ஆயிஷா(ரலி) அவர்களின் சிறப்புகள்

– மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ :

நபித்தோழர்களை அல்லாஹ் தன் தூதருக்கு துணையாக தேர்ந்தெடுத்தான். அவர்கள் பற்றி இஸ்லாமிய விசமிகளால் சில விமர்சனங்கள் கூறப்பட்டிருப்பதை யாவரும் அறிவோம். அதிலும் குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பற்றி. உத்தம நபிக்கு உத்தமிகளையே அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை குறை கூறி நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு இழுக்கை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாகும். அல்லாஹ் அதிலிருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாத்துவிட்டான். திருமறையும் நபி மொழிகளும் அன்னை பற்றி கூறும் சில தவகல்கள்.

1. எல்லா பெண்களை விடவும் ஆயிஷா(ரலி) அவர்கள் சிறந்தவர்கள்

”தரீத் என்னும் உணவு மற்ற உணவுகளை விட சிறப்பாக இருப்பது போன்று மற்ற பெண்களைவிட ஆயிஷா(ரலி) அவர்கள் சிறப்பானவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” (திர்மிதி)

2. நபி(ஸல்) அவர்களிடம் மனிதர்களில் மிகவும் விருப்பமானவர்கள்.

” மனிதர்களில் உங்களிடம் மிகவும் விருப்பமானவர்கள் யார்? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, ஆயிஷா(ரலி) எனக்கூறினார்கள், ஆண்களில் யார் எனக்கேட்கப்பட்டது, அவர்களின் தந்தை என்றார்கள் ” (புகாரி)

3. உலகிலும் மறுமையிலும் நபி (ஸல்) அவர்களின் மனைவியாவார்கள்.

” பச்சை நிற பட்டுத்துணியில் ஆயிஷா (ரலி) அவர்களின் உருவத்தை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, இவர் உலகத்திலும் மறுமையிலும் உங்களின் மனைவியாவார் என்றார்கள் ” (திர்மிதி)

4. நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரையும் கன்னியராக திருமணம் செய்யவில்லை.

” கடைசியாக நோயுற்றிருந்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் தங்கியிருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மற்ற மனைவிமார்களிடம் அனுமதிகோரினார்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் மடியிலேயே அவர்களின் உயிர் பிரிந்தது. இது அவர்கள் மீது நபி (ஸல்) அவர்கள் வைத்திருந்த பேரன்பை வெளிப்படுத்துகின்றது ”

5. நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் தவிர வேறு எந்த மனைவியுடனும் தன் போர்வைக்குள் இருந்த போது, வஹீ இறங்கியதில்லை.

” அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆயிஷா (ரலி) அவர்கள் தவிர, உங்களில் எந்த பெண்ணுடனும் (மனைவியுடனும்) போர்வைக்குள் இருக்கும் போது வஹீ என்மீது இறங்கவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

6. மற்ற மனைவியரை விட அதிகம் ஹதீதுகளை அறிவித்தவர்கள்.

” ஆயிஷா (ரலி) அவர்கள், கிட்டத்தட்ட 2500 ஹதீதுகளை அறிவித்திருக்கின்றார்கள் ”

7. ஒட்டுமொத்த பெண்களிலேயே பெரும் மார்க்க மேதை.

” பெரும் நபித்தோழர்கள் உட்பட தங்களுக்கு எழும் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வார்கள், இவ்வாறு இந்த உம்மத்தில் எந்தப் பெண்ணும் இருந்ததில்லை, இனிமேல் வரவும் முடியாது”

8. அல்லாஹ் தன் திருமறையில் தூய்மைப் படுத்திக் கூறிய உத்தமி.

பின் வரும் அனைத்து வசனங்களும் ஆயிஷா (ரலி) அவர்களை தூய்மை படுத்தும் விஷயத்தில் இறங்கிய வசனங்களே.

எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் – இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, ”இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா? அ(ப்பழி சமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள். இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச்சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும். இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள், இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும். இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, ”இதைப் பற்றி நாம் பேசவது நமக்கு(த் தகுதி) இல்லை (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா? நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான். மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன். எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையயோனாகவும் இருக்கின்றான். ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள், இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது – எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் – மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும் அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன், அன்பு மிக்கவன் எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும். அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ் தான் ”பிரத்தியட்சமான உண்மை(யாளன்) என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு. 24:11-26

9. தயமுத்தின் வசனம் இறங்குவதற்கும் ஆயிஷா அவர்களே காரணம்.

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பிரயாணத்தில் வெளியாகிச் சென்றிருந்தோம். பைதா என்னுமிடத்தில் என்னுடைய மாலை (அறுந்து) விழுந்து விட்டது. நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த அவர்களின் தோழர்களும் அதை தேடுவதில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த இடத்திலும் தண்ணீர் இருக்கவில்லை மக்களிடத்திலும் தண்ணீர் இருக்கவில்லை. நபித்தோழர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து (உங்களின் மகள்) ஆயிஷா (ரலி) அவர்கள் செய்ததை நீங்கள் பார்க்கவில்லையா? நபி (ஸல்) அவர்கள் என்னுடைய தொடையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது (என் தந்தை) அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னிடத்தில் வந்து என்னை எச்சரித்தார்கள். அவர்கள் சொல்வதற்கு அல்லாஹ் நாடியிருந்ததையெல்லாம் சொன்னார்கள். அவர்களுடைய கையினால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் தூங்கிக் கொண்டிருந்த காரணத்தினால் என்னால் அசைய முடியவில்லை, சுப்ஹுடைய நேரம் வரும் வரைக்கும் நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் இல்லாமலேயே தூங்கினார்கள். (அப்போது) அல்லாஹுத்தஆலா தயமும் உடைய ஆயத்தை இறக்கி வைத்தான். ஸைத் இப்னு ஹுலைர் என்னும் நபித்தோழர் கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் குடும்பமே! உங்கள் மூலம் கிடைத்த அல்லாஹ்வின் அருள்களில் இது முதலாவதான அருளல்ல. (உங்களால் இந்த சமூகத்துக்கு அதிக அருள்கள் கிடைத்திருக்கின்றது) நாங்கள் பிரயாணம் செய்து வந்த ஒட்டகத்தை எழுப்பினோம் அதன் கீழ்தான் என்னுடைய மாலையை பெற்றுக்கொண்டோம் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்விடத்திலும் அவனின் தூதரிடத்திலும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இருக்கும் இவ்வளவு சிறப்புக்களை அறிந்த பின்பும் அந்த உத்தமியை, முஃமின்களின் தாயை மதிக்காமல் அவர்கள் விடயத்தில் களங்கம் விளைவிப்பது மார்கத்தையும் நபி (ஸல்) அவர்களையும் களங்கம் விளைவிப்பதாகும்.

ஒவ்வொரு முஸ்லிமும் ஆயிஷா (ரலி) அவர்கள் ஓர் உத்தமி என்றும் பரிசுத்தமானவர்கள் என்றும் நம்புவது கட்டாயக் கடமையாகும். யாராவது ஆயிஷா (ரலி) அவர்கள் விடயத்தில் இதற்கு மாற்றமான நம்பிக்கை வைத்திருந்தால் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியாகிவிடுவான். காரணம் அவன் பல திருமறை வசனங்களையும் நபிமொழிகளையும் மறுத்தவனாவான். இப்படிப்படட மாபாதகச் செயல்களைவிட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக!

-சுவனப்பாதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s