர்கள்.

இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் கிண்ணியாவின் வரலாற்றை தாம் அறிந்து தெரிந்ததை வைத்து உரைகளை நிகழ்த்தியதோடு புத்தக ஆசிரியரின் கல்விப் பயணத்தில் ஆற்றிய சேவைகளையும் ஞாபகப்படுத்தினார்கள். நிகழ்வின் இறுதியில் புத்தகமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வுக்கு கிண்ணியா நகரபிதா எம்.எம்.ஹில்மி, வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, முன்னால் மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ.எம். மஹ்ரூப், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவரகள் என பலரும் கலந்து கொண்டனர்.

